உலகம்

உலக அளவில் ரெக்கை கட்டிப் பறந்த வதந்தி...முற்றுப்புள்ளி வைத்த ஜி ஜின்பிங்!

Tamil Selvi Selvakumar

பல்வேறு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் முதல்முறையாக நேற்று பொதுவெளியில் தோன்றினார்.

உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் இரு வாரங்களுக்கு முன் நடைபெற்ற  ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பின்னர் கடந்த 16-ம் தேதி நள்ளிரவு நாடு திரும்பிய ஜின்பிங் அதன் பின்னர் பொதுவெளியில் தலைகாட்டவில்லை.

வெளிநாட்டுப் பயணத்துக்கு பிறகு சீனா திரும்புவோர்  கொரோனா தடுப்பு விதிகளின்படி 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அதன்படிதான் அவரும் தனிமைப்படுத்திக் கொண்டார். ஆனால், ராணுவம் ஆட்சியை பிடித்தது-ஜின்பிங்குக்கு வீட்டுக் காவல் என்ற செய்திகள் உலக அளவில் பரவியது. சர்வதேச அளவில் தொலைக்காட்சிகளில் விவாதங்கள் அனல் பறந்தன.

ஏனென்றால் பழைய சோவியத் போன்ற இரும்புத் திரை நாடான சீனாவில் என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. அந்த நாடு அதிகாரப்பூர்மாகச் சொன்னால்தான் உண்டு.  அதனால் பத்து நாட்களாக பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டன. 

இந்தநிலையில், வெளிநாட்டுப் பயணத்துக்கு பிறகு ஜின்பிங் முதல் முறையாக நேற்று பொதுவெளியில் தோன்றினார். கடந்த 10 ஆண்டுகளில் சீனாவின் சாதனைகள் தொடர்பாக பெய்ஜிங் நகரில் நடைபெறும் கண்காட்சிக்கு முகக்கவசம் அணிந்து வந்தார். இதன்மூலம் ஆட்சிக் கவிழ்ப்பு வதந்திகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அடுத்த மாதம் நடைபெறும் சீன கம்யூனிஸ்ட் கட்சி முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் 3-வது முறையாக அவர் அதிபராக அங்கீகரிக்கப்படுவார் என்பதும் இதன் மூலம் உறுதியாகியுள்ளது.