“BRICS-ஐ குலைக்க முயற்சி!” மோடி முன்னிலையில் மேற்குலகை சாடிய புதின்! x.com
உலகம்

“BRICS-ஐ குலைக்க முயற்சி!” மோடி முன்னிலையில் மேற்குலகை சாடிய புதின்!

இன்று பிரிக்ஸ் உலகின் மிகப் பெரிய பொருளாதார சக்தி என வர்ணித்தார் புதின். அமெரிக்கா தலைமையிலான உலக ஒழுங்கு மாறி வருவதால், பிரிக்ஸ் நாடுகளின் பலம் அதிகரித்து வருவதாகவும் அவர் பேசியுள்ளார்.

மாலை முரசு செய்தி குழு

BRICS அமைப்பின் 18-வது உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், இன்று பிரதமர் மோடியுடனான சந்திப்புக்குப் பிறகு ஜி7 நாடுகளை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

ஜி7 மீது தாக்கு

உலகளாவிய பொருளாதார உற்பத்தியில் பிரிக்ஸ் நாடுகளின் பங்களிப்பு 40 சதவீதமாகவும், ஜி7 நாடுகளின் பங்களிப்பு 18 சதவீதமாகவும் மட்டுமே இருப்பதால், "அவர்களை ஏன் அப்படி (பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகள்) அழைக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை," என கேலியாக சாடினார்.

ஜி7 (Group of Seven - G7) என்பது உலகின் மிக வளர்ந்த மற்றும் மேம்பட்ட பொருளாதாரங்களைக் கொண்ட 7 நாடுகளின் அமைப்பாகக் கருதப்படுகிறது. இதில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

முன்னதாக ஜி8 என அழைக்கப்பட்ட இந்தக் கூட்டமைப்பில் ரஷ்யாவும் இடம்பெற்றிருந்தது. 2014-ஆம் ஆண்டு ரஷ்யா கிரிமியாவை இணைத்துக்கொண்டதைத் தொடர்ந்து, அந்த அமைப்பில் இருந்து நீக்கப்பட்டது.

பிரிக்ஸ் நாடுகளைக் குலைக்க முயற்சி

இன்று பிரிக்ஸ் உலகின் மிகப் பெரிய பொருளாதார சக்தி என வர்ணித்தார் புதின். அமெரிக்கா தலைமையிலான உலக ஒழுங்கு மாறி வருவதால், பிரிக்ஸ் நாடுகளின் பலம் அதிகரித்து வருவதாகவும் அவர் பேசியுள்ளார்.

பிரிக்ஸ் நாடுகளைக் குலைக்க மேற்கத்திய நாடுகள் தொடர்ச்சியாக முயன்று வருவதாகவும் ரஷ்ய அதிபர் குற்றம் சாட்டினார்.

"பிரிக்ஸின் மேற்கத்திய போட்டியாளர்கள் தங்கள் முந்தைய தலைமைப் பதவியை மீண்டும் பெற முயல்கின்றனர். இந்தச் சண்டை அரசாங்க மட்டத்தில் முறையற்ற வகையில் நடந்து வருகிறது," என்று புதின் குற்றம்சாட்டினார்.

மோடி - புதின் பேச்சுவார்த்தை

மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது நியாயமற்ற பொருளாதார தடைகளை விதித்துள்ளதாகக் குற்றம் சாட்டிய புதின், அந்தத் தடைகள் இருந்தபோதிலும் மாஸ்கோ தனது பொருளாதாரச் செயல்பாட்டைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது என்றார்.

உலகளாவிய பொருளாதார ஒழுங்கு வளர்ச்சியடைந்து வருவதால், பிரிக்ஸ் உறுப்பினர்களிடையே அதிக ஒத்துழைப்பு இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், அமைப்புக்கு வெளியில் உள்ள நாடுகளுக்கும் ஒத்துழைப்பை வழங்க பிரிக்ஸ் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மோடி - புதின் பேச்சுவார்த்தை

டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்றுவரும் 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடியும் புதினும் கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் சந்தித்துப் பேசினர்.

பிப்ரவரி 2022-இல் உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து, ரஷ்யாவிற்கு வெளியே நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் புதின் நேரில் பங்கேற்பது இதுவே முதல்முறையாகும். மேலும், இந்த ஆண்டில் மோடியும் புதினும் சந்தித்துக்கொள்வது இது இரண்டாவது முறையாகும்.

உக்ரைன் மோதலுக்குத் தீர்வு காண பேச்சுவார்த்தையும் தூதரக வழியுமே ஒரே வழி என்று மீண்டும் வலியுறுத்திய பிரதமர் மோடி, அமைதி முயற்சிகளுக்கு உதவ இந்தியா தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

இரு தலைவர்களும் அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு, எரிசக்தி, விண்வெளி, திறமையான நகர்வு மற்றும் மக்கள் இடையேயான உறவுகள் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு குறித்து விவாதித்துள்ளனர்.

மத்திய கிழக்கு மற்றும் கருங்கடல் பிராந்தியத்தில் ஈரான் - அமெரிக்கா போரால் நிலவும் மோதல்கள் குறித்தும், கடல்வழி வர்த்தகம் மற்றும் இந்திய மாலுமிகளின் பாதுகாப்பு குறித்தும் அவர்கள் விவாதித்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்