மத்திய கிழக்கில் நடக்கும் போரின் பொருளாதார பாதிப்புகள் பல மாதங்களுக்கு நீடிக்கும் என்று எச்சரித்த ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் , புதன்கிழமை நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், குடிமக்கள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டார். இவரது இந்த முக்கிய உரை, மாலை 7 மணிக்கு முக்கிய தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளில் ஒரே நேரத்தில் ஒளிபரப்பப்பட்டது. இதற்கு முந்தைய பிரதமர்கள் கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் 2008 ஆம் ஆண்டு உலகளாவிய நிதி நெருக்கடியின் போதும் இதே போன்ற உரையாற்றியிருக்கிறார். தனது எரிபொருளில் சுமார் 90%-ஐ இறக்குமதி செய்யும் ஆஸ்திரேலியா, ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போர் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி மீதான முற்றுகையின் விளைவாக, பெட்ரோல் விலை கடுமையாக உயர்ந்ததையும், குறிப்பிட்ட பகுதிகளில் தட்டுப்பாடுகளையும் ஆஸ்திரேலியா சந்தித்து வருகிறது.
"தற்போதைய சூழலில் நேர்மறையாக இருப்பது கடினம் என்பதை நான் புரிந்துகொள்கிறேன்," என்று அல்பானீஸ் கூறினார். "மத்திய கிழக்கில் நடக்கும் போர், வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் மிகப்பெரிய உயர்வை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா இந்தப் போரில் நேரடியாகப் பங்கேற்கவில்லை. ஆனால், போர் காரணமாக அனைத்து ஆஸ்திரேலியர்களும் அதிக விலையைச் செலுத்துகிறார்கள்". இந்தப் போரினால் ஏற்பட்ட பொருளாதார அதிர்ச்சிகள் பல மாதங்களுக்கு நம்முடன் இருக்கும்.
இந்த வாரம் தொடங்கவிருக்கும் ஈஸ்டர் விடுமுறைக்கு முன்னதாக எரிபொருளைப் பதுக்கி வைக்காமல் இருப்பது மற்றும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவது போன்ற, எரிபொருள் விநியோகத்தில் உள்ள அழுத்தத்தைக் குறைக்கத் தங்களால் இயன்றதைச் செய்யுமாறு குடிமக்களை அல்பானீஸ் அறிவுறுத்தியுள்ளார். "நீங்கள் பயணம் மேற்கொள்ளும்போது, தேவைக்கு அதிகமாக எரிபொருள் நிரப்பாமல் தேவைக்கு ஏற்ப நிரப்பிக் கொள்ளுங்கள் என்று அவர் கூறினார். மேலும், வரும் வாரங்களில், உங்களால் முடிந்தால் பணிக்குச் செல்ல ரயில், பேருந்து போன்ற பொது போக்குவரத்துக்கள் பயன்படுத்துங்கள்" என்று பிரதமர் மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
மேலும் அந்நாட்டின் கருவூல அமைச்சர் "இதன் பின்விளைவுகள் அனைவரையும் பாதிக்கின்றன என்பது எங்களுக்குத் தெரியும், ஆனால் அனைவரும் ஒன்றிணைந்து, தத்தமது பங்களிப்பைச் செய்தால், இந்தக் கடினமான காலகட்டத்தை நாம் கடந்துவிட முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று ஜிம் சால்மர்ஸ் செய்தியாளர்களிடம் கூறினார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.