உலகம்

டிரம்பிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய அமெரிக்கர்கள்!இடைக்கால தேர்தலில் சிக்கலை சந்திப்பாரா டிரம்ப்? - "அரசர்கள் வேண்டாம்" என்று பேரணி வரும் மக்கள்...

"இவர் எவ்வாறு ஆட்சியை பிடித்தார்?" என்று பல மக்கள் குழப்பத்திலேயே உள்ளனர்..

மாலை முரசு செய்தி குழு

ஈரான் மீதான போரையும், அதிபர் டொனால்ட் டிரம்பின் நடவடிக்கைகளையும் எதிர்த்து, சனிக்கிழமையன்று அமெரிக்கா முழுவதும் மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளிலும் “அரசர்கள் வேண்டாம்” பேரணிகளில் பெருந்திரளான மக்கள் வீதிகளில் இறங்கினர். பெரிய நகரங்களிலிருந்து சிறிய நகரங்கள் வரை, பல்வேறு பிரச்சினைகள் மீதான தங்கள் கோபத்தை வெளிப்படுத்த மக்கள் பெரும் திரளாக திரண்டனர்.

முற்றிலும் ஜனநாயகக் கட்சிக்குச் சாதகமாக மாநிலத்தில், கிட்டத்தட்ட 85 லட்சம் மக்கள் வசிக்கும் நியூயார்க் நகரத்திலிருந்து, 2024 தேர்தலில் டிரம்ப் 66% வாக்குகளுடன் வெற்றி பெற்ற மாநிலமான கிழக்கு இடாஹோவில் உள்ள, 2,000க்கும் குறைவான மக்கள் வசிக்கும் டிரிக்ஸ் என்ற நகரம் வரை ஏராளமான மக்கள் ட்ரம்பிற்கு எதிராக திரண்டனர்.

டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட காரணம்:

டொனால்ட் டிரம்ப், 2016ல் நடந்த அவரது தேர்தலைப் போலல்லாமல், கடந்த தேர்தலில் அவர் மக்கள் வாக்குகளில் பெரும்பான்மையையும், ஜனாதிபதி பதவியை வெல்வதற்குத் தேவையான எண்ணிக்கையிலான தேர்தல் சபை வாக்குகளையும் பெற்றார். டிரம்ப் இரண்டு முறை பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார், தண்டனை பெற்ற குற்றவாளி, 2020 தேர்தலில் தோற்ற பிறகு கலவரத்தைத் தூண்டினார், மேலும் பாலியல் வழக்குகளிலும் இருப்பவர் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக இன்னும் பல சட்ட வழக்குகளும், பாலியல் வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இருப்பினும், "இவர் எவ்வாறு ஆட்சியை பிடித்தார்?" என்று பல மக்கள் குழப்பத்திலேயே உள்ளனர். அமெரிக்கக் குடிமக்கள் அல்லாதவர்கள் வாக்களிக்க முடிந்தால், டிரம்புக்கு வெற்றிபெற வாய்ப்பே இல்லை என்று ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பா முழுவதும் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகள் அன்று கூறின.

ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸுக்கு எதிரான டிரம்பின் வெற்றிக்கு ஒரு காரணமாக, கட்டுக்கடங்காத பணவீக்கம் ஒரு முக்கியப் பங்கு வகித்ததாகத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூறின. மேலும், அமெரிக்காவில் ஆவணமற்ற குடியேறிகளால், அந்நாட்டு மக்களின் வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகி போனது. இதனால் அந்நாட்டில் பலரும் தங்களது வேலைகளை இழக்க நேரிட்டது. இதுமட்டுமின்றி சமூகஊடங்கங்களும் இதில் முக்கியப்பங்கு வகிக்கின்றன. எலன் மாஸ்க் தனது ட்விட்டரின் மூலமும், பல புகழ்பெற்ற பாட் காஸ்டர்கள் போன்றோரால் ஒரு மிகப்பெரிய அளவில் ட்ரம்பிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப்பட்டது. இதனால் தற்போது டிரம்ப் அமெரிக்க அதிபராக ஆட்சியில் அமர்ந்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

டிரம்பிற்கு எதிராக மக்கள்:

