உலகம்

புளோரிடா துப்பாக்கிச் சூடு வழக்கில் AI தான் குற்றவாளியா? வெளிவந்த உரையாடலால் புதிய திருப்பம்!

குற்றங்களைச் செய்வதற்கு முன்பு, சாட்ஜிபிடி அவருக்கு முக்கியமான ஆலோசனைகளை வழங்கியது

Muthu Lakshmi

அமெரிக்காவின் புளோரிடா மாநில பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி தொழில்நுட்பத்திற்கு பங்கு இருந்ததா என்பது குறித்து அமெரிக்காவில் அந்நிறுவனம் ஒரு குற்றவியல் விசாரணையை எதிர்கொண்டுள்ளது.

2025 ஏப்ரல் 17ஆம் தேதி  புளோரிடா மாநில பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்ததுடன், 6 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஃபீனிக்ஸ் இக்னர் என்ற நபருக்கும் ChatGPT-க்கும் இடையே நடந்த உரையாடல்களை அரசு தரப்பு வழக்கறிஞர்கள் கண்டறிந்ததைத் தொடர்ந்து இந்த விசாரணை தீவிரமடைந்துள்ளது. புளோரிடாவின் தலைமை வழக்கறிஞர் ஜேம்ஸ் உத்மியர் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்ட நபர் மற்றும் ChatGPT இடையேயான உரையாடல்களில், எந்த வகையான ஆயுதங்களை பயன்படுத்தலாம், வளாகத்தில் அதிகமான மக்கள் எங்கு மற்றும் எப்போது அதிகம் இருப்பார்கள் போன்ற விவரங்கள் குறித்து தகவல்கள் வழங்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

"ஒரு குற்றவியல் விசாரணை அவசியம் என்பதை எங்கள் ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது," என்று உத்மேயர் கூறினார். "இந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் இத்தகைய கொடூரமான குற்றங்களைச் செய்வதற்கு முன்பு, சாட்ஜிபிடி அவருக்கு முக்கியமான ஆலோசனைகளை வழங்கியது". “சாட்ஜிபிடி ஒரு மனிதராக இருந்திருந்தால், அது கொலைக் குற்றச்சாட்டை எதிர்கொண்டிருக்கும்,” என்றும் அவர் தெரிவித்தார். புளோரிடா சட்டப்படி, குற்றத்தைச் செய்ய உதவி அல்லது ஆலோசனை வழங்குபவர் ‘உதவியாளர் மற்றும் தூண்டுபவர்’ எனக் கருதப்படுவார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், ஓபன் ஏஐ நிறுவனம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், “இந்த துப்பாக்கிச் சூடு மிகவும் துயரமான சம்பவம். ஆனால் இந்தக் குற்றத்திற்கு ChatGPT பொறுப்பல்ல” எனத் தெரிவித்துள்ளது. மேலும், ChatGPT பொதுவாக இணையத்தில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் மட்டுமே பதில்களை வழங்கும் என்றும், சட்டவிரோத அல்லது வன்முறைச் செயல்களை ஊக்குவிக்காது என்றும் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

அதே நேரத்தில், சந்தேக நபரின் சாட்ஜிபிடிகணக்கை அடையாளம் கண்டு, அதை அதிகாரிகளுடன் பகிர்ந்து விசாரணைக்கு ஒத்துழைத்ததாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களின் பொறுப்புகள் மற்றும் அதன் பயன்பாட்டின் பாதுகாப்பு குறித்து முக்கியமான கேள்விகள் எழுந்துள்ளன. சாட்ஜிபிடி போன்ற AI கருவிகள் ஆபத்தான செயல்களில் பயன்படுத்தப்படுகிறதா, அதைத் தடுக்க நிறுவனங்கள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளன என்பதையும் விசாரணை மையமாகக் கொண்டுள்ளது.

அதிகாரிகள் மேலும் கூறுகையில், “மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் வழிகளை AI மூலம் கற்றுக்கொடுக்கக் கூடாது” என்று வலியுறுத்தியுள்ளனர். இந்த விசாரணையின் முடிவுகள், எதிர்காலத்தில் AI பயன்பாட்டுக்கான சட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகளில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்