இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் நீண்ட காலமாக நிலவி வரும் இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இரண்டு புதிய விமான நிறுவனங்கள் களமிறங்கத் தயாராகி வருகின்றன. அல் ஹிந்த் ஏர் (Al Hind Air) மற்றும் ஃபிளை எக்ஸ்பிரஸ் (Fly Express) ஆகிய இரு நிறுவனங்களுக்கும் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தடையில்லாச் சான்றிதழ் (NOC) வழங்கியுள்ளது. இது இந்தியப் பயணிகளுக்கு, குறிப்பாக வெளிநாடு செல்லும் இந்தியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது. சமீபத்தில் இண்டிகோ விமான சேவைகளில் ஏற்பட்ட குளறுபடிகள் மற்றும் அதிகப்படியான டிக்கெட் கட்டணங்கள் ஆகியவற்றால் அவதிப்பட்டு வரும் பயணிகளுக்கு, இந்தப் புதிய வரவு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேரளாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அல் ஹிந்த் குழுமம், சுற்றுலா மற்றும் பயணத் துறையில் ஏற்கனவே ஒரு ஜாம்பவானாகத் திகழ்ந்து வருகிறது. தற்போது இந்த நிறுவனம்தான் 'அல் ஹிந்த் ஏர்' என்ற பெயரில் விமானச் சேவையைத் தொடங்கவுள்ளது. கொச்சியையைத் தலைமைத் தளமாகக் கொண்டு செயல்படவுள்ள இந்த நிறுவனம், ஆரம்பக்கட்டத்தில் ஏடிஆர்-72 (ATR-72) ரக விமானங்களைப் பயன்படுத்தித் தென்னிந்தியாவின் முக்கிய நகரங்களை இணைக்கத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக கேரளா, தமிழ்நாடு, கர்நாடக, மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் உள்ள சிறு நகரங்களை இணைக்கும் வகையில் இதன் சேவை இருக்கும். இதன் அடுத்தகட்ட இலக்குதான் பயணிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது. அதாவது, விரைவில் வளைகுடா நாடுகளுக்கு, குறிப்பாகத் துபாய், ஷார்ஜா போன்ற இடங்களுக்கு மிகக் குறைந்த விலையில் விமானச் சேவையை வழங்க அல் ஹிந்த் ஏர் திட்டமிட்டுள்ளது.
வளைகுடா நாடுகளில் பணிபுரியும் லட்சக்கணக்கான இந்தியத் தொழிலாளர்கள், பண்டிகைக் காலங்களில் ஊருக்கு வர நினைக்கும்போது விமான டிக்கெட் விலை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்துவிடுகிறது. இந்தக் குறையைப் போக்கவே அல் ஹிந்த் ஏர் நிறுவனம், தாங்கள் ஏற்கனவே வைத்துள்ள டிராவல்ஸ் நெட்வொர்க்கைப் பயன்படுத்தி, குறைந்த விலையில் டிக்கெட்டுகளை வழங்க முடிவு செய்துள்ளது. இது நடைமுறைக்கு வந்தால், கேரளா மற்றும் தமிழகத்திலிருந்து வளைகுடா செல்லும் பயணிகளுக்கு மிகப்பெரிய பண மிச்சம் ஏற்படும். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் இண்டிகோ நிறுவனங்களுக்கு இது பலத்த போட்டியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
அடுத்ததாக, ஹைதராபாத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படத் தயாராகி வரும் 'ஃபிளை எக்ஸ்பிரஸ்' (Fly Express) நிறுவனமும் மத்திய அரசின் அனுமதியைப் பெற்றுள்ளது. இந்த நிறுவனம் ஒரு வித்தியாசமான உத்தியைக் கையாளவுள்ளது. அதாவது, பயணிகளை மட்டும் ஏற்றிச் செல்லாமல், சரக்குகளையும் (Cargo) அதிக அளவில் கையாள்வதன் மூலம் லாபத்தை ஈட்டத் திட்டமிட்டுள்ளது. பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தை இணைத்துச் செயல்படுவதன் மூலம், டிக்கெட் விலையைக் கணிசமாகக் குறைக்க முடியும் என்று இந்நிறுவனம் நம்புகிறது. இந்தியாவின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களை இணைப்பதே ஃபிளை எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் முக்கிய நோக்கமாக இருக்கும்.
மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு, இந்தப் புதிய நிறுவனங்களின் வருகையை வரவேற்றுள்ளார். இந்தியாவில் விமானப் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வெறும் இரண்டு அல்லது மூன்று நிறுவனங்களை மட்டுமே நம்பியிருப்பது ஆபத்தானது என்பதைச் சமீபத்திய இண்டிகோ விமான ரத்து சம்பவங்கள் உணர்த்தின. எனவே, சந்தையில் போட்டியை அதிகரிக்கவும், பயணிகளுக்குத் தரமான மற்றும் மலிவான சேவையை வழங்கவும் புதிய நிறுவனங்களின் வரவு அவசியம் என்று மத்திய அரசு கருதுகிறது. உதான் (UDAN) திட்டத்தின் கீழ் சிறு நகரங்களுக்கு விமானச் சேவையை விரிவுபடுத்தவும் இந்தப் புதிய நிறுவனங்கள் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், இந்த நிறுவனங்கள் சேவையைத் தொடங்க இன்னும் சில காலமாகும். தடையில்லாச் சான்றிதழ் (NOC) என்பது முதல் படி மட்டுமே. இதன் பிறகு, விமானங்களை இயக்குவதற்கான உரிமம் (AOC) பெறுவது உள்ளிட்ட பல சோதனைகளைக் கடக்க வேண்டியுள்ளது. ஏற்கனவே கோ ஃபர்ஸ்ட் (Go First) மற்றும் ஜெட் ஏர்வேஸ் போன்ற நிறுவனங்கள் நிதி நெருக்கடியால் மூடப்பட்ட நிலையில், இந்தப் புதிய நிறுவனங்கள் நிதி ரீதியாக எவ்வளவு வலுவாக இருக்கின்றன என்பது போகப் போகத்தான் தெரியும். ஆனால், ஒரு சாதாரணப் பயணியின் பார்வையில், போட்டிகள் அதிகரித்தால் மட்டுமே விமானக் கட்டணம் குறையும் என்பது நிதர்சனம்.
2026-ம் ஆண்டு இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் ஒரு திருப்புமுனையாக அமையப்போகிறது. அல் ஹிந்த் ஏர் மற்றும் ஃபிளை எக்ஸ்பிரஸ் மட்டுமல்லாமல், 'ஷங்க் ஏர்' (Shankh Air) என்ற மற்றொரு நிறுவனமும் உத்தரப் பிரதேசத்தைத் தளமாகக் கொண்டு செயல்பட அனுமதி பெற்றுள்ளது. ஆக மொத்தம், வரும் ஆண்டுகளில் இந்திய வானில் புதிய பறவைகள் பறக்கத் தொடங்கும். இது நிச்சயம் ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ நிறுவனங்களைத் தங்களது கட்டணங்களைக் குறைக்க வைக்கும் என்று நம்பலாம். குறிப்பாக, வெளிநாடு செல்லும் எளிய மக்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.