உலகம்

இலங்கையில் நாளை காலை வரை ஊரடங்கு.. வீதிகளில் பீரங்கிகளுடன் உலா வரும் வீரர்கள்!

இலங்கையில் நாளை காலை வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் தெருக்களில் ஆயுதங்களுடன் ராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது.

Suaif Arsath

ஆட்சிக்கெதிராக மக்கள் அமைதி வழியில் போராடியதை வன்முறையாக மாற்றிய மகிந்த ராஜபக்சே தற்போது எங்கு தலைமறைவாக இருக்கிறார் என்பதே தெரியாமல் உள்ளது.

ஆனாலும் அதிபராக உள்ள கோத்தபய ராஜபக்சேவின் சர்வாதிகாரம் இன்னும் கொடி கட்டிப் பறக்கிறது. ஊரடங்கை அமல்படுத்தியதுடன் தற்போது மக்களுக்கு எதிராக ராணுவத்தையும் களமிறக்கி உள்ளார்.

எதிரி நாட்டுக்கு போருக்குப் போவது போல் கொழும்பு வீதிகளில் பீரங்கிகளுடன் வீரர்கள் உலா வருகின்றனர். தெரு முழுவதும் நவீன ரக எந்திரத் துப்பாக்கிகளுடன் வீரர்கள் காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

விடுதலைப்புலிகளை வீழ்த்தியவர்கள் என்று உச்சாணிக் கொம்பில் வைத்து அழகு பார்த்த பக்சே சகோதரர்கள் இன்று பீரங்கிகளை தங்கள் பக்கம் திருப்பியிருப்பதைக் கண்டு இலங்கை மக்கள் அதிர்ந்துள்ளனர். ஆனாலும், போராட்டத்தை கைவிட அவர்கள் தயாராக இல்லை.

அமைதி வழியில் போராடி ஆட்சியை அகற்றியே தீருவோம் என்று உறுதிப்பாட்டுடன் இருக்கின்றனர். மக்கள் போராட்டம்தான் வெல்லும் என்பது வரலாறு. அதை மறுபடியும் நிகழ்த்திக் காட்டுவோம் என்று சூளுரைக்கின்றனர்.