அமெரிக்காவில் வேலை தேடும் இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினருக்கு பெரும் அதிர்ச்சி அளிக்கும் வகையில், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஹெச்-1பி (H-1B) விசா வழங்குவதை நிறுத்தி வைக்கக் கோரி குடியரசுக் கட்சி எம்.பி.க்கள் புதிய மசோதாவைத் தாக்கல் செய்துள்ளனர். இந்தத் திட்டம் அமெரிக்கத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பைப் பறிப்பதாகக் கூறி, "ஹெச்-1பி விசா முறைகேடு தடுப்புச் சட்டம் 2026" என்ற பெயரில் இந்த அதிரடி மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த மசோதாவைத் தாக்கல் செய்த எலி கிரேன் கூறுகையில், அமெரிக்க அரசாங்கம் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபத்திற்காகச் செயல்படாமல், கடினமாக உழைக்கும் சொந்த நாட்டு மக்களுக்காக உழைக்க வேண்டும் என்றார். தகுதியுள்ள அமெரிக்கர்களுக்குக் கிடைக்க வேண்டிய வேலைகளை இந்த ஹெச்-1பி விசா முறை தட்டிப் பறிப்பதாகவும், இந்தச் சிஸ்டத்தை முழுமையாகச் சீரமைக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த புதிய சட்டத்தின்படி, தற்போது ஆண்டுக்கு 65,000 ஆக இருக்கும் விசாக்களின் எண்ணிக்கை வெறும் 25,000 ஆகக் குறைக்கப்படும். மேலும், குலுக்கல் முறையை (Lottery system) ரத்து செய்துவிட்டு, அதிக சம்பளம் வாங்குபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் முறை கொண்டு வரப்பட உள்ளது. அதன்படி, ஒரு ஹெச்-1பி ஊழியருக்கு ஆண்டுக்குக் குறைந்தபட்சம் 2 லட்சம் டாலர் (சுமார் 1.7 கோடி ரூபாய்) சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களைத் தூக்கும் முன், அந்த வேலைக்குத் தகுதியான அமெரிக்கர் யாரும் கிடைக்கவில்லை என்று சான்றிதழ் அளிக்க வேண்டும். மேலும், ஹெச்-1பி ஊழியர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யக் கூடாது என்றும், மேன்பவர் ஏஜென்சிகள் மூலம் இவர்களை வேலைக்கு அமர்த்தக் கூடாது என்றும் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இது தவிர, விசா வைத்திருப்பவர்கள் தங்கள் குடும்பத்தினரை அமெரிக்காவிற்கு அழைத்து வரவும், கிரீன் கார்டு எனப்படும் நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பிக்கவும் இந்த மசோதா தடை விதிக்கிறது.
இன்னொரு முக்கிய அம்சமாக, மாணவர்கள் படிப்பு முடித்த பின் அமெரிக்காவில் தங்கி வேலை செய்ய உதவும் ஓபிடி (OPT) திட்டத்தையும் ரத்து செய்ய இந்த மசோதா பரிந்துரைக்கிறது. வெளிநாட்டு ஊழியர்கள் குறைந்த சம்பளத்திற்கு வேலைக்கு வருவதால் அமெரிக்கர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக பிராண்டன் கில், பால் கோசர் போன்ற எம்.பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். "அமெரிக்கர்களை அவர்களின் சொந்த நாட்டிலேயே அந்நியர்களாக மாற்ற விடமாட்டோம்" என்று அவர்கள் ஆவேசமாகப் பேசியுள்ளனர்.
இந்த மசோதா சட்டமானால், அமெரிக்க தொழில்நுட்பத் துறையில் பெரும் பங்கு வகிக்கும் இந்திய ஐடி ஊழியர்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். அமெரிக்க நிறுவனங்கள் திறமையான ஆட்கள் பற்றாக்குறையைப் போக்க இந்த விசா முறை அவசியம் என்று வாதிட்டாலும், அமெரிக்கத் தொழிலாளர்களின் நலனே முக்கியம் என்பதில் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் உறுதியாக உள்ளனர். இது அமெரிக்க அரசியல் மற்றும் ஐடி துறையில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்