உலகளவில் மிகவும் மதிப்புமிக்க அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான என்விடியா (Nvidia) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) ஜென்சன் ஹுவாங் (Jensen Huang), சீனாவுக்கு உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்படும் பெண் ஒருவருடன் நெருக்கமான தொடர்பில் இருந்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.
உலகையே உலுக்கிய இந்த சம்பவம் குறித்து விசாரிக்க, என்விடியா நிறுவனத்தின் இயக்குநர்கள் சுயாதீன குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளனர்.
என்விடியா அடிப்படையில் ஒரு வன்பொருள் (Hardware) தயாரிக்கும் நிறுவனம். அவர்களின் தயாரிப்புகளுக்கான மென்பொருள்களையும் (software) உற்பத்தி செய்கின்றனர். சிப் உற்பத்தியில் முன்னிலையில் இருக்கின்றனர்.
ஓபன் ஏஐ (OpenAI), மெட்டா (Meta) போன்ற நிறுவனங்களுக்கு தேவையான AI சில்லுகளை (Chips) என்விடியா தான் தயாரித்து வழங்குகிறது. உலக அளவில் சிறந்த AI-யை உருவாக்கும் போட்டி நடந்து கொண்டிருக்கையில் இதற்கான தேவை சமீப ஆண்டுகளில் பல மடங்கு உயர்ந்துள்ளது. சிப் சந்தையில் 75 - 80 விழுக்காடு பங்கை தன் கையில் வைத்திருக்கும் இந்த நிறுவனம் கிட்டத்தட்ட ஒரு மோனோபோலி என்றே கூறலாம்.
2026ம் ஆண்டு டேட்டா செண்டர்கள் அமைக்கும் பணிகளால் மட்டும் 190 பில்லியன் டாலர்கள் வருவாய் ஈட்டியுள்ளது. இது அதன் போட்டி நிறுவனமான AMD உடன் ஒப்பிடுகையில் 15 மடங்கு அதிகம். மேலும் செயற்கை நுண்ணறிவை பயிற்றுவிக்கும் துறையிலும் கோலோச்சுகின்றனர்.
செயற்கை நுண்ணறிவு (AI) உலகையே தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் என்விடியாவின் CEO ஜென்சன் ஹுவாங் தனது மனைவியிடம் உண்மையற்ற முறையில் நடந்து கொண்டது பற்றி, "நான் என் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டேன். நான் செய்த தவறுக்கு எந்தக் காரணத்தையும் சாக்காகச் சொல்ல முடியாது. என் செயல்களால் காயமடைந்த அனைவரிடமும் மனதார மன்னிப்புக் கேட்கிறேன்." என பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.
இத்துடன், "என நடத்தையால் தேசிய பாதுகாப்பு குறித்த கவலைகள் எழுந்துள்ளதாக செய்திகளில் கூறப்படுகிறது. இதுகுறித்து, என்விடியா வாரியம் விசாரணை தொடங்கியுள்ளது. இந்த விசாரணைக்கு நான் முழு ஒத்துழைப்பு அளிப்பேன். அமெரிக்க தேசிய பாதுகாப்பையும் என்விடியாவையும் பாதுகாப்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்." என்றும் தெரிவித்துள்ளார்.
நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட தகவலின்படி, சீனாவுக்காக உளவு பார்த்ததாக அமெரிக்க உளவு அமைப்புகளால் கண்காணிக்கப்பட்ட ஆலிஸ் ஹுவாங் (Alice Huang) என்ற சீன தொழிலதிபருடன் தான் ஜென்சன் நெருக்கமாக இருந்துள்ளார். இவர் சிங்கப்பூரைச் சேர்ந்த 'மெகாஸ்பீட்' (Megaspeed) தரவு மைய நிறுவனத்துடன் தொடர்புடையவர்.
இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் கேட்டபோது, "அவர் ஒரு நல்ல மனிதர் என்பது மட்டுமே எனக்குத் தெரியும். ஆனால் யாருடைய வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்று யாருக்குத் தெரியும்? அவர் நம் நாட்டிற்கு அற்புதமாகப் பணியாற்றியுள்ளார்," எனத் தெரிவித்தார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் (Congress) எம்.பி-க்கள் ஜென்சன் ஹுவாங்கிற்கு உடனடியாகக் கடிதம் அனுப்பியுள்ளனர். அதில், சீன உளவு அமைப்புகள் அமெரிக்காவின் அதிநவீன தொழில்நுட்பங்களை அணுகக்கூடிய ஆபத்து இருக்கிறதா என விளக்கம் அளிக்க நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.
ஒரு காலத்தில் திவால் நிலைக்குத் தள்ளப்பட்ட என்விடியாவை மீட்டெடுத்து, இன்று 4.5 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள உலகளாவிய தொழில்நுட்ப ராட்சசனாக உயர்த்தியவர் ஜென்சன் ஹுவாங். இவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நிறுவனத்தின் CEOவாக பணியாற்றி வருகிறார். இப்போது சொந்த வாழ்க்கையிலும் தேசிய பாதுகாப்பு வரையிலும் கவலைகளை எழுப்பியுள்ள இந்த சர்ச்சையை கடந்து வருவாரா எனக் கேள்வி எழுந்துள்ளது.
செய்தி வெளியான பிறகு (நவம்பர் 9, 2026) Nvidia பங்குகள் pre-market மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் 4% முதல் 6% வரை வீழ்ச்சியடைந்தன. இதனால் சுமார் $200–270 பில்லியன் சந்தை மதிப்பு இழப்பு ஏற்படக்கூடிய சூழல் உருவானதாக கூறப்படுகிறது.
விசாரணையில் ஜென்சன் ஹுவாங்குக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவரது பதவி பாதிக்கப்பட்டால் நிறுவனத்தின் நிலைமை மோசமடையலாம். ஆனால் என்விடியா சிப் சந்தையில் மிகப் பெரிய உற்பத்தியாளரான TSMC உடன் மிகப் பெரிய ஒப்பந்தத்தில் கையெப்பம் இட்டுள்ளதால், சிப் உற்பத்தியில் வீழாது என்றே கூறப்படுகிறது.
சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கோ ஜியாக்குன் (Guo Jiakun) நவம்பர் 9, 2026 அன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில், “நாங்கள் ஏற்கனவே இதற்கு பதிலளித்துள்ளோம். சீன உளவாளிகள் பற்றிய குற்றச்சாட்டுகள் முழுவதும் அடிப்படை இல்லாதவை, ஊகங்களை அடிப்படையாகக் கொண்டவை மற்றும் சீனாவை களங்கப்படுத்தவும் அவதூறு செய்யவும் நோக்கமுடையவை.” எனக் கூறி உளவு தொடர்பான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.