சர்வதேச கடல் பகுதியில் பயணம் செய்து கொண்டிருந்த எம்வி ஹோண்டியஸ் (MV Hondius) என்ற சொகுசு கப்பலில், 'ஹண்டா வைரஸ்' (Hantavirus) பாதிப்பு ஏற்பட்டிருப்பது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை மூன்று பயணிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் எட்டு பேருக்குப் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை மீட்க முழு கவச உடை (Hazmat Suits) அணிந்த மருத்துவக் குழுவினர் அதிரடியாகக் களமிறங்கியுள்ளனர். நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் மற்றும் கேப் வெர்டே அருகே, ஆக்சிஜன் கவசங்களுடன் கூடிய மருத்துவக் குழுவினர், நோயாளிகளை ஸ்ட்ரெச்சர்களில் வைத்துச் சிறப்பு விமான ஆம்புலன்ஸ்கள் மூலம் அழைத்துச் சென்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்தக் கப்பலில் சுமார் 150 பயணிகள் மற்றும் ஊழியர்கள் உள்ளனர். பொதுவாக ஹண்டா வைரஸ் என்பது எலிகளின் சிறுநீர் அல்லது எச்சங்கள் மூலம் பரவக்கூடியது. ஆனால், தற்போது பரவி வரும் 'ஆண்டீஸ்' (Andes strain) என்ற வகை வைரஸ், மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவும் தன்மை கொண்டது என உலக சுகாதார மையம் (WHO) எச்சரித்துள்ளது. இதனால் தான், மீட்புப் பணியில் ஈடுபட்ட மருத்துவப் பணியாளர்கள் தலை முதல் கால் வரை மூடியிருக்கும் பிளாஸ்டிக் உடைகள், முகக் கவசங்கள் மற்றும் கையுறைகளை அணிந்து மிகவும் எச்சரிக்கையாகச் செயல்பட்டனர். ஸ்கிபோல் விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில், நோயாளிகளைச் சுற்றி ராணுவப் பாதுகாப்புடன் கூடிய மருத்துவக் குழுவினர் இருப்பதை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது.
கப்பலில் இருந்த மருத்துவர் மற்றும் இரண்டு ஊழியர்கள் மிக மோசமான அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் அவசரமாக அய்ரோப்பிய மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். கப்பலுக்குள் இருந்த மற்ற பயணிகள் அனைவரும் தங்களின் கேபின்களுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஸ்பெயின் நாட்டின் கேனரி தீவுகளில் இந்தக் கப்பலைத் தரை இறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அங்கு நோயாளிகளைத் தனிமைப்படுத்தவும், மற்ற நாட்டுப் பயணிகளைப் பாதுகாப்பாகத் