சீனாவின் தொலைதூர பாலைவனப் பகுதியில் மிக பிரம்மாண்டமான ராணுவ தளம் ஒன்று உருவாகி வருகிறது. அமெரிக்கா ஒருவேளை தாக்குதல் நடத்தினாலும், அதை எதிர்கொண்டு சீனா பதிலடி கொடுக்கும் வகையில் இந்த தளம் அமைக்கப்படுவதாக பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே சீனாவின் ஏவுகணைகள் அமெரிக்க நகரங்களை தாக்கும் திறன் கொண்ட நிலையில், தற்போது இந்த புதிய கட்டமைப்புகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
ராய்ட்டர்ஸ் நிறுவனம் ஆய்வு செய்த செயற்கைக்கோள் புகைப்படங்களின்படி, சீனாவின் நீண்ட தூர ஏவுகணைகள் உள்ள இடங்களுக்கு அருகில் ஏவுகணை ஏவுதளங்கள், பதுங்கு குழிகள் மற்றும் தகவல் தொடர்பு மையங்கள் என ஒரு பிரம்மாண்ட வலைப்பின்னலையே சீனா உருவாக்கி வருகிறது. 80-க்கும் மேற்பட்ட ஏவுதளங்கள் மற்றும் மின்னணு போர்முறைக்கான வசதிகள் அங்கு இருப்பதை இந்த படங்கள் உறுதிப்படுத்துகின்றன. இந்த கட்டுமானப் பணிகள் நிலத்தில் இருந்து ஏவப்படும் சீனாவின் அணு ஆயுதங்களை பாதுகாக்கவும், அவற்றை சிறப்பாக இயக்கவும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கருதப்படுகிறது.
இந்த கட்டுமானப் பணிகள் ஆயிரக்கணக்கான சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பாலைவனத்தில் விரிந்து காணப்படுகின்றன. இது சீனாவின் அணு ஆயுத வலிமையை பன்மடங்கு அதிகரிப்பதோடு, வியூகம் சார்ந்த அணு ஆயுத தடுப்பு முறையை வலுப்படுத்துவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். தைவான் விவகாரத்தில் அமெரிக்காவுடன் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், சீனாவின் இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெறுகிறது. சீனா தனது அணு ஆயுதத் திட்டங்கள் குறித்து வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதில்லை என சர்வதேச அளவில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
பாலைவனத்தில் அமைக்கப்பட்டுள்ள எண்கோண வடிவிலான இரண்டு பெரிய தளங்கள் தான் இந்த கட்டுமானங்களின் மையப்பகுதியாக உள்ளன. இவை ஹமி ஏவுகணை தளங்களுக்கு அருகில் அமைந்துள்ளன. அங்கு ராணுவ வாகனங்கள், பதுங்கு குழிகள் மற்றும் ஏவுகணைகளை மறைத்து வைக்கும் தளங்கள் காணப்படுகின்றன. சமீபத்தில் அங்கு ராணுவ பயிற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுபோக, எதிரிகளின் ஏவுகணைகளை 90 வினாடிகளுக்குள் கண்டறியும் நவீன எச்சரிக்கை அமைப்புகளையும் சீனா பலப்படுத்தி வருகிறது.
எதிரிகளின் தாக்குதலை சமாளித்து, பதிலடி கொடுக்கும் வகையில் சீனா மேற்கொள்ளும் இந்த முயற்சி மிக அசாதாரணமானது என பாதுகாப்பு வல்லுநர்கள் வியக்கின்றனர். அமெரிக்கா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் ஏவுகணைகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் நிலையில், சீனா இத்தகைய பிரம்மாண்டமான பாதுகாப்பு கட்டமைப்புகளை உருவாக்கி வருவது உலக நாடுகளிடையே கவனத்தை ஈர்த்துள்ளது. தற்போதைய சூழலில், சீனாவின் இந்த அணு ஆயுத விரிவாக்கம் சர்வதேச அரசியலில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.