வடக்கு அமெரிக்காவுக்கு கிழக்கே, பனாமா கால்வாய்க்கு அருகில் அமைந்துள்ளது பெர்முடா தீவு. இந்த தீவிலிருந்து புளோரிடா மற்றும் புவேர்ட்டோ ரிக்கோ தீவு ஆகியவற்றுக்கு இடைப்பட்ட கடல்பகுதி பெர்முடா முக்கோணம் என அழைக்கப்படுகிறது. இதை சாத்தானின் முக்கோணம் என்றும் மக்கள் அழைக்கிறார்கள்.
காரணம் அந்த பகுதிக்கு செல்லும் கப்பல்கள் பல மாயமாக காணாமல் போயிருக்கின்றன. பெர்முடா முக்கோணத்தின் அருகே செல்லும் போது திசை காட்டிகள் செயலிழக்கின்றன என்று முதன் முறையாகக் கண்டறிந்து கூறியவர் கொலம்பஸ். அந்தப் பகுதியில் வானத்தில் ஓர் எரிப்பந்தைக் கண்டதாகவும் அவர் கூறியிருக்கிறார். அதன்பின் 1872-ம் ஆண்டு ‘மேரி செலஸ்டி’என்கிற கப்பலும், 1918-ம் ஆண்டு ‘யு.எஸ்.எஸ் சைக்ளோப்ஸ்’ என்கிற கப்பலும் சில நூறு பயணிகளுடன் காணாமல் போனது.
1945-ம் ஆண்டு பிளைட் 19 வகையைச் சேர்ந்த 5 ராணுவ விமானங்கள் அந்தப் பகுதியில் பறக்கும்போது காணாமல் போயின. 1949-ல் ஜமைக்கா நாட்டுக்குச் சொந்தமான பயணிகள் விமானம் 39 பயணிகளுடன் மாயமானது. இந்த சம்பவங்களுக்கு அறிவியல்பூர்வமான விளக்கம் இல்லை என்பதனால் இது மர்மமான பகுதியாக பார்க்கப்படுகிறது.
செப்டம்பர் 7ம் தேதி திங்கட்கிழமை புளோரிடாவில் உள்ள மியாமி எக்ஸிகியூட்டிவ் விமான நிலையத்தை நோக்கிப் பறந்து கொண்டிருந்த விமானம் ஒன்று விமானக் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்தது.
அது ஐந்து இருக்கைகள் கொண்ட PA-34 Piper விமானம். விமானத்தை இயக்கவர் 80 வயதான மாரியோ லாமர் சீனியர். இவருக்கு 40 ஆண்டுகாலம் விமானம் ஓட்டிய அனுபவம் உள்ளது. அவரது மனைவி 79 வயதான கிலியின் லாமர் மற்றும் அவர்களின் பேரக் குழந்தைகளான 28 வயதான சோஃபி சோசா, 22 வயதான கிறிஸ்டியன் சோசா.
பஹாமாஸில் விடுமுறையைக் கழித்துவிட்டு மியாமிக்கு திரும்பிய இவர்கள், பெர்முடா முக்கோணம் என அழைக்கப்படும் பகுதியின் அருகே வந்தபோது விபத்துக்கு உள்ளானதுதான் இப்போது மீண்டும் கிளம்பியிருக்கும் பரபரப்புக்கு காரணம்.
பஹாமா அதிகாரிகளின் கூற்றுப்படி, இது செப்டம்பர் 7 ஆம் தேதி உள்ளூர் நேரப்படி காலை 10:12 மணியளவில் கிரேட் ஹார்பர் கே-விலிருந்து புறப்பட்டது. ஆண்ட்ரோஸ் தீவிற்கு மேற்கே சுமார் 13 மைல் தொலைவில் இருந்தபோது, காலை 11:04 மணியளவில் அதன் கடைசி பதிவு செய்யப்பட்ட தொடர்பு கிடைத்தது.
ராயல் பஹாமாஸ் பாதுகாப்புப் படை, பஹாமாஸ் வான் கடல் மீட்பு சங்கம் மற்றும் அமெரிக்க கடலோரக் காவல்படை இணைந்து தேடுதல் வேட்டை நடத்தியும் முதலில் உடல்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
பின்னர் அதிகாரிகள் மற்றும் உறவினர்கள் படகுகளில் சென்று உடல்களை மீட்டுள்ளனர்.
பெர்முடா முக்கோணத்தில் படகுகள், கப்பல்கள் அல்லது விமானங்கள் மாயமாக போவதற்கு அறிவியல் பூர்வமான காரணங்கள் எதுவும் இல்லை.
மேலும் இந்த பகுதி வழியாக சென்றாலே மரணம் தானா என சிலர் அஞ்சுகின்றனர். ஆனால் இது ஒரு பரபரப்பான போக்குவரத்துப் பாதையாக இருந்து வருகிறது. தினமும் நூற்றுக்கணக்கான வணிக ரீதியிலான பயணிகள் விமானங்கள், சரக்கு விமானங்கள், சொகுசுப் படகுகள் (Cruise ships) மற்றும் சரக்குக் கப்பல்கள் இந்தப் பகுதியை எந்தவிதப் பிரச்சினையுமன்றி பாதுகாப்பாகக் கடந்து செல்கின்றன.
கடந்த சில தசாப்தங்களில் நடந்த விபத்துகளுக்கு போக்குவரத்து நெரிசலே கூட காரணமாக இருந்திருக்கின்றன.
அமெரிக்கக் கடற்படை, அமெரிக்கக் கடலோரக் காவல்படை மற்றும் சர்வதேசப் போக்குவரத்து அமைப்புகளின் ஆய்வின்படி, உலகின் பிற கடல் பகுதிகளை ஒப்பிடும்போது பெர்முடா முக்கோணத்தில் விபத்துகளின் சதவீதம் அதிகமாக இல்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் பெரிதாகப் பேசப்படுவதால் இந்த பகுதி குறித்த கட்டுக்கதைகள் இன்றும் நிலைத்திருக்கின்றன.
திடீர் புயல்கள், சுழல் காற்றுகள், கடல் நீரோட்டங்கள் மற்றும் மனிதத் தவறுகளாலேயே அங்கு விபத்துகள் நடந்துள்ளன. சில விபத்துகளில் உடல்கள் மற்றும் உடைந்த பாகங்கள் கிடைக்காததை வைத்து சிலர் மர்மக்கதைகளைப் பேசி வருகின்றனர்.
மாரியோ லாமர் சீனியர் மற்றும் அவரது குடும்பத்தினர் மரணத்துக்கு காரணம் விசாரணையில் தெரியவரும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.