மனிதர்களின் முகத்தைப் பார்க்கும்போது அவர்களின் கண்கள் பூனையைப் போலவும், முகத்தில் பூனையின் ரோமங்கள் இருப்பது போலவும் தெரிந்தால் எப்படி இருக்கும்? கற்பனை செய்து பார்ப்பதற்கே வியப்பாக இருக்கும் இந்த அனுபவத்தை அமெரிக்காவைச் சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவர் உண்மையாகவே சந்தித்து வருகிறார். மூளையில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஏற்பட்டுள்ள இந்த அரிய பாதிப்பு மருத்துவ உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதியில் வசிக்கும் கார்ல் என்ற இளைஞருக்குத்தான் இந்த வித்தியாசமான பார்வைக் குறைபாடு ஏற்பட்டுள்ளது. இவருக்கு மனிதர்களின் முகத்தைப் பார்க்கும்போது சில நேரங்களில் பூனையின் கண்கள், பெரிதாகத் தெரியும் கண்மணிகள் மற்றும் பூனையின் உடலில் காணப்படும் கோடுகள் போன்ற தோற்றங்கள் தென்படுகின்றன. அதுமட்டுமின்றி, சில சமயங்களில் தனக்குத் தெரிந்த மனிதர்களின் முக அம்சங்கள் தனது செல்லப் பூனையின் முகத்தில் தெரிவதாகவும் அவர் கூறியுள்ளார்.
கார்லுக்கு சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பிரச்சினை தொடங்கியுள்ளது. அவரது மூளையின் வலது பக்க டெம்போரல் லோப் பகுதியில் ரத்த நாளங்கள் ஒன்றோடொன்று அசாதாரணமாக இணைந்து சிக்கலான அமைப்பில் இருந்துள்ளன. இதனை மருத்துவ ரீதியாக ஆர்டீரியோவீனஸ் மால்ஃபார்மேஷன் (Arteriovenous Malformation) என்று அழைக்கின்றனர். இந்தப் பாதிப்பு காரணமாக மூளையில் ரத்தக்கசிவு ஏற்படும் அபாயம் இருந்ததால், மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அந்தப் பிரச்சினைக்குரிய பகுதியை அகற்றியுள்ளனர். மூளையின் இந்தப் பகுதி மனிதர்களின் முகங்களை அடையாளம் காண்பதிலும், அவற்றைச் சரியாகப் புரிந்துகொள்வதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு கார்லின் பார்வையில் சில விசித்திரமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, மனிதர்களின் முகங்களைப் பார்க்கும்போது பூனையின் கண்களைப் போன்ற வடிவம் தெரிவதும், கண்மணிகள் வழக்கத்தைவிடப் பெரிதாகத் தெரிவதும் அவருக்கு வழக்கமாகியுள்ளது. இதனால் மற்றவர்களின் முகங்களை இயல்பான தோற்றத்தில் பார்ப்பது அவருக்குச் சவாலாக மாறியுள்ளது.
கார்லிடம் லூனா என்ற சாம்பல் நிறக் கோடுகள் கொண்ட செல்லப் பூனை உள்ளது. காலையில் எழுந்தவுடன் அவர் முதலில் பார்க்கும் முகத்தைப் பொறுத்து, அன்றைய தினம் மற்றவர்களின் முகங்கள் அவருக்குத் தோன்றும் விதம் மாறுகிறது. உதாரணமாக, காலையில் முதலில் தனது பூனையைப் பார்த்தால், அதன் கண்களின் வடிவம், பெரிதான கண்மணிகள் மற்றும் உடலில் காணப்படும் கோடுகள் போன்ற அம்சங்கள் அன்றைய தினம் சந்திக்கும் மனிதர்களின் முகங்களிலும் தெரிவதாகக் கூறுகிறார். அதேபோல், காலையில் முதலில் ஒரு மனிதரின் முகத்தைப் பார்த்தால், அந்த நபரின் கண்களின் வடிவம் மற்றும் கண்மணிகள் போன்ற அம்சங்கள் மற்றவர்களின் முகங்களிலும், சில நேரங்களில் தனது செல்லப் பூனையின் முகத்திலும் தெரிவதாக அவர் அனுபவித்துள்ளார்.
இந்த மாற்றங்கள் சில மணி நேரங்கள் வரை நீடிக்கின்றன. சில நாட்களில் ஒரு நாள் முழுவதும் கூட இந்தப் பாதிப்பு தொடர்கிறது. இதனால் அன்றாட வாழ்க்கையில் மற்றவர்களுடன் பழகும்போதும், அவர்களின் முகங்களைப் பார்க்கும்போதும் கார்லுக்கு சிரமங்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக, ஒருவரின் முகத்தைப் பார்த்தவுடன் அவரை அடையாளம் காண்பதற்குப் பதிலாக, முகத்தின் தோற்றத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கவனிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
கார்ல் பாதிக்கப்பட்டுள்ள இந்தக் குறைபாட்டிற்கு புரோசோபோமெட்டாமார்போப்சியா (Prosopometamorphopsia - PMO) என்று பெயர். இது முகங்களைப் பார்க்கும் விதத்தைப் பாதிக்கும் மிகவும் அரிய வகையான பார்வைக் குறைபாடாகும். இந்தப் பாதிப்பு உள்ளவர்களுக்கு மனிதர்களின் முகங்கள் இயல்பான தோற்றத்தில் தெரிவதில்லை. சிலருக்கு முகத்தின் ஒரு பகுதி நீண்டு காணப்படலாம்.
