Balochistan Separatism Will a New Nation Be Formed on August 11 
உலகம்

பலுசிஸ்தான்: இரண்டாக பிரியும் பாகிஸ்தான்? ஆகஸ்ட் 11ல் உருவாகிறதா புதிய நாடு?

தற்போது பலுசிஸ்தான் குடியரசு விடுதலை அடைந்ததாக சமூக வலைத்தளங்களில் பரவிவரும் ஆவணங்கள் குறித்து அமைதிகாத்து வருகிறது பாகிஸ்தான் அரசு.

மாலை முரசு செய்தி குழு

பாகிஸ்தான் நாட்டின் வளமிக்க மாகாணம் பலுசிஸ்தான். தனி நாடாக விடுதலை பெற்றுள்ளதாகவும், ஆகஸ்ட் 11-ஆம் தேதியை உலகம் முழுவதும் உள்ள பலுச் இன மக்கள் ‘பலுசிஸ்தான் குடியரசின்’ சுதந்திர தினமாக அனுசரிக்க வேண்டும் என்றும் பலுச் தேசியவாத அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

பலுசிஸ்தான் விடுதலை முன்னணி (BLF) என்ற அமைப்பு, பல ஆண்டுகளாக பாகிஸ்தான் ராணுவத்தை எதிர்த்து போராடி வருகிறது. மேலும், மாகாணத்தின் ஒரு சிறிய பகுதியைக் கைப்பற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது.

சமீப ஆண்டுகளில், பலுசிஸ்தான் அமைப்புகள் மாகாணத்தின் பெரும் பகுதியைக் கைப்பற்றியிருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்களைப் பரப்பி வந்தன. பாகிஸ்தான் அரசு பலுச் மக்களுக்கு எதிராக வன்முறையை ஏவி, அடக்குமுறையில் ஈடுபடுவதாகவும் அவை குற்றம்சாட்டின.

ஆனால், பாகிஸ்தான் அரசு இந்தக் கருத்துகளை மறுத்து வந்தது.

தற்போது, பலுசிஸ்தான் குடியரசு விடுதலை அடைந்ததாக சமூக வலைதளங்களில் பரவி வரும் ஆவணங்கள் குறித்து பாகிஸ்தான் அரசு அமைதி காத்து வருகிறது.

அரசின் அதிகாரப்பூர்வமான மறுப்பு, இந்தச் செய்தியை சர்வதேச அளவில் பேசுபொருளாக்கிவிடும் என்ற அச்சம் காரணமாக பாகிஸ்தான் அரசு அமைதியாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

பாகிஸ்தான் - பலுசிஸ்தான் வரலாற்றுப் பிரச்சனை என்ன?

1947-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சி முடிவடைந்தபோது, பலுசிஸ்தான் பகுதியில் இருந்த கலாத் சமஸ்தானம் தனி நாடாக இருந்தது. பின்னர், 1948-ஆம் ஆண்டு அது பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்டது. இந்த இணைப்பு, அப்போதைய ஆட்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அதிகாரப்பூர்வமாக மேற்கொள்ளப்பட்டது என பாகிஸ்தான் அரசு தெரிவிக்கிறது.

ஆனால், பலுசிஸ்தான் வலுக்கட்டாயமாக பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்டதாகவும், அது சட்டவிரோதமான ராணுவ நடவடிக்கை என்றும் பலுசிஸ்தான் தேசியவாத அமைப்புகள் தெரிவிக்கின்றன. மேலும், இப்பகுதியில் உள்ள எண்ணெய் மற்றும் கனிம வளங்கள் பாகிஸ்தான் அரசால் சுரண்டப்படுவதாகவும் அவை குற்றம்சாட்டி வருகின்றன.

பலுசிஸ்தான் மக்கள் பேசும் பலுச்சி மொழி, பாகிஸ்தானில் தேசிய மொழியாக அங்கீகரிக்கப்படவில்லை. அத்துடன், பலுச்சி மொழி திட்டமிட்டு ஒடுக்கப்படுவதாகவும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். பலுச் மக்களின் தனித்துவமான தேசிய அடையாளத்தை பாகிஸ்தான் அரசு அழிக்க முயல்வதாக அங்குள்ள மக்கள் கருதுகின்றனர்.

பலுச்சி மொழிக்கு கல்வி நிறுவனங்களிலோ அல்லது அரசாங்க நிர்வாகத்திலோ போதிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்றும், அது திட்டமிட்டு ஓரங்கட்டப்படுவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

பலுச் மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் அமைப்புகள் மற்றும் செயற்பாட்டாளர்கள் மீதான கைதுகள், ‘காணாமல் ஆக்கப்படுதல்’ (Enforced disappearances), ராணுவ நடவடிக்கைகள் ஆகியவை இதற்கு சான்றுகளாகச் சுட்டிக்காட்டப்படுகின்றன.

1960-களில் பலுசிஸ்தான் விடுதலை முன்னணி (BLF) தொடங்கப்பட்டு, பாகிஸ்தானுக்கு எதிராகப் பல்வேறு போராட்டங்கள் மற்றும் ஆயுத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் ராணுவ அமைப்பான பலுசிஸ்தான் விடுதலைப் படை (BLA), 2000-ஆம் ஆண்டுக்குப் பிறகு பல்வேறு தாக்குதல்களை நடத்தியுள்ளது. மேலும், சில துணை அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன.

கடந்த ஆண்டு, BLA அமைப்பை அமெரிக்கா தீவிரவாத அமைப்பாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு, கடந்த ஆண்டைப் போல அமெரிக்கா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே இணக்கமான உறவு இல்லாத நிலையில், இந்தச் சிக்கலை பாகிஸ்தான் அரசு எவ்வாறு கையாளும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்