சுற்றுலா செல்வது என்பது பலருக்கும் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். அதிலும் பனிப்பாறைகள் நிறைந்த அண்டார்டிகா பகுதிக்கு ஆடம்பரக் கப்பலில் பயணம் செய்வது என்பது பலரின் கனவு. ஆனால், அத்தகைய பயணம் ஒரு குடும்பத்திற்கு தீராத சோகத்தையும், பல கேள்விகளையும் ஏற்படுத்தியுள்ளது. நல்ல உடல்நலத்துடன் சுற்றுலா சென்ற 44 வயது பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் நடந்து ஓராண்டு கடந்தும், அவரது மரணத்திற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. இதனால், மகளின் மரணத்திற்கு நீதி கேட்டு அவரது பெற்றோர் தற்போது நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
கிறிஸ்டன் எலிசபெத் நோலன் என்ற அந்தப் பெண், அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தைச் சேர்ந்தவர். வால்ட் டிஸ்னி வேர்ல்டு நிறுவனத்தில் 11 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்த அவர், அண்மையில் அந்த வேலையை விட்டுவிட்டு ஆடம்பரச் சுற்றுலாப் பயணங்களை விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டார். புதிய வேலையின் ஒரு பகுதியாக, வாடிக்கையாளர்களுக்கு பயண அனுபவங்களை நேரடியாக விளக்குவதற்காக அண்டார்டிகா சுற்றுலாவுக்கு அவர் அனுப்பப்பட்டார். இந்தப் பயணம் அவரது தொழில் வாழ்க்கையில் புதிய தொடக்கமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
கடந்த 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தப் பயணம் நடைபெற்றது. நவம்பர் 13ஆம் தேதி, கப்பலில் இருந்த கிறிஸ்டன் உள்ளிட்ட பயணிகள், அண்டார்டிகாவில் உள்ள டாமாய் பாயிண்ட் என்ற பனிப்பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு இரவு முழுவதும் பனிப்பாறை பகுதியில் தங்கும் அனுபவம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பயணிகளைப் பாதுகாப்பதற்காக வழிகாட்டிகள் இரவு முழுவதும் கண்காணிப்பில் இருப்பார்கள் என்று நம்பியிருந்ததாக அவரது பெற்றோர் தாக்கல் செய்துள்ள வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரவு நேரத்தில் வழிகாட்டிகள் இருவரும் உறங்கச் சென்றுவிட்டதாகவும், முகாமில் இருந்தவர்களைத் தொடர்ந்து கண்காணிக்க யாரும் இல்லை என்றும் புகார் கூறப்பட்டுள்ளது. அப்போது மற்றொரு பயணி, கிறிஸ்டன் தங்கியிருந்த இடத்திலிருந்து அழும் சத்தத்தைக் கேட்டதாகவும், அது தனிப்பட்ட விஷயமாக இருக்கலாம் என்று நினைத்து யாரிடமும் தெரிவிக்கவில்லை என்றும் வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மறுநாள் அதிகாலை சுமார் 5.05 மணியளவில், பயணத்தை முடித்துக்கொண்டு திரும்புவதற்கான ஏற்பாடுகள் நடந்தபோது, கிறிஸ்டன் தனது தங்குமிடத்தில் சுயநினைவின்றி, உடல் குளிர்ந்த நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டார். உடனடியாகக் கப்பலில் இருந்த மருத்துவக் குழுவுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், மருத்துவ உதவியாளர் அவரைச் சென்றடைய சுமார் 21 நிமிடங்கள் ஆனதாகப் பெற்றோர் தரப்பு குற்றம்சாட்டியுள்ளது.
கப்பலின் மருத்துவர் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கருதி, ஆறு நிமிடங்களுக்குள் மூன்று முறை எபிநெஃப்ரின் என்ற மருந்தைச் செலுத்தியதாக வழக்கில் கூறப்பட்டுள்ளது. ஆனால், உடல் வெப்பநிலை மிகவும் குறைந்திருந்தால் இந்த மருந்தின் தொடர்ச்சியான பயன்பாடு ஆபத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்றும், உடலை வெப்பப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படவில்லை என்றும் பெற்றோர் தரப்பு கேள்வி எழுப்பியுள்ளது. கப்பலில் ஒரே மருத்துவராகப் பணியாற்றியவரின் மருத்துவத் தகுதி குறித்தும் அவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
கிறிஸ்டனின் உடல் அர்ஜென்டினாவில் வைக்கப்பட்டிருந்தபோது, ஆரம்பத்தில் அந்நாட்டு அதிகாரிகள் பிரேதப் பரிசோதனை நடத்த மறுத்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் வழக்கறிஞர் உதவியுடன் நீதிமன்ற உத்தரவைப் பெற்று ஆறு வாரங்களுக்குப் பிறகே பரிசோதனை நடத்த முடிந்தது. அந்தப் பரிசோதனையிலும் அவரது திடீர் மரணத்திற்கான தெளிவான மருத்துவக் காரணம் கண்டறியப்படவில்லை என்று பெற்றோர் தரப்பு தெரிவித்துள்ளது. உடல் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகே அமெரிக்காவுக்குக் கொண்டுவரப்பட்டது. முறையாகப் பாதுகாக்கப்படாததால் உடலில் பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டிருந்ததாகவும், இதனால் இறுதிச்சடங்கு ஏற்பாடுகளைச் செய்தவரே அவரது தாயாரைப் பார்க்க அனுமதிக்கவில்லை என்றும் குடும்பத்தின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இத்துடன் பிரச்சினை முடிவடையவில்லை. கிறிஸ்டனின் உடைமைகளில் சில இன்னும் கிடைக்கவில்லை என்றும், அவரது செல்போன், ஆப்பிள் வாட்ச் உள்ளிட்ட பொருட்கள் திரும்பக் கிடைக்கவில்லை என்றும் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். அதைவிட முக்கியமாக, பிரேதப் பரிசோதனையின்போது எடுக்கப்பட்ட திசு மாதிரிகளை அமெரிக்காவுக்குக் கொண்டுவந்து தனியார் ஆய்வகத்தில் பரிசோதிக்க வேண்டும் என்று அவர்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். ஆனால், ஓராண்டு கடந்தும் அந்த மாதிரிகள் அவர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
மகளின் மரணத்தில் அலட்சியம் நடந்ததாகக் குற்றம்சாட்டி, சுற்றுலா ஏற்பாடு செய்த நிறுவனத்துக்கும் கப்பலை இயக்கிய நிறுவனத்துக்கும் எதிராக பெற்றோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இழப்பீடு மட்டுமின்றி, மகளுக்கு உண்மையில் என்ன நடந்தது என்பதற்கான பதிலையும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர். கனவுப் பயணமாகத் தொடங்கிய ஒரு சுற்றுலா, ஓராண்டாகியும் விடை கிடைக்காத மர்மமாகத் தொடர்வது அவரது குடும்பத்தினரைப் பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்