தமிழ்த் திரையுலகில் தனக்கென தனியிடத்தைப் பிடித்த நடிகர் விஜய், 'அரசியலிலும் ஒரு கை பார்த்துவிடுகிறேன்' என்று 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற அடையாளத்தோடு களத்தில் குதித்தார். கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தனது பார்ட்டி-யை லான்ச் செய்த விஜய், தனது கடைசி படத்தின் ஷூட்டிங்கிற்கு சென்றாலும், ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலம் தனது அரசியலை மேற்கொண்டு வருகிறார். அவரது ஒவ்வொரு நகர்வும் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
வீட்டில் இருந்தே அரசியல்
விஜய் குறித்து எதிர்க்கட்சிகள் மற்றும் சில அரசியல் விமர்சகர்கள் அடிக்கடி கூறும் குற்றச்சாட்டு, "அவர் வீட்டில் இருந்தே அரசியல் செய்கிறார்" என்பதே. இந்த விமர்சனத்தை அவர் சீரியஸாக எடுத்துக் கொள்ளாவிட்டாலும், 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி தனது அரசியல் நகர்வுகளை மிக மிக கவனமாக மேற்கொண்டு வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் ஆகியோர் தவெக-வில் இணைந்தனர். குறிப்பாக, கடந்த சில நாட்களுக்கு முன்னர் முன்னாள் தேர்தல் வியூக அமைப்பாளர் பிரசாந்த் கிஷோர் விஜய்யை சந்தித்தது நேஷ்னல் லெவலில் பேசுபொருளாக மாறியது. இது திமுக உள்ளிட்ட கட்சிகளையே , 'என்னப்பா நடக்குது அங்க' மோடுக்கு கொண்டுச் சென்றது.
இந்த நிலையில், தமிழக முஸ்லிம் லீக் (TMM) கட்சியின் தலைவர் முஸ்தபா இன்று தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பொதுச் செயலாளர் ஆனந்ந் மற்றும் ஆதவ் அர்ஜூனா ஆகியோரை நேரில் சந்தித்து, தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளார். இதன் மூலம், தனது முதல் கூட்டணியை விஜய் உறுதி செய்துள்ளார்.
தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டிலேயே, கூட்டணி அரசுக்கு தயார் என கூறினாலும், பல அரசியல் கட்சிகளுடன் பேச்சுக்கள் நடந்தும், அவற்றில் முடிவுகள் ஏதும் எட்டப்படாமல் இருந்தது. இந்நிலையில், தமிழக முஸ்லிம் லீக் விஜய் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து, எதிர்கால அரசியல் களத்தில் புதிய கவனத்தை ஈர்த்துள்ளது.
ஒரு இஸ்லாமிய கட்சியை தனது முதல் கூட்டணி கட்சியாக சேர்த்து, 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் எனும் யுத்த களத்தில், தனது முதல் அடியை எடுத்து வைத்துள்ளார். இனி என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.