உலகம் முழுவதும் தற்போது ஹண்டா வைரஸ் (Hantavirus) பரவல் குறித்த அச்சம் மக்களிடையே அதிகரித்துள்ளது. இது கொரோனா போல வேகமாகப் பரவி மீண்டும் லாக்டவுன் போன்ற சூழலை உருவாக்குமா என்கிற கேள்வி எழுந்துள்ள நிலையில், உலக சுகாதார அமைப்பு (WHO) இதற்கு முக்கிய விளக்கம் அளித்துள்ளது. வியாழக்கிழமை மாலை நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய டாக்டர் மரியா வான் கெர்கோவ், "இது கோவிட் கிடையாது, இன்ஃப்ளூயன்ஸாவும் கிடையாது; இது பரவும் விதம் முற்றிலும் மாறுபட்டது" என்று தெரிவித்துள்ளார்.
தற்போது ஒரு சொகுசுக் கப்பலில் ஏற்பட்டுள்ள இந்தப் பாதிப்பு குறித்து விளக்கிய அவர், இதற்கு முன்பு அர்ஜென்டினாவில் ஏற்பட்ட ஆண்டிஸ் வைரஸ் (Andes virus) பாதிப்பின் போது கூட, மிக நெருக்கமான தொடர்பில் இருந்தவர்களுக்கு மட்டுமே இது பரவியதாகக் குறிப்பிட்டார். தற்போதைய சூழலில் கப்பலில் உள்ள பயணிகள் அல்லது ஊழியர்களுக்கு நோய் அறிகுறிகள் ஏதும் இல்லை என்றும், பொது சுகாதார நடவடிக்கைகளைச் சரியாகப் பின்பற்றினால் இந்தத் தொற்றுச் சங்கிலியை எளிதாக உடைக்க முடியும் என்றும் உலக சுகாதார அமைப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
ஹண்டா வைரஸ் என்பது முக்கியமாக எலிகள் மூலம் மனிதர்களுக்குப் பரவும் ஒரு வகை நோயாகும். கோவிட்-19 காற்றில் பரவி ஒரே அறையில் இருக்கும் பலரைத் தாக்கும் தன்மை கொண்டது, ஆனால் ஹண்டா வைரஸ் அவ்வாறு பரவாது. பாதிக்கப்பட்ட ஒருவருடன் நீண்ட நேரம் மிகவும் நெருக்கமான தொடர்பில் இருந்தால் மட்டுமே இது ஒரு மனிதரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவ வாய்ப்புள்ளது. எனவே, இது ஒரு உலகளாவிய பெருந்தொற்றாக மாற வாய்ப்பு மிகவும் குறைவு என்று நிபுணர்கள் விளக்குகிறார்கள்.
இந்த வைரஸ் பாதிப்பின் இன்குபேஷன் காலம் ஆறு வாரங்கள் வரை இருக்கலாம் என்பதால், வரும் நாட்களில் சில புதிய பாதிப்புகள் பதிவாக வாய்ப்புள்ளது. இருப்பினும், இதைக் கண்டு பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை என்றும், உலக அளவில் இதற்கான ரிஸ்க் மிகவும் குறைவாகவே இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார். கொரோனா அளவுக்கு இது வேகமாகப் பரவாது என்றாலும், பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இது அதிக ஆபத்தை விளைவிக்கக்கூடியது என்பதால் விழிப்புணர்வு அவசியம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.