தற்போது அமெரிக்க மக்களே டிரம்பிற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். ஈரான் மீதான போருக்கும், அதிபர் டொனால்ட் டிரம்பின் நடவடிக்கைகளுக்கும் எதிராக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா முழுவதும் சனிக்கிழமையன்று நடைபெற்ற "அரசர்கள் வேண்டாம்" பேரணிகளில் மக்கள் திரளாக கலந்துகொண்டு போராட்டம் நடத்தினர். இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் மாபெரும் ஆர்ப்பாட்டங்களாக இது அமையும் என ஏற்பாட்டாளர்கள் கூறினர். மினசோட்டா மாநிலம் இதில் முக்கிய இடத்தைப் பிடித்தது. சர்வாதிகாரத்திற்கு எதிரான பல்வேறு இயக்கங்களின் ஒருங்கிணைந்த உந்துதலுக்காகவே 'நோ கிங்ஸ்' இயக்கம் உருவாகியுள்ளது. கடந்த ஆண்டில், அமெரிக்கர்கள் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் மாற்றத்தைக் கோரியுள்ளனர். டொனால்ட் டிரம்ப் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சிகாகோவிற்கு கூட்டாட்சி முகவர்களை அனுப்பியபோது , ​​மக்கள் தெருக்களில் திரண்டு "ICE வெளியேறு!" என்று முழக்கமிட்டனர். பெருநிறுவனங்கள் டிரம்புடன் கொண்டுள்ள தொடர்புகளுக்கு நுகர்வோர் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்த விரும்பியபோது, ​​அவர்கள் டார்கெட், டெஸ்லா மற்றும் அமேசான் நிறுவனங்களைப் புறக்கணித்தனர். மேலும், 2017ல், டிரம்பின் முதல் பதவியேற்புக்கு அடுத்த நாள், அவரது சொல்லாடல்களையும் கொள்கைகளையும் பெண் வெறுப்புடையவை என்றும், பெண்களுக்கு ஒட்டுமொத்த அச்சுறுத்தல் என்றும் கண்டித்து, சமூக ஆர்வலர்கள், பெண்கள் பேரணியை நடத்தினர். இந்தப் பேரணிதான் #MeToo இயக்கத்தைத் தூண்டியதாகவும், 2018 இடைக்காலத் தேர்தல்களில் சாதனை எண்ணிக்கையிலான பெண்கள் பங்கேற்கக் காரணமாக இருந்ததாகவும் ஆர்வலர்களும் அறிஞர்களும் கூறுகின்றனர்.

தற்போது இந்த போராட்டம், அமெரிக்காவின் அதிக மக்கள்தொகை கொண்ட நகரமான நியூயார்க்கில், பல்லாயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் திரண்டனர். அவர்களில், டிரம்பை அடிக்கடி விமர்சிப்பவரும், ஆஸ்கர் விருது பெற்ற நடிகருமான ராபர்ட் டி நிரோவும் ஒருவர். அவர், அதிபரை "நமது சுதந்திரத்திற்கும் பாதுகாப்பிற்கும் ஓர் இருப்புக்கே அச்சுறுத்தல்" என்று கூறுகிறார். டெட்ராய்டுக்கு அருகிலுள்ள மிச்சிகன் நகரமான வெஸ்ட் ப்ளூம்ஃபீல்டில், மக்கள் அங்குள்ள கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அமெரிக்கத் தலைநகரான வாஷிங்டனில், ஆயிரக்கணக்கான பேரணியில் ஈடுபடுவோரின் சிலர் "டிரம்ப் இப்போதே வெளியேற வேண்டும்!" என்றும் "பாசிசத்தை எதிர்த்துப் போராடு" என்று முழங்கிய பதாகைகளை ஏந்தியபடி அங்குள்ள நேஷனல் மாலில் திரண்டனர்.

இதனைத்தொடர்ந்து, "மக்களின் ஒப்புதல் இல்லாமல் எந்த நாடும் ஆட்சி செய்ய முடியாது," என்று அட்லாண்டாவில் ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்த நிகழ்வில், 36 வயதான முன்னாள் ராணுவ வீரர் மார்க் மெக்காஹி ஏஎஃப்‌பி செய்தி நிறுவனத்திடம் கூறினார். அரசியலமைப்புச் சட்டம் பல்வேறு வழிகளில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது என்று நாங்கள் உணர்வதால் இங்கு வந்துள்ளோம். நிலைமை இயல்பாக இல்லை. அது சரியில்லை என்று அவர் கூறினார். இடதுசாரி அமெரிக்க அரசியல்வாதியான பெர்னி சாண்டர்ஸ் மினசோட்டா பேரணியில் உரையாற்றுகையில், கூட்டத்தினரிடம், "பொய்யராகவும், ஊழல்வாதியாகவும், தற்பெருமைக்காரராகவும் இருந்து, ஒவ்வொரு நாளும் அமெரிக்க அரசியலமைப்பையும் சட்டத்தின் ஆட்சியையும் சீர்குலைக்கும் ஒரு ஜனாதிபதியை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்" என்று கூறினார். தற்போது, டிரம்பின் ஏற்பு விகிதம் 40 சதவீதத்திற்கும் கீழே சரிந்துள்ளது. நவம்பரில் இடைக்காலத் தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில், அவரது குடியரசுக் கட்சி காங்கிரஸின் இரு அவைகளின் மீதான கட்டுப்பாட்டையும் இழக்கும் அபாயத்தில் உள்ளது என்றும் கூறப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.