கோவை கணியூர் அருகே சேடர்பாளையம் கிராமத்தில் உள்ள பட்டத்தரசி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் ‘வீ தி லீடர்ஸ்’ இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். இவருக்கு அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
விழாவிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, கள்ளக்குறிச்சி தவெக MLA-வின் மீதான மாவட்ட ஆட்சியரின் புகார் குறித்து பேசியிருந்தார். அவர் பேசியதாவது, “கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் விவகாரம் ஒரு பெரிய மர்ம புதிராக தொடர்ந்து கொண்டிருக்கிறது. அரசு நிகழ்ச்சிகளில் கள்ளக்குறிச்சி கலெக்டர் பங்கேற்காமல் இருப்பதை பார்க்கிறோம்.
ஒரு மாவட்ட கலெக்டராக பெண் இருப்பதே பெருமை. அவருக்கு ஆளும் கட்சியை சேர்ந்த MLA யாரேனும் பிரச்சனை ஏற்படுத்தி இருந்தால், முதல்வர் தாமாக முன்வந்து விளக்கம் அளிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட MLA மோசமான குறுஞ்செய்தி அனுப்பினாரா? இல்லையா? என்பது எளிய கேள்வி. அனுப்பியிருந்தால் நடவடிக்கை எடுங்கள்; இல்லையெனில் அதை வெளிப்படையாக கூறுங்கள். எல்லா விஷயங்களையும் மூடி மறைத்தால் அரசு மீது மக்களுக்கு நம்பிக்கையின்மை ஏற்படும். IAS அதிகாரிகள் சங்கமும் இது குறித்து மவுனம் கலைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மாற்றத்தை விரும்பி 35 சதவீத மக்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களித்து ஆட்சியில் அமர வைத்துள்ளனர். ஆனால், தீபாவளியையொட்டி இரண்டு நாட்களில் 441 கோடி ரூபாய்க்கு டாஸ்மாக் மது விற்பனை நடந்துள்ளது. தீபாவளி தினத்தில் 15 முதல் 17 கொலைகள் வரை நடந்துள்ளது. முந்தைய ஆட்சியை குறை சொல்வதை விட்டுவிட்டு, காவல்துறையில் சீர்திருத்தம் கொண்டு வரவேண்டும். தீபாவளிக்கு முன்பே ரவுடிகள் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்கலாம். சிறையிலிருந்து கைதிகள் தப்பியோடும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. உள்துறை பொறுப்பை வகிக்கும் முதல்வர் அதில் சுதாரித்துக் கொண்டு வேகமாக களத்தில் இறங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
ஆட்சி பொறுப்பேற்று ஆறு மாதங்கள் முடிந்துள்ள நிலையில், ஆட்சியின் நிறை குறைகள் குறித்து ஓராண்டு நிறைவடைந்த பிறகே முழுமையாக பேசுவோம். அதற்குள் எதிர்க்கட்சிகள் பேரம் பேசி MLA-க்களை இழுத்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முயற்சித்தால், அது எதிர்க்கட்சிகளுக்கே பின்னடைவாக அமையும். ஏற்கனவே இடைத்தேர்தல் குழப்பங்கள் உள்ள நிலையில், மக்கள் வாக்களித்த ஆட்சிக்கு ஓராண்டு காலமாவது தார்மீக அவகாசம் வழங்க வேண்டும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.