“தன் சமகாலத்தை பிரதிபலிப்பவனே கலைஞன்’ - என்ற கறுப்பின பாடகி நினா சிமோனின் புகழ்பெற்ற ஒரு வாக்கியம் உண்டு. அந்த வகையில் தன் சமகால சிக்கல்களை ஊமைப்படங்கள் மூலம் கடத்திய ஆகச்சிறந்த கலைஞர் சார்லி சாப்ளின். ஒரே ஆண்டில் 35 படங்களில் நடித்த சார்லஸ் ஸ்பென்சர் சாப்ளின் 1889 -ஆம் ஆண்டு ஏப்ரல் 16 அன்று (இன்றய தேதி) லண்டனின் மேற்கு பகுதியில் பிறந்தார்.
அசாத்திய திறமையாளனாகவும் வெற்றியின் உச்ச நட்சத்திரமாகவும் அறியப்பட்ட சார்லி சாப்ளினின் குழந்தை பருவம் துயரங்களால் நிறைந்தது. சாப்ளினின் பெற்றோர் மேடைப்பாடகர்களாக இருந்தனர்.சிறு வயதிலேயே அவரின் தந்தை குடும்பத்தை கைவிட்டார். 14ஆவது வயதில் தாயின் மனநலமும் சீர்கெட்டு காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். இதன் நீட்சியாக அவரை மேலும் வாட்டியெடுக்க வறுமையும் சேர்ந்துகொண்டது. தன்னை இந்த ஏழ்மையிலிருந்து காத்துக்கொள்ள இந்த கலைஞன் கையிலெடுத்த ஆயுதம் கலை. கிரேக்கத்தில் ஒரு சொற்பதம் உண்டு “alchemist’ - ரசவாதம், விவரிக்க முடியாத அற்புதமான மாற்றத்தை அல்லது குணப்படுத்தும் தன்மை என்று அர்த்தம். தன காயங்களை எல்லாம் கலையால் வியக்கத்தக்க வகையில் உருமாற்றிய ஒரு கலைஞன் தான் சாப்ளின்.
தடைகளை கட்டுடைத்த சாப்ளின்
வாழக்கை சில மனிதர்கள் மீது தனது கோர முகத்தை காட்டும். ஆனால் அந்த மனிதர்களே காலத்தின் மீது தங்கள் சுவடுகளை ஆழமாக பதித்தவராக இருப்பார்கள். சார்லி சாப்ளின் தனது 5 ஆவது வயதிலேயே மேடை நாடகங்களில் நடிக்க துவங்கினார். ‘The Eight Lancashire Lads’ என்ற குழந்தைகளுக்கான நாடக கம்பெனியில் சேர்ந்த இவர் தனக்கே உரிய “டேப் டேன்ஸ்” மூலம் எல்லோராலும் அறியப்பட்டார்.
சாப்ளின் தனது 21 ஆவது வயதில் அமெரிக்காவை சேர்ந்த ‘கீ ஸ்டோன் ஸ்டுடியோஸ்’ என்ற அமெரிக்க கம்பெனியில் இணைந்து அவர்களோடு பயணித்தார். 1914 ஆம் ஆண்டு ‘மேக்கிங் எ லிவிங்’ என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். ஆனால் அந்த படம் சரியாக போகவில்லை, அதனை தொடர்ந்து , Kid Auto Races at Venice படத்தில் நடித்தார், ட்ராஜிக் காமெடி என்று சொல்லப்படுகின்ற பாணியில் தொள தொள பாண்ட் அணிந்து, சிறிய மேசை வைத்து, தலையில் தொப்பியோடு, கைத்தடியை ரோட்டில் தட்டிக்கொண்டு வந்து நின்றது கேமரா முன்பு மட்டுமல்ல, போராலும், பொருளாதார வீழ்ச்சியாலும், சோர்வுற்றிருந்த மனித குலத்தின் முன்பு சிங்கிள் டையலாக் கூட இல்லாமல் வெறும் வாழைப் பழத்தோலில் வழுக்கி விழுந்து மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தார். இந்த நகைச்சுவை பாணியே அவருக்கு பெரிதும் கைகொடுத்தது. பஸ்டர் கீட்டோன், ரோவன் அட்கின்சன் (மிஸ்டர் பீன்) என் வடிவேலு வரை பலர் இவரின் பாணியையே பின்பற்றி வருகின்றனர்.
ஒரே வருடத்தில் 35 படங்களில் நடித்த இந்த சாதனை மன்னன் ஒரு வாரத்திற்கு 150 டாலர் ஊதியமாக பெற்றார். இன்றைய மதிப்பில் அது 2500 டாலர்களுக்கு சமம். அமெரிக்காவில் புகழ் பெற்ற நட்சத்திரமாக விளங்கிய சாப்ளின்தான் நகைச்சுவை நடிகரிலிருந்து இருந்து தயாரிப்பாளராக மாறிய முதல் நபராவர். இன்றளவும் பாவனை நாடக (mime) கலைஞர்களின் முடிசூடா மன்னனாக இருந்து வரும் சாப்ளினின் ‘மாடர்ன் டைம்ஸ்’ படத்தை தயாரித்து வெளியிட்டார். தொழிலாளிகளுக்கு நேரும் அநீதிகளை மையமாக வைத்து நகரும் இப்படத்தில் அனைவரும் பேசுவர். சாப்ளின் மட்டும் ஒரு வார்த்தை கூட பேசாது தனது மாஸ்டர் பீஸை நிறைவு செய்திருப்பார். “தி கிரேட் டிக்டேட்டர்’ படத்தின் இறுதிக்காட்சி இன்றளவும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கும். அவர் பேசி நடித்த முதல் படமும் இதுவே ஆகும். ஹிட்லரையும் அவரின் சர்வாதிகார போக்கையும் விமர்சித்து எடுக்கப்பட்ட இந்த படத்தின் இறுதி காட்சிகளில் தான் உண்மையில் ஒரு ‘சினிமா போராளி தான்’ என்று நிரூபித்திருப்பார்.
சாப்ளின் தான் ஒரு போராளி என்று எங்கும் நிறுவியதே இல்லை. நான் மக்களை மகிழ்விக்கும் கலைஞன் என்றே பறை சாற்றுவர்.
துயரம் சூழ்ந்த குடும்ப வாழ்க்கை
இளம் வயதிலிருந்து அரவணைப்பற்ற குடும்ப சூழலில் வாழ்ந்த சாப்ளினின் முதல் மூன்று திருமணமும் தோல்வியிலேயே முடிந்தது. உலகையே சோகத்தில் இருந்து மீட்ட அந்த அசாத்திய கலைஞன் ‘நான் மழையில் நடக்கிறேன்; நான் அழுவது வெளி உலகத்திற்கு தெரியாது’ எனகூறியிருந்தார். ஆனால் காற்று ஒரே திசையில் வீசுவதில்லை. அவர் ‘ஒனா’ என்ற பெண்ணை 4 ஆவதாக மணந்தார். ஒனா தான் இறுதிக்காலம் வரை அவரோடு கூட இருந்தார்.
வறுமையின் பிடியிலிருந்து தன் கலையின் மூலம் ஆகச்சிறந்த படைப்புகளை உருவாக்கி, இன்றளவும் பல நடிகர்களின் முன்னோடியாக விளங்கும் இந்த பிதா மகனின் 136 ஆவது பிறந்த தினம் இன்று. விதியின் போக்கை கலையின் மூலம் மாற்ற முடியும் என்பதற்கு சாப்ளின் ஒரு மாபெரும் சாட்சி.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்