மற்றவர்களுக்கு கண்கள், மூக்கு மற்றும் வாய் போன்ற உறுப்புகள் இடம் மாறித் தெரிவதுடன், முகத்தின் நிறம் மற்றும் தோலின் அமைப்பிலும் மாற்றங்கள் ஏற்பட்டது போன்ற உணர்வு ஏற்படலாம். சில நேரங்களில் முகங்கள் சுருங்கியோ, பெரிதாகவோ, வித்தியாசமான வடிவத்திலோ தெரியலாம். கார்லின் விஷயத்தில் மனிதர்கள் மற்றும் விலங்குகளின் முக அம்சங்கள் ஒன்றோடொன்று கலந்து தெரிவது இந்தக் குறைபாட்டின் மிகவும் அரிதான வெளிப்பாடாகக் கருதப்படுகிறது.
மனித மூளை நாம் தினமும் பார்க்கும் முகங்களை நினைவில் வைத்துக்கொள்கிறது. குறிப்பாக, நமக்கு நன்கு அறிமுகமானவர்களின் முக அமைப்பு, கண்களின் வடிவம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை மூளை சேமித்து வைக்கிறது. கார்லின் விஷயத்தில், ஏற்கெனவே பார்த்த முகங்களின் அம்சங்கள் மீண்டும் அவரது பார்வையில் தோன்றும் முகங்களுடன் கலந்து தெரிவதாக ஆய்வாளர்கள் விளக்கியுள்ளனர். இதனால் அவர் பார்க்கும் நபரின் உண்மையான முகத்துடன், வேறொரு முகத்தின் அம்சங்களும் இணைந்தது போன்ற தோற்றம் ஏற்படுகிறது.
இந்த வினோதமான அனுபவத்தை ஆய்வு செய்த டார்ட்மவுத் கல்லூரி பேராசிரியர் பிராட் டுசைன் உள்ளிட்ட ஆய்வாளர்கள், கார்லின் அனுபவத்தைப் புரிந்துகொள்வதற்காக அவருடன் இணைந்து பணியாற்றியுள்ளனர். மேலும், கார்ல் தனது கண்களுக்கு எப்படிப்பட்ட முகங்கள் தெரிகின்றன என்பதை விளக்குவதற்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் சில படங்களையும் உருவாக்கியுள்ளார். அந்தப் படங்களில் தனது அனுபவத்திற்குப் பொருந்தாத அம்சங்களை மாற்றி, தனக்குத் தெரிவதைப் போல உருவாக்குவதிலும் அவர் பங்கேற்றுள்ளார்.
இந்தக் குறைபாட்டால் பாதிக்கப்படுபவர்கள் தங்களது அனுபவங்களை மற்றவர்களிடம் வெளிப்படையாகப் பேசத் தயங்குவதாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். தங்களது பிரச்சினையை மற்றவர்கள் நம்ப மாட்டார்கள் அல்லது மனநலப் பிரச்சினையாகத் தவறாகப் புரிந்துகொள்வார்கள் என்ற அச்சம் இதற்குக் காரணமாக இருக்கலாம்.
இதேபோன்ற ஒரு சம்பவம் 1986-ம் ஆண்டிலும் பதிவாகியுள்ளது. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட 58 வயது பெண் ஒருவர் பேருந்தில் பயணம் செய்தபோது, மற்றொரு பயணியின் மடியில் இருந்த பூடில் வகை நாயைப் பார்த்துள்ளார். அதன் பிறகு பேருந்தில் இருந்த மற்ற பயணிகளின் முகங்களிலும் அதே நாயின் முகம் தெரிவது போன்ற அனுபவத்தை அவர் சந்தித்துள்ளார். இந்தச் சம்பவமும் முகங்களை அடையாளம் காணும் மூளையின் செயல்பாடு குறித்த ஆய்வுகளுக்கு முக்கியமானதாக அமைந்துள்ளது.
கார்லின் அனுபவம் தொடர்பான ஆய்வறிக்கை 'Cortex' என்ற மருத்துவ ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது. மனித மூளை முகங்களை எவ்வாறு அடையாளம் காண்கிறது, நினைவில் உள்ள முக அம்சங்கள் நிகழ்காலப் பார்வையை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள இந்த ஆய்வு உதவியாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். மனிதர்களின் பார்வை என்பது கண்கள் பார்க்கும் காட்சிகளை மட்டும் சார்ந்தது அல்ல; மூளையின் நினைவாற்றலும் தகவல்களைப் புரிந்துகொள்ளும் செயல்பாடுகளும் அதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பதை இந்த அரிய மருத்துவச் சம்பவம் மீண்டும் உணர்த்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.