அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே மீண்டும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. கடந்த இரண்டு நாட்களாக ஈரான் நாட்டின் பல்வேறு இடங்கள் மீது அமெரிக்க ராணுவம் அதிரடியாகத் தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது பாதுகாப்பு அமைச்சகம், ஈரான் மீது மிகக்கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படும் என்று எச்சரித்த சில மணி நேரங்களிலேயே இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன. ஈரானின் முக்கிய நகரங்களான தெஹ்ரான், ஷிராஸ், மற்றும் கடலோரப் பகுதிகளான பந்தர் அப்பாஸ் போன்ற இடங்களில் பெரிய அளவில் வெடிச்சத்தங்கள் கேட்டுள்ளன. அங்குள்ள ஈரான் நாட்டு பாதுகாப்பு அமைப்புகள், அமெரிக்காவின் ஏவுகணைகளைத் தடுக்க முயற்சி செய்து வருகின்றன. இந்த அதிரடித் தாக்குதலால் இரு நாடுகளுக்கு இடையே இருந்த தற்காலிக அமைதி முழுமையாக முறிந்துவிட்டது.
இதற்குப் பதிலடியாக, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC), குவைத் மற்றும் பஹ்ரைன் நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. குறிப்பாக, அங்குள்ள விமானப்படைத் தளங்களை இலக்காக வைத்து ஏவுகணைகளை வீசியுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். இதோடு நில்லாமல், உலக நாடுகளுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படும் மிக முக்கியமான கடல் வழியான ‘ஹார்முஸ் ஜலசந்தியை’ (Strait of Hormuz) உடனடியாக மூடுவதாகவும் ஈரான் அறிவித்துள்ளது. இதனால், அந்த வழியாகச் செல்லும் எண்ணெய் கப்பல்கள் மற்றும் வணிகக் கப்பல்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் உலக அளவில் எரிபொருள் விநியோகத்தில் பெரிய பாதிப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
இருப்பினும், ஈரான் கூறுவது பொய் என்று அமெரிக்காவின் சென்ட்காம் (CENTCOM) அமைப்பு மறுத்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்படவில்லை என்றும், வணிகக் கப்பல்கள் வழக்கம்போல அந்த வழியாகச் சென்று கொண்டிருக்கின்றன என்றும் அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது. இந்தத் தாக்குதல்கள் குறித்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறுகையில், ஈரான் உடனடியாக அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும், இல்லையென்றால் நாளை இரவு மீண்டும் குண்டு வீசுவோம் என்று எச்சரித்துள்ளார். சுமார் 49 ஏவுகணைகளைத் தாங்கள் பயன்படுத்தியதாகவும், ஈரானின் தலைநகருக்கு அருகிலேயே ஏவுகணைகளைச் செலுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஈரானின் ராணுவத் தளங்கள் மற்றும் ரேடார் அமைப்புகளைத் தங்களது போர் விமானங்கள் அழித்துவிட்டதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் தரப்பில் உள்ள உயர் அதிகாரிகள், அமெரிக்க அதிபர் தங்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகக் கூறுவது முற்றிலும் பொய் என்று மறுத்துள்ளனர். ஈரானின் ராணுவத் தளபதி மஜித் முசவி பேசுகையில், ஹார்முஸ் ஜலசந்தியைப் பாதுகாப்பாக வைத்திருப்பது தங்களுக்கு முக்கியம், அதைத் தாண்டி அமெரிக்கா செயல்பட்டால், அந்தப் பிராந்தியத்தையே நரகமாக மாற்றிவிடுவோம் என்று ஆவேசமாக எச்சரித்துள்ளார். இதற்கிடையில், ஈரானின் தாக்குதலுக்குப் பயந்து பஹ்ரைன் மற்றும் குவைத் நாடுகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அங்கே வான் பாதுகாப்பு எச்சரிக்கை ஒலிகள் தொடர்ந்து கேட்டு வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். சுருக்கமாகச் சொன்னால், வளைகுடா நாடுகள் முழுவதும் தற்போது போரின் நிழல் படிந்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.