Chinese AI short film viral Chinese AI short film viral
உலகம்

"வெறும் 35,000 ரூபாயில் உருவான ஏஐ படம்!" ஹாலிவுட்டையே அதிரவைத்த முன்னாள் ரயில் டிரைவர்! குவியும் பட வாய்ப்புகள்!

சீனாவில் உள்ள யுன்னான் மாகாணத்தைச் சேர்ந்த லியு ஜியு என்ற அந்த இளைஞர், 'ஜாம்பி ஸ்கேவெஞ்சர்' என்ற பெயரிலான இந்த ஏஐ குறும்படத்தை வெறும் 10 நாட்களில் உருவாக்கியுள்ளார்.

மாலை முரசு செய்தி குழு

சீனாவைச் சேர்ந்த 29 வயதான முன்னாள் ரயில் இன்ஜின் டிரைவர் ஒருவர், வெறும் 3,000 யுவான் (சுமார் 42,246 இந்திய ரூபாய்) பட்ஜெட்டில், 3.5 நிமிடங்கள் ஓடக்கூடிய ஒரு ஏஐ (செயற்கை நுண்ணறிவு) குறும்படத்தை உருவாக்கி இணையத்தில் பயங்கர வைரலாகியுள்ளார். இவருடைய இந்த அசாத்திய திறமை தற்பொழுது ஹாலிவுட் சினிமா உலகினரின் கவனத்தையே ஈர்த்துள்ளது. சவுத் சைனா மார்னிங் போஸ்ட் நாளிதழ் வெளியிட்டுள்ள தகவலின்படி, சீனாவில் உள்ள யுன்னான் மாகாணத்தைச் சேர்ந்த லியு ஜியு என்ற அந்த இளைஞர், 'ஜாம்பி ஸ்கேவெஞ்சர்' என்ற பெயரிலான இந்த ஏஐ குறும்படத்தை வெறும் 10 நாட்களில் உருவாக்கியுள்ளார். பிக்ஸர் நிறுவனத்தின் புகழ்பெற்ற 'வால்-இ' (WALL-E) கார்ட்டூன் படத்தால் ஈர்க்கப்பட்டு, ஒரு ரோபோவிற்கும் ஒரு பொம்மைக்கும் இடையே உள்ள காதலை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த மே 9 அன்று சீனாவின் சமூக வலைதளங்களில் வெளியான இந்த படம், முழுக்க முழுக்க ஏஐ தொழில்நுட்பக் கருவிகளை மட்டுமே பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காகப் பயன்படுத்தப்பட்ட சாஃப்ட்வேர் சந்தா கட்டணங்கள் மட்டுமே இந்த படத்தின் ஒட்டுமொத்த பட்ஜெட் ஆகும்.

லியு ஜியு சினிமா துறைக்குள் நுழைந்த கதை மிகவும் வித்தியாசமானது. அவர் ஆரம்பத்தில் ரயில் இன்ஜின் ஓட்டுதல் மற்றும் பராமரிப்பு தொடர்பான தொழில்நுட்பப் பள்ளியில் படித்துப் பட்டம் பெற்று, சுமார் 3 ஆண்டுகள் ரயில் டிரைவராகப் பணியாற்றினார். அதன் பிறகு, அந்த வேலையை விட்டுவிட்டு ஒரு திருமணப் புகைப்படக் கலைஞராக மாறினார். சினிமா, கலை அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற எந்தவொரு துறையிலும் அவருக்கு முறையான கல்விப் பின்னணி கிடையாது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், அவருடைய பெற்றோர் தங்களது புதிய ஹோட்டல் திறப்பு விழாவிற்காக ஒரு விளம்பர வீடியோவை உருவாக்கிக் தருமாறு கேட்டபோதுதான், அவர் முதன்முதலில் ஏஐ வீடியோ கருவிகளைப் பயன்படுத்திப் பழகத் தொடங்கினார். ஏஐ தொழில்நுட்பத்தில் மிக எதார்த்தமான வீடியோக்களை உருவாக்குவதற்கு சாதாரண கமாண்டுகளைக் கொடுப்பதை விட, தெளிவான கதைக்களத்தைக் கொடுப்பதுதான் முக்கியம் என்று லியு கூறுகிறார்.

