மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், பாரசீக வளைகுடா பகுதியில் பறந்து கொண்டிருந்த அமெரிக்காவின் 'கேசி-135 ஸ்ட்ரேட்டோடாங்கர்' (KC-135 Stratotanker) ரக விமானம் திடீரென மாயமாகியுள்ளது. அமெரிக்க ராணுவ விமானங்களுக்கு நடுவானில் எரிபொருள் நிரப்பும் 'பறக்கும் எரிபொருள் நிலையம்' என்று அழைக்கப்படும் இந்த விமானம், ஈரானுக்கு அருகிலுள்ள கடல் பகுதியில் பறந்தபோது திடீரென "7700" என்ற அவசரகால எச்சரிக்கை சமிக்ஞையை அனுப்பியதாக ஃபிளைட்ரேடார்24 (Flightradar24) தரவுகள் தெரிவிக்கின்றன. ஐக்கிய அரபு அமீரகத்தின் அல் தஃப்ரா விமான தளத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானம், கத்தார் நாட்டு வான்பரப்பில் பறந்தபோது அதன் சமிக்ஞைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
மத்திய கிழக்கு பகுதியில் நடந்து வரும் அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இந்த விமானம் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது. விமானத்தைக் கண்காணிக்கும் தரவுகளின்படி, அந்த விமானம் தரையிறங்குவதற்கு முன்னதாக நீண்ட நேரம் வானத்தில் வட்டமடித்தது தெரிய வந்துள்ளது. அதன் பிறகு படிப்படியாகத் தரை நோக்கி இறங்கியுள்ளது. இந்த அவசர நிலைக்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. மேலும், இந்தச் சம்பவத்திற்கும் ஈரானுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
ஈரானின் ஃபார்ஸ் செய்தி நிறுவனம் இந்த விமான மாயமான செய்தியை ஃபிளைட்ரேடார்24 தரவுகளை மேற்கோள் காட்டி வெளியிட்டுள்ளது. இருப்பினும், அமெரிக்க ராணுவ விமானத்தின் இந்த அவசர நிலையில் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இருப்பதாக ஈரான் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. அதேபோல், அமெரிக்க ராணுவமும் தனது விமானத்தின் தற்போதைய நிலை குறித்து இன்னும் மௌனம் காத்தே வருகிறது. முன்னதாக கடந்த மார்ச் மாதம், ஈராக் பகுதியில் இதே போன்ற ஒரு அமெரிக்க விமானம் ஈரானின் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்களால் சுட்டு வீழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க விமானப்படையில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் 'கேசி-135 ஸ்ட்ரேட்டோடாங்கர்' ஒரு மிக முக்கியமான ராணுவ விமானமாகும். நான்கு என்ஜின்களைக் கொண்ட இந்த விமானம், போர் விமானங்கள் மற்றும் குண்டுவீச்சு விமானங்களுக்கு நடுவானிலேயே எரிபொருள் நிரப்பும் திறன் கொண்டது. இதன் மூலம் ராணுவ விமானங்கள் நீண்ட தூரம் மற்றும் நீண்ட நேரம் வானில் பறக்க முடிகிறது. அமெரிக்காவின் கடற்படை மற்றும் நட்பு நாடுகளின் விமானங்களுக்கும் இது எரிபொருள் வழங்கி உதவி வருகிறது. போயிங் 707 ரக பயணிகள் விமானத்தின் வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டு இது உருவாக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் நிரப்புவது மட்டுமல்லாமல், இந்த விமானம் பல முக்கியப் பணிகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. ராணுவ வீரர்கள் மற்றும் கனரகப் பொருட்களை ஏற்றிச் செல்லவும், அவசர மருத்துவச் சிகிச்சைகளுக்காக நோயாளிகளை அழைத்துச் செல்லவும் இது உதவுகிறது. ஒருமுறை சுமார் 37,600 கிலோ எடையுள்ள பொருட்களை அல்லது பல டஜன் பயணிகளை இந்த விமானம் சுமந்து செல்லும் திறன் கொண்டது. தற்போது மாயமான இந்த விமானம் பத்திரமாகத் தரையிறங்கியதா அல்லது விபத்துக்குள்ளானதா என்பது குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.