China Spy Official Death Sentence 
உலகம்

ரூ.1.25 கோடிக்கு நாட்டின் ரகசியங்களை விற்றாரா? 100-க்கும் மேற்பட்ட தகவல்கள் கசிவு... சீன அதிகாரிக்கு மரண தண்டனை!

இதன் மூலம் மா பணியாற்றிய துறையின் முக்கியத் தகவல்களைப் பெற முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது...

மாலை முரசு செய்தி குழு

வெளிநாட்டு உளவு அமைப்புக்கு நாட்டின் ரகசியத் தகவல்களை வழங்கியதாகக் குற்றம்சாட்டப்பட்ட சீன அரசு அதிகாரி ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அரசு ஆவணங்களில் இருந்த முக்கியமான தகவல்களைத் திருடி வெளிநாட்டுக்கு அனுப்பியதுடன், இதற்காக ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை அவர் பெற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நட்பு என்ற பெயரில் தொடங்கிய பழக்கம், பின்னர் பண ஆசை மற்றும் மிரட்டல் மூலம் உளவு வேலையாக மாறியதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் சீனாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் அரசு ரகசியங்களைப் பாதுகாக்கும் நிர்வாகத்துடன் தொடர்புடைய வெளியீட்டு நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, குற்றவாளியாக அடையாளப்படுத்தப்பட்ட நபரின் குடும்பப் பெயர் 'மா' (Ma) மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் எந்த அமைச்சகத்தில் பணியாற்றினார், எந்த நாட்டுக்காக உளவு பார்த்தார், எந்த நீதிமன்றம் அவருக்குத் தண்டனை வழங்கியது போன்ற விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

மா வெளிநாட்டில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, கைலின் (Kailin) என்ற பெயரில் அடையாளப்படுத்தப்பட்ட வெளிநாட்டு உளவு அமைப்பைச் சேர்ந்த நபர் அவருடன் பழகத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் சீன மொழியைக் கற்றுக்கொள்ள விரும்புவதாகக் கூறி மாவுடன் நட்பை ஏற்படுத்தியுள்ளார். இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசியுள்ளனர். நாளடைவில் அவர்களது உரையாடல்களின் போக்கு மாறத் தொடங்கியுள்ளது. சீனாவின் அரசுத் துறை செயல்பாடுகள், வெளிநாடுகளில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் முக்கியமான நிர்வாகத் தகவல்கள் குறித்து கைலின் கேள்விகளை எழுப்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மா பணியாற்றிய துறையின் முக்கியத் தகவல்களைப் பெற முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் கைலின் தனது சக ஊழியர் ஒருவரையும் மாவுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். அதன்பிறகு மா ஏற்கெனவே சில ரகசியத் தகவல்களை வெளியிட்டிருப்பது அவருக்குத் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. இதனை சீன அதிகாரிகளிடம் தெரிவித்து விடுவதாக மிரட்டிய அந்த நபர், தொடர்ந்து தங்களுக்கு ஒத்துழைக்காவிட்டால் பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரித்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் வேறு வழியின்றி மா அவர்களுடன் ஒத்துழைக்க ஒப்புக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரகசியம் காப்பது மற்றும் விசுவாசமாக இருப்பது தொடர்பான ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டதாகக் கூறப்படுகிறது. அவருக்கு மாதந்தோறும் குறிப்பிட்ட தொகை வழங்கப்பட்டதுடன், தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்காக மடிக்கணினி ஒன்றும் வழங்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பின்னர் வெளிநாட்டுப் பணியை முடித்துக்கொண்டு சீனாவுக்குத் திரும்பிய மா, அங்கிருந்தபடியே தனது உளவு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. அலுவலகத்தில் பணியாற்றும்போது தனக்குக் கிடைத்த ரகசிய ஆவணங்களில் இருந்து முக்கியமான தகவல்களைச் சேகரித்துள்ளார். இரவு வீட்டுக்குத் திரும்பியதும் அவற்றைத் தொகுத்து, உளவு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் இணையதளங்கள் மூலம் வெளிநாட்டு அமைப்புக்கு அனுப்பியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவ்வாறு நூற்றுக்கும் மேற்பட்ட தகவல் அறிக்கைகளை அவர் அனுப்பியதாகக் கூறப்படுகிறது. அவற்றில் 35 தகவல்கள் சீனாவின் தேசிய ரகசியங்களாக வகைப்படுத்தப்பட்டிருந்தன. இதற்காக அவர் ஒரு மில்லியன் சீன யுவானுக்கும் அதிகமான தொகையைப் பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.1.25 கோடிக்கும் அதிகமாகும்.

விசாரணை நடத்திய நீதிமன்றம் மாவுக்கு மரண தண்டனை விதித்ததுடன், அவரது தனிப்பட்ட சொத்துகள் அனைத்தையும் பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது அரசியல் உரிமைகளும் வாழ்நாள் முழுவதும் பறிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.இந்த வழக்கில் இன்னும் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை. அவர் எப்போது கைது செய்யப்பட்டார், எப்போது தண்டனை விதிக்கப்பட்டது, எந்த நாட்டுக்கு ரகசியங்களை வழங்கினார், மரண தண்டனை ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டதா போன்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. இந்தத் தகவல்களை சுயமாக உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் சர்வதேச செய்தி நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன.

வெளிநாட்டு உளவு அமைப்புகள் பண ஆசை, நட்பு, உணர்ச்சிப்பூர்வமான உறவுகள் மற்றும் மிரட்டல் போன்ற வழிகளைப் பயன்படுத்தி அரசு அதிகாரிகளைத் தங்கள் வலையில் சிக்க வைக்க முயற்சிப்பதாக சீன அரசு எச்சரித்துள்ளது. நாட்டின் பாதுகாப்பு என்பது எல்லையில் பாதுகாப்புப் படையினர் கண்காணிப்பதோடு மட்டும் முடிந்துவிடுவதில்லை. முக்கியமான தகவல்களைக் கையாளும் அரசு அதிகாரிகளின் பொறுப்பும் நம்பகத்தன்மையும் அதில் மிக முக்கியமானவை என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் உணர்த்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்