ஒரு ரோபோ செய்யும் நகர்வுகளை மட்டும் ஏஐ-க்குச் சொல்வதை விட, அந்த நகர்வுகளுக்கான காரணம், வேகம் மற்றும் அதன் உணர்ச்சிகளைச் சேர்த்து பார்முலாவாகக் கொடுப்பதுதான் தனது ஸ்டைல் என்று லியு விளக்கியுள்ளார். இந்த 'ஜாம்பி ஸ்கேவெஞ்சர்' குறும்படம் ஆரம்பத்தில் சீனாவில் சாதாரண வரவேற்பைப் பெற்றிருந்தாலும், ஹாலிவுட்டைச் சேர்ந்த ஏஐ திரைப்பட இயக்குனர் பிஜே அசிட்டூரோ என்பவர் இதன் ஒரு சிறிய பகுதியை இணையத்தில் பகிர்ந்த பிறகே உலக அளவில் செம வைரலானது. ஒரு ரோபோ மாடு மேய்ப்பவன் நெருப்புக்கோழி மீது சவாரி செய்யும் அந்த காட்சியைப் பார்த்த அசிட்டூரோ, சமீபத்திய ஆண்டுகளில் தான் பார்த்த மிகச்சிறந்த குறும்படங்களில் இதுவும் ஒன்று என்று பாராட்டியதோடு, இந்த வீடியோவை உருவாக்கிய இயக்குனருக்குத் தனது நிறுவனத்தில் வேலை வழங்க விரும்புவதாகவும், அவரைத் தேடிக் கண்டுபிடித்துத் தருமாறும் இணையவாசிகளிடம் கோரிக்கை விடுத்தார்.

ட்விட்டர் பக்கத்தில் இது குறித்துப் பதிவிட்ட ஹாலிவுட் இயக்குனர், தம்மால் இந்த சீன இயக்குனரின் சமூக வலைதளக் கணக்குகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், அவரைப் பற்றித் தெரிந்தவர்கள் லிங்க் செய்யுமாறும் கேட்டுக்கொண்டார். இதனையடுத்து, இணையவாசிகள் இருவரையும் இணைத்ததைத் தொடர்ந்து, லியு ஜியு அந்த ஹாலிவுட் இயக்குனருக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். எனினும், தனக்கு ஆங்கிலம் பேசத் தெரியாது என்பதாலும், தற்போதைக்குத் சீனாவிலேயே தனது கவனத்தைச் செலுத்த விரும்புவதாலும், உடனடியாக அமெரிக்காவிற்கு வந்து வேலை செய்யும் திட்டத்தை அவர் மென்மையாக மறுத்துவிட்டார். இருந்தபோதிலும், ஹாலிவுட் இயக்குனரின் குழுவினருடன் அவர் தொடர்ந்து தொடர்பில் உள்ளார். அவர்கள் எதிர்காலத்தில் அமெரிக்காவின் பெரிய படத் திட்டங்களில் இணைந்து பணியாற்ற லியு-வுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். தற்போதைக்கு அமெரிக்கா செல்லும் திட்டம் இல்லை என்றாலும், அவர்கள் அங்கே தனக்குக் கிடைத்த நல்ல நண்பர்களைப் போல உணர்வதாக லியு தெரிவித்துள்ளார்.

திடீரெனக் கிடைத்த இந்த புகழின் காரணமாக, இந்த ஏஐ படம் உலகளவில் 6 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது. இருப்பினும், இந்த குறுகிய கால வெற்றியைப் பார்த்து தான் மயங்கிவிடப் போவதில்லை என்றும், தொடர்ந்து பல புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள விரும்புவதாகவும் லியு கூறியுள்ளார். இந்த 'ஜாம்பி ஸ்கேவெஞ்சர்' படத்தின் கதை மற்றும் உரிமைகளைச் சீனாவின் ஒரு முன்னணி திரைப்பட நிறுவனம் தற்பொழுது வாங்கியுள்ளது. இருப்பினும், அந்த கதையின் அடுத்தகட்ட உருவாக்கப் பணிகளுக்கு லியு ஜியு தான் தொடர்ந்து கிரியேட்டிவ் இயக்குனராகச் செயல்பட உள்ளார். தனது அடுத்த படைப்பையும் மக்கள் ரசிக்கும்படி மிகச் சிறந்ததாகக் கொண்டு வர தற்பொழுது கடினமாக உழைத்து வருவதாக லியு ஜியு பெருமையுடன் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்