ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் முற்றியுள்ள நிலையில், ஈரானின் வான்வெளியில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்காவின் எஃப்-15இ (F-15E) போர் விமானத்தில் இருந்த உயர் அதிகாரி ஒருவர், எதிரி நாட்டு எல்லைக்குள் 48 மணிநேரம் தனியாகப் போராடி உயிர் பிழைத்த சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது. சுமார் 7000 அடி உயரமுள்ள செங்குத்தான மலைப்பகுதிகளில், வெறும் ஒரு கைத்துப்பாக்கி மற்றும் ஒரு தகவல் தொடர்பு கருவியுடன் அவர் நடத்திய இந்தப் போராட்டம், ஹாலிவுட் படங்களையே மிஞ்சும் வகையில் அமைந்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்த மீட்பு நடவடிக்கையை "அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் துணிச்சலான தேடுதல் மற்றும் மீட்புப் பணி" என்று வர்ணித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஈரானின் தென்மேற்குப் பகுதியில் அமெரிக்காவின் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டபோது, அதிலிருந்த இரண்டு வீரர்களும் பாராசூட் மூலம் குதித்தனர். விமானி உடனடியாக மீட்கப்பட்ட போதிலும், ஆயுத அமைப்புகளைக் கவனிக்கும் அதிகாரியான (WSO) மற்றொரு கர்னல் அந்தஸ்து கொண்ட அதிகாரி, ஈரானின் கரடுமுரடான மலைப்பகுதிகளில் மாயமானார். அவர் தரையிறங்கிய இடம் ஈரானியப் படைகளின் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி என்பதால், அவரைப் பிடிக்க ஈரான் அரசு பெரும் பரிசுத் தொகையை அறிவித்தது. உள்ளூர் மக்களும், ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையினரும் அந்த வீரரை வலைவீசித் தேடத் தொடங்கினர்.அந்த இக்கட்டான சூழலில், அமெரிக்க ராணுவத்தில் வழங்கப்படும் சிறப்புப் பயிற்சியான "SERE" (Survival, Evasion, Resistance and Escape) முறையை அந்த அதிகாரி மிகச்சரியாகப் பயன்படுத்தினார். எதிரிகள் முதலில் விமானம் விழுந்த இடத்தைத் தான் தேடுவார்கள் என்பதால், காயமடைந்த நிலையிலும் அவர் அந்த இடத்தை விட்டு வெகுதூரம் தப்பிச் சென்றார்.
சுமார் 7,000 அடி உயரமுள்ள மலைமுகடுகளின் மீது ஏறி, பனி மற்றும் கடும் குளிருக்கு இடையே தன்னை மறைத்துக்கொண்டார். அவரிடம் இருந்த ஒரே பாதுகாப்பு ஆயுதம் ஒரு சிறிய கைத்துப்பாக்கி மட்டுமே. ஆனால், தனது இருப்பிடத்தைக் காட்டிவிடக்கூடாது என்பதற்காக அவர் அதைப் பயன்படுத்தாமல், மிகவும் ரகசியமாக நகர்ந்தார்.அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ (CIA), இந்த வீரரை மீட்பதற்காக ஒரு தந்திரமான நாடகத்தை ஆடியது. அந்த அதிகாரி ஏற்கனவே மீட்கப்பட்டு தரைவழிப் பயணம் மூலம் நாட்டிற்கு வெளியே கொண்டு செல்லப்படுகிறார் என்ற போலித் தகவலைப் பரப்பி, ஈரானியப் படைகளின் கவனத்தைத் திசைதிருப்பியது. அதே நேரத்தில், அந்த அதிகாரி மறைந்திருந்த மலைப்பகுதியை நோக்கி வந்த ஈரானிய வாகனங்கள் மீது அமெரிக்கப் போர் விமானங்கள் குண்டுகளை வீசித் தடுத்தன. இதன் மூலம் மீட்புப் படையினர் அங்கு வந்து சேருவதற்கான கால அவகாசம் உருவாக்கப்பட்டது.இறுதியாக, அமெரிக்காவின் நேவி சீல் (Navy SEAL Team 6) உள்ளிட்ட நூற்றுக்கணக்கான சிறப்புப் படை வீரர்கள், டஜன் கணக்கான ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்கள் உதவியுடன் ஈரானுக்குள் மின்னல் வேகத்தில் நுழைந்தனர்.
கடுமையான துப்பாக்கிச் சண்டைக்கு இடையே, மலை இடுக்கில் மறைந்திருந்த அந்த வீரரை மீட்டனர். இந்த ஆபரேஷனின் போது அமெரிக்காவின் இரண்டு விமானங்கள் சேதமடைந்தன, அவற்றை எதிரிகள் கையில் சிக்காமல் இருக்க அமெரிக்கப் படைகளே குண்டுவைத்துத் தகர்த்தன. சுமார் 48 மணிநேரம் மரணத்தின் பிடியில் இருந்த அந்த வீரர், தற்போது பாதுகாப்பாகக் குவைத் நாட்டிற்குச் சிகிச்சைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.தன்னந்தனியாக ஒரு விரோத நாட்டில், பல்லாயிரக்கணக்கான எதிரிகள் தேடிக்கொண்டிருந்த போதும், மன உறுதியுடனும் பயிற்சியுடனும் அந்த அதிகாரி தப்பித்தது ராணுவ வட்டாரங்களில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. "எங்கள் போர் வீரன் காயமடைந்திருக்கலாம், ஆனால் அவர் நலமாக இருக்கிறார்" என்று ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பதிவில் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.