நிஜ 'லேடீஸ் ராணுவப்படை..' 9 வீரர்கள் மரணம் - பாகிஸ்தானை கதிகலங்க வைத்த பலூசிஸ்தான் பெண்கள் BLA
உலகம்

நிஜ 'லேடீஸ் ராணுவப்படை..' 9 வீரர்கள் மரணம் - பாகிஸ்தானை கதிகலங்க வைத்த பலூசிஸ்தான் பெண்கள்

சமீப காலங்களில் பலூசிஸ்தான் போராளிகளின் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. ஒருபுறம் தாலிபான், மறுபுறம் பலூசிஸ்தான் வீரர்கள் தாக்குதல் நடத்துவதால், பாகிஸ்தானுக்கு பாதுகாப்புச் சவால்கள் கவலையை ஏற்படுத்தியுள்ளன.

மாலை முரசு செய்தி குழு

பாகிஸ்தான் அரசுக்கு எதிராக உள்நாட்டு யுத்தத்தை நடத்தி வருகிறது பலூசிஸ்தான் விடுதலைப் படை. இவர்களின் புதிய பெண்கள் படைப்பிரிவான கரிமா ஆயுதத் தாக்குதல் பிரிவு (KAAD) நடத்திய தாக்குதல் குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

அந்தக் காணொளியில் அணிவகுத்து வரும் பாகிஸ்தான் ராணுவ வாகனங்கள் மீது பலூசி படையினர் தாக்குதல் நடத்துவது தெரிகிறது. இந்தத் தாக்குதலில் 9 வீரர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கடந்த செப்டம்பர் 22 அன்று, துர்பத் நகர் அருகே பலூசிஸ்தானில் உள்ள சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட (CPEC) நெடுஞ்சாலையில் பயணித்த மூன்று வாகனங்கள் கொண்ட Quick Response Force (QRF) வாகன அணிவகுப்பின் மீது, துப்பாக்கி ஏந்திய KAAD போராளிகள் நடத்திய தாக்குதலின் நேரடிக் காட்சிகளை இந்தக் காணொளி காட்டுகிறது.

இந்த வீடியோவில் ஒரு பெண் கமாண்டர் திட்டத்தை எடுத்துரைப்பதும், முறையான பயிற்சி பெற்றவர்களைப் போல பெண்கள் தங்கள் இடங்களுக்குச் சென்று துப்பாக்கிகளுடன் தயாராவதும், பாகிஸ்தான் ராணுவ வாகனத்தைச் சுடுவதும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

BLF செய்தித் தொடர்பாளர் மேஜர் குவாஹ்ராம் பலோச், இந்தத் தாக்குதலின்போது மகளிர் பிரிவுக்கு குர்பான் பிரிவு படையினர் ஆதரவு அளித்ததாகவும், சண்டையில் ஒரு குர்பான் பிரிவு வீரர் உயிரிழந்ததாகவும் கூறியிருக்கிறார்.

சமீப காலங்களில் பலூசிஸ்தான் போராளிகளின் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. ஒருபுறம் தாலிபான், மறுபுறம் பலூசிஸ்தான் வீரர்கள் தாக்குதல் நடத்துவதால், பாகிஸ்தானுக்கு பாதுகாப்புச் சவால்கள் கவலையை ஏற்படுத்தியுள்ளன.

யார் இந்த பலூசிஸ்தான் போராளிகள்?

பலூசிஸ்தான் பாகிஸ்தான் நாட்டின் மிகப் பெரிய மாகாணமாகும். பலூசி மொழி பேசும் இந்த மக்கள், தனி நாடு கேட்டு பல ஆண்டுகளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். 2019 முதல் தற்கொலைக் குண்டுவெடிப்புகள் மற்றும் உயர்மட்ட நபர்கள் மீதான தாக்குதல்கள் உட்பட பல தீவிரவாத நடவடிக்கைகளுக்கு அந்த அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

பாகிஸ்தானும் அமெரிக்காவும் இன்னும் சில நாடுகளும் இந்த அமைப்பை தீவிரவாத குழுவாக அறிவித்துள்ளனர்.

1948-ல் பலூசிஸ்தான் வலுக்கட்டாயமாகப் பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்டதாகவும், இங்குள்ள எண்ணெய், கனிம வளங்கள் பாகிஸ்தான் அரசால் சுரண்டப்படுவதாகவும் குற்றம்சாட்டி வரும் இந்த அமைப்பு, கடந்த மே மாதம் பலூசிஸ்தான் தனி நாடாக உருவானது என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்