Hanuman statue in Texas  
உலகம்

என்னாச்சு அமெரிக்காவுக்கு.. 'ஹனுமன் சிலை' குறித்து சர்ச்சை கருத்து - தர்மசங்கடத்தில் டிரம்ப் அரசு!

"நாம் ஏன் ஒரு போலியான இந்து கடவுளின் சிலையை டெக்சாஸில் அனுமதிக்கிறோம்? அமெரிக்கா ஒரு...

மாலை முரசு செய்தி குழு

அமெரிக்காவில், ஹனுமான் சிலை குறித்து ஒரு குடியரசுக் கட்சித் தலைவர் கூறிய சர்ச்சை கருத்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சௌகர் லேண்ட் நகரில், 90 அடி உயரம் கொண்ட ஹனுமன் சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இது வட அமெரிக்காவிலேயே மிகப் பெரிய ஹனுமன் சிலை என்று கூறப்படுகிறது. இந்தப் பிரம்மாண்ட சிலை, அப்பகுதியில் உள்ள ஸ்ரீ அஷ்டலட்சுமி கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சிலை குறித்து, அமெரிக்காவின் குடியரசுக் கட்சித் தலைவரான அலெக்சாண்டர் டங்கன் என்பவர், தனது சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், "நாம் ஏன் ஒரு போலியான இந்து கடவுளின் சிலையை டெக்சாஸில் அனுமதிக்கிறோம்? அமெரிக்கா ஒரு கிறிஸ்தவ தேசம்" என்று கேள்வி எழுப்பினார். இந்தப் பதிவில், பைபிளில் உள்ள ஒரு வசனத்தையும் மேற்கோள் காட்டியிருந்தார்.

டங்கனின் இந்த கருத்துக்கு உடனடியாக சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. அவரது பேச்சு, இந்துக்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு என்றும், அமெரிக்காவில் உள்ள மத சுதந்திரத்திற்கு எதிரானது என்றும் பலர் கண்டனம் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து, அமெரிக்காவில் உள்ள இந்து அமைப்பான 'இந்து அமெரிக்கன் ஃபவுண்டேஷன்' (HAF) ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், "டங்கனின் கருத்து, அமெரிக்காவின் அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்யும் மத சுதந்திரத்திற்கு எதிரானது. இது இந்துக்களுக்கு எதிரான பாகுபாட்டைக் காட்டுகிறது" என்று குறிப்பிட்டு, அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு குடியரசுக் கட்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

சமீபத்தில், அமெரிக்காவில் எச்-1பி விசாக்களுக்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டது தொடர்பாக, ஹிந்து மற்றும் இந்தியர்களுக்கு எதிரான கருத்துக்கள் அதிகரித்துள்ள நிலையில், டங்கனின் இந்தப் பதிவு, அந்நாட்டில் நிலவும் மத சகிப்புத்தன்மை குறித்த விவாதங்களை மீண்டும் தூண்டியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.