உலகம்

கோடீஸ்வரர்களின் கறுப்புப் பக்கங்கள்! அமெரிக்காவை அதிரவைக்கும் எப்ஸ்டீன் கோப்புகள் - சிக்கும் முக்கியப் புள்ளிகள் யார் யார்?

டிரம்பின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கத் திட்டமிட்டுச் செய்யப்பட்டவை...

மாலை முரசு செய்தி குழு

அமெரிக்காவின் பிரபல தொழிலதிபர் மற்றும் பாலியல் குற்றவாளியான ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான லட்சக்கணக்கான ரகசிய ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை தற்போது வெளியிட்டுள்ளது. சுமார் 30 லட்சம் பக்கங்கள் கொண்ட இந்த மாபெரும் ஆவணக் குவியலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் உலகப் பணக்காரர் எலான் மஸ்க் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆவணங்களில் டொனால்ட் டிரம்ப் மீது பல்வேறு பாலியல் புகார்கள் கூறப்பட்டுள்ளன. குறிப்பாக, பல ஆண்டுகளுக்கு முன்பு நியூஜெர்சியில் நடந்த ஒரு நிகழ்வின் போது, 13 அல்லது 14 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவரை டிரம்ப் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அந்த ஆவணங்களில் உள்ள எப்.பி.ஐ தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், டிரம்பின் மார்-ஏ-லாகோ இல்லத்தில் நடைபெற்ற விருந்துகளில் எலான் மஸ்க் உள்ளிட்ட பல முக்கிய நபர்கள் கலந்துகொண்டதாகவும், அங்கு இளம்பெண்கள் ஈடுபடுத்தப்பட்டதாகவும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இவை அனைத்தும் உறுதிப்படுத்தப்படாத புகார்கள் என்றும், டிரம்பின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கத் திட்டமிட்டுச் செய்யப்பட்டவை என்றும் அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.

மற்றொரு முக்கிய நபரான பில் கேட்ஸ் குறித்து இந்த ஆவணங்களில் மிக மோசமான தகவல்கள் வெளியாகியுள்ளன. பில் கேட்ஸ் ரஷ்யப் பெண்களுடன் பாலியல் உறவு வைத்திருந்ததாகவும், அதன் மூலம் அவருக்குப் பாலியல் நோய் தொற்று ஏற்பட்டதாகவும் எப்ஸ்டீன் ஒரு மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளார். அந்த நோயை மறைப்பதற்காகத் தனது மனைவி மெலிண்டாவிற்குத் தெரியாமல் அவருக்கு மருந்து கொடுக்க பில் கேட்ஸ் தன்னிடம் உதவி கேட்டதாக எப்ஸ்டீன் குற்றம் சாட்டியுள்ளார். பில் கேட்ஸுடனான தனது நட்பு முறிந்த ஆத்திரத்தில் எப்ஸ்டீன் இந்தத் தகவல்களைத் தனக்குத் தானே மின்னஞ்சல் செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.

டெஸ்லா நிறுவனத் தலைவர் எலான் மஸ்க்கிற்கும் எப்ஸ்டீனுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்தும் பல்வேறு புதிய உண்மைகள் வெளிவந்துள்ளன. எப்ஸ்டீனின் சர்ச்சைக்குரிய தீவிற்குச் செல்ல எலான் மஸ்க் ஆர்வம் காட்டியதாக ஆவணங்கள் கூறுகின்றன. 2013 ஆம் ஆண்டு எப்ஸ்டீனுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், தான் அந்தப் பகுதியில் விடுமுறை கழிக்க வருவதாகவும், எப்ஸ்டீனின் தீவிற்கு வரச் சரியான நேரம் எது என்றும் மஸ்க் கேட்டதாகத் தெரியவந்துள்ளது. எப்ஸ்டீனுக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று எலான் மஸ்க் தொடர்ந்து மறுத்து வந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த மின்னஞ்சல் ஆதாரங்கள் அவருக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன.

இந்த ஆவணங்கள் அனைத்தும் எப்ஸ்டீன் உயிருடன் இருந்தபோது அவரிடம் பணிபுரிந்தவர்கள் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளன. இதில் பிரிட்டிஷ் இளவரசர் ஆண்ட்ரூ மற்றும் பல அரசியல் தலைவர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. ஜெப்ரி எப்ஸ்டீன் சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்த பிறகு, அவரைச் சுற்றியுள்ள ரகசியங்களை உலகிற்குத் தெரியப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை அடுத்து, தற்போது இந்த விரிவான ஆவணங்கள் பொதுமக்களின் பார்வைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.