மாமிசம் உண்ணும் ஒட்டுண்ணிப் புழுவான ‘ஸ்க்ரூவேர்ம்' (screwworm) மனித உடலில் ஊடுருவிய முதல் பாதிப்பு அமெரிக்காவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மெரிலேண்ட் நகரைச் சேர்ந்த ஒரு நோயாளி, சமீபத்தில் எல் சால்வடாரில் இருந்து திரும்பிய நிலையில், அவருக்கு இந்த அரிதான பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ‘நியூ வேர்ல்ட் ஸ்க்ரூவேர்ம் மயாசிஸ்’ (New World Screwworm Myiasis) என்ற பாதிப்பு, பொதுவாக விலங்குகளின் தோலில் புதைந்து வாழும் ஈ லார்வாக்களால் (magots) ஏற்படுகிறது. அமெரிக்காவின் சுகாதார மற்றும் மனித சேவைகள் துறை (HHS) மற்றும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) இணைந்து ஆகஸ்ட் 4 அன்று இந்த பாதிப்பை உறுதிப்படுத்தியுள்ளன.
‘ஸ்க்ரூவேர்ம்’ என்றால் என்ன?
ஸ்க்ரூவேர்ம் என்பது 'காக்கிலியோமியா ஹோமினிவோராக்ஸ்' (Cochliomyia hominivorax) என்ற ஈ வகையின் லார்வாக்கள் ஆகும். ஒரு பெண் ஈ, திறந்த காயங்கள் அல்லது வாய் போன்ற மென்மையான திசுக்களில் ஒரே நேரத்தில் 300 முட்டைகள் வரை இடும்.
இந்த முட்டைகள் பொரிக்கும்போது, அதிலிருந்து வெளிவரும் லார்வாக்கள், திருகு போன்ற அசைவில் (corkscrew motion) உயிர் வாழும் திசுக்களுக்குள் புதைந்து, அவற்றை உண்டு வளர்கின்றன. இதனால் கடுமையான வலி ஏற்படும். உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், மரணம் கூட ஏற்படலாம். மூன்று முதல் ஏழு நாட்களில், இந்த லார்வாக்கள் மண்ணில் விழுந்து, கூட்டுப்புழுக்களாக (pupate) மாறி, மீண்டும் பெரிய ஈக்களாக வெளிவருகின்றன.
ஒவ்வொரு பெண் ஈயும் ஒருமுறை மட்டுமே இனப்பெருக்கம் செய்யும். ஆனால், சுமார் 30 நாட்கள் மட்டுமே வாழும் அதன் வாழ்க்கைக் காலத்தில், 3,000 முட்டைகள் வரை இடுவதற்குத் தேவையான விந்தணுக்களை அது சேமித்து வைத்திருக்கும்.
பொதுமக்களுக்கும் கால்நடைகளுக்கும் உள்ள அச்சுறுத்தல்:
அமெரிக்காவில் பொதுமக்களுக்கு இதன் அச்சுறுத்தல் 'மிகவும் குறைவு' என்றும், இந்த ஆண்டு நாட்டில் எந்தவொரு விலங்குக்கும் இந்த பாதிப்பு ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இருப்பினும், கால்நடைகளுக்கு மத்தியில் இது பரவினால் அது பேரழிவை ஏற்படுத்தும் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். அமெரிக்க விவசாயத் துறையின் (USDA) மதிப்பீட்டின்படி, அத்தகைய பாதிப்பு ஏற்பட்டால், அமெரிக்காவின் கால்நடைத் தொழிலுக்கு பில்லியன் கணக்கான டாலர்கள் இழப்பை ஏற்படுத்தும்.
இந்த அபாயத்தைத் தடுக்க, அமெரிக்கா, ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய அமைப்பு போன்ற சர்வதேச கூட்டாளர்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. டெக்சாஸில் 'மலட்டு ஈ' (sterile fly) உற்பத்தி மையத்தை அமைக்கவும் திட்டங்கள் உள்ளன.
மனிதர்களுக்கு அரிதாக இருந்தாலும், இந்த ஒட்டுண்ணி புழுக்கள் கால்நடைகளுக்கு விரைவில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். “இந்த லார்வாக்கள் ஊடுருவும்போது, அவை கடுமையான, சில சமயங்களில் மரணத்தை ஏற்படுத்தும் சேதத்தை உருவாக்குகின்றன,” என்று USDA தெரிவித்துள்ளது.
பாதிப்புள்ள பகுதிகளுக்குப் பயணம் செய்யும் சுற்றுலாப் பயணிகள் காயங்களை மூடிக்கொள்வது மற்றும் கால்நடைகளுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்ப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.