நேபாளத்தில் நேற்று இரவு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகியுள்ளது. திடீர் அதிர்வு மக்களை தூக்கத்திலிருந்து எழுப்பி வீடுகளை விட்டு வெளியேற செய்தது.
நள்ளிரவு நிலநடுக்கத்திற்குப் பிறகு இதுவரை என்ன நடந்தது? இந்த ஆண்டு நேபாளத்தில் எத்தனை நிலநடுக்கம் ஏற்பட்டது? நேபாள பிரதமர் கூறியது என்ன? ராணுவத்தின் மீட்பு நடவடிக்கை? தெரிந்து கொள்வோம்...
காலையில் ஒளி சூழ்ந்த போது, நிலநடுக்கத்தால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட்டது தெரிய வந்தது. அதிக அளவிலான வீடுகள் அழிக்கப்பட்டதுடன் ஆறு பேர் இறந்ததும் உறுதி செய்யப்பட்டது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ராணுவம் தீவிரமாக இறங்கியது.
இடிபாடுகளுக்கு அடியில் புதையுண்டு காயமடைந்தவர்களை வெளியேற்றும் பணியில் இராணுவம் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். புள்ளிவிவரங்களை நாம் பார்த்தால், நேபாளத்தில் இந்த ஆண்டு ஏற்பட்ட மிக பெரிய அளவிலான நிலநடுக்கம் இதுவாகும்.
நேற்று இரவு நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் வட இந்தியாவையே உலுக்கியது. விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, நிலநடுக்கத்தின் மையம் நேபாளத்தில் கிழக்கு-தென்கிழக்கு திசையில் பித்தோராகரில் இருந்து 90 கிமீ தொலைவில் பூமிக்கு 10 கிமீ ஆழத்தில் இருந்தது. அதன் ரிக்டர் அளவு 6.6 ஆக இருந்தது எனவும் இது இந்த ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட மிக தீவிரமான நிலநடுக்கம் எனவும் தெரிவித்துள்ளனர் விஞ்ஞானிகள்.
நேபாள நிலநடுக்கவியல் துறையின் தரவுகளின்படி, இரண்டு நாட்களில் மூன்றாவது முறையாக நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது. நள்ளிரவு நிலநடுக்கத்திற்கு முன், செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 9.56 மணியளவில் டோட்டி மாவட்டத்தில் 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதே நேரத்தில், காலை 9:07 மணிக்கு 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் டோட்டி மாவட்டத்திலும் உணரப்பட்டது.
டோட்டி மாவட்டத்தின் முதன்மை மாவட்ட அதிகாரி கல்பனா ஷ்ரேஸ்தா கூறுகையில், ஆறு பேர் இறந்ததைத் தவிர, ஐந்து பேர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது எனவும் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் கூறியுள்ளார். அதே நேரத்தில், பல்வேறு இடங்களில் பத்துக்கும் மேற்பட்ட வீடுகளும் சேதமடைந்துள்ளதாகவும் உயிரிழந்தவர்களில் ஒரு பெண்ணும் இரண்டு குழந்தைகளும் அடங்குவர். எனவும் தெரிவித்துள்ளார் கல்பனா.
வரவழைக்கப்பட்ட ராணுவம்:
நேபாளத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ராணுவம் வரவழைக்கப்பட்டது. சில பகுதிகளில் அதிக சேதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை, சேதம் குறித்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ராணுவம் மற்றும் பிற நிவாரண குழுக்களால் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
நிலநடுக்கத்திற்குப் பிறகு, நேபாள பிரதமர் ட்வீட் செய்து, ”நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்ட பகுதிகளில் காயமடைந்தவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் உடனடி மற்றும் முறையான சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.” எனப் பதிவிட்டுள்ளார்.