பிரேசிலில் சாகச விளையாட்டாக நடத்தப்பட்ட பஞ்சி ஜம்பிங்-ன் போது ஏற்பட்ட அலட்சியம் காரணமாக 21 வயது இளம் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு கயிறு சரியாக இணைக்கப்படாத நிலையில் பாலத்தின் மீது இருந்து தள்ளப்பட்டதால், அவர் சுமார் 40 மீட்டர் உயரத்தில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிரிழந்தவர் மரியா எடுவார்டோ ரோட்ரிக்ஸ் டி ஃப்ரீடாஸ் (21) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் பிரேசிலின் சாவோ பாலோ மாநிலத்தில் உள்ள லிமெய்ரா பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற போன்டே டோ எஸ்கெலெட்டோ (எலும்புக்கூட்டுப் பாலம்) என்ற இடத்தில் நடைபெற்ற பஞ்சி ஜம்பிங் சாகசத்தில் கடந்த சனிக்கிழமை பங்கேற்றிருந்தார்.
சம்பவத்திற்கு முன்பாக, மரியா அந்த இடத்தில் எடுத்த புகைப்படங்கள், நிகழ்ச்சியில் பங்கேற்றதற்கான டோக்கன் பேண்ட் மற்றும் அங்குள்ள ஊழியர்களுடன் எடுத்த செல்பிகளை தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்திருந்தார். இதனால் அவர் மிகுந்த உற்சாகத்துடன் இந்த சாகசத்தில் பங்கேற்றது தெரியவந்துள்ளது. ஆனால், சம்பவத்தின் போது அங்கிருந்த ஊழியர்கள் பாதுகாப்பு நடைமுறைகளை முழுமையாக பின்பற்றவில்லை என்று கூறப்படுகிறது. சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வரும் காணொளியில், மரியா மூன்று ஊழியர்களால் தூக்கிச் செல்லப்பட்டு பாலத்தின் விளிம்பில் இருந்து கீழே தூக்கி போடுவது பதிவாகியுள்ளது.
அவர் குதித்த சில நொடிகளிலேயே, "கயிறு... கயிறு இணைக்கப்படவில்லை!" என்று பதற்றத்துடன் சிலர் கத்தும் குரல்கள் கேட்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போதுதான் பாதுகாப்பு கயிறு அவரது உடலுடன் இணைக்கப்படவில்லை என்பதை ஊழியர்கள் உணர்ந்ததாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த அவசர மருத்துவ சேவை குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். எனினும், மரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
சம்பவம் தொடர்பாக முதற்கட்ட விசாரணை நடத்திய போலீசார் ஆறு பேரை விசாரணைக்காக காவலில் எடுத்தனர். பின்னர் 27, 32 மற்றும் 42 வயதுடைய மூன்று ஆண்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது "இறுதி விளைவு மரணமாக இருக்கலாம் என்பதை அறிந்தே ஆபத்தான செயலில் ஈடுபட்டனர்" என்ற அடிப்படையில் கொலைக்கான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.,இந்த விபத்து எப்படி நடந்தது, பாதுகாப்பு நடைமுறைகளில் யார் அலட்சியம் காட்டினர், சம்பவத்திற்கு நேரடி பொறுப்பு யாருக்கு உள்ளது என்பதைக் கண்டறிய பிரேசில் அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் உலகம் முழுவதும் சாகச விளையாட்டுகளின் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.