திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவி, உறவினர் வீட்டிற்கு செல்வதாக கூறி வெளியே சென்றார். திருச்சி சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்த மாணவியிடம், இளைஞர் ஒருவர் தன்னுடைய காதலை கூறினார். இதற்கு மாணவி மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த இளைஞர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியை சரமாரியாக குத்தி விட்டு தப்பி சென்றார். அலறல் சத்தம் கேட்டு வந்த அப்பகுதியினர், படுகாயமடைந்த மாணவியை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கத்தியால் குத்தியவர் பொத்தமேட்டுப்பட்டியை சேர்ந்த கேசவன் என்பதும், ஏற்கனவே மாணவியை கடத்திச் சென்றது தொடர்பான வழக்கு திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதும் தெரியவந்தது. இதையடுத்து தப்பி சென்ற இளைஞரை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், கீழ பூசரிப்பட்டி அருகே ரயில்வே தண்டவாளத்தில் இளைஞர் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடைப்பதாக கிடைத்த தகவலின்பேரில் திருச்சி ரயில்வே போலீசார் மற்றும் மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது உயிரிழந்தவர் கேசவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.