மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே வெடித்துள்ள போரினால், இப்போது உலகமே அதிர்ந்து போயுள்ளது. ஏவுகணைகளும் குண்டுகளும் அங்கே வெடித்தாலும், அதன் அதிர்வுகள் நமது பாக்கெட்டைப் பதம் பார்க்கத் தொடங்கிவிட்டன. குறிப்பாக, அபுதாபியில் இருந்து டெல்லிக்கு வரும் விமான டிக்கெட்டுகளின் விலை விண்ணைத் தொட்டுள்ளது. சாதாரணமாக 10,000 முதல் 20,000 ரூபாய்க்குள் கிடைக்க வேண்டிய ஒரு டிக்கெட், இப்போது சுமார் 70,000 ரூபாய் வரை எகிறியுள்ளது. இந்தத் திடீர் விலையேற்றம் வளைகுடா நாடுகளில் பணிபுரியும் இந்தியத் தொழிலாளர்களையும், சுற்றுலாப் பயணிகளையும் நிலைகுலைய வைத்துள்ளது.
இந்தப் போரின் காரணமாக வான்வழிப் பாதைகள் பல மூடப்பட்டுள்ளன. விமானங்கள் இப்போது போர் நடக்கும் பகுதிகளைத் தவிர்த்து, நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன. இதனால் விமான எரிபொருள் செலவு பல மடங்கு அதிகரித்துள்ளது. அபுதாபியில் இருந்து டெல்லிக்கு நேரடி விமானங்கள் இப்போது மிகவும் குறைவாகவே இயக்கப்படுகின்றன. ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு விமானங்கள் மட்டுமே இயக்கப்படுவதால், இருக்கும் சில இடங்களுக்காக மக்கள் அடித்துப்பிடித்து முன்பதிவு செய்கின்றனர். இந்தத் தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி விமான நிறுவனங்கள் விலையை ஏற்றியுள்ளன.
கூகுள் பிளைட்ஸ் (Google Flights) தகவலின்படி, மார்ச் 12-ம் தேதி எட்டிஹாட் (Etihad) விமானத்தில் ஒரு டிக்கெட் சுமார் 54,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதுவே மார்ச் 14 மற்றும் மார்ச் 17 ஆகிய தேதிகளில் இண்டிகோ (IndiGo) மற்றும் எட்டிஹாட் நிறுவனங்கள் சுமார் 69,678 ரூபாய்க்கு டிக்கெட்டுகளை விற்கின்றன. இது வழக்கமான விலையை விட மூன்று முதல் நான்கு மடங்கு அதிகம். இதேபோல் டெல்லியில் இருந்து அபுதாபி செல்லும் விமானங்களும் 69,000 ரூபாயைத் தாண்டிவிட்டன. முன்பெல்லாம் 14,000 ரூபாய்க்கு அசால்ட்டாகப் போய் வந்தவர்கள், இப்போது வெறும் டிக்கெட்டிற்காகவே தங்களது பல மாதச் சம்பளத்தைக் கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்திய விமான நிறுவனங்களான ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ ஆகியவை ஏற்கனவே பாகிஸ்தான் வான்வழியைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் பெரும் பாதிப்பில் இருந்தன. இப்போது மத்திய கிழக்கிலும் போர் மூண்டுள்ளதால், அவர்களுக்கு இது 'மேல விழுந்த அடியில் மிளகாய்ப் பொடி தூவியது' போல ஆகிவிட்டது. எரிபொருள் விலை உயர்வைக் காரணம் காட்டி, ஏர் இந்தியா நிறுவனம் தனது டிக்கெட் விலையில் கூடுதல் கட்டணத்தை (Fuel Surcharge) வசூலிக்கத் தொடங்கியுள்ளது. இதைக் குறைக்காவிட்டால் விமானங்களை இயக்குவதே நஷ்டம் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் இந்த அசாதாரண சூழலால், துபாய் மற்றும் தோஹா போன்ற முக்கிய இடங்கள் வழியாகச் செல்லும் மற்ற சர்வதேச விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் 2026 டி20 உலகக் கோப்பையில் விளையாட வேண்டிய இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் போன்ற அணிகளின் பயணத் திட்டமே தலைகீழாக மாறியுள்ளது. போரின் தாக்கம் விளையாட்டையும் விட்டு வைக்கவில்லை. தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் இந்தியர்கள் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என்றும், பாதுகாப்பாக இருக்கும்படியும் இந்தியத் தூதரகங்கள் அறிவுறுத்தி வருகின்றன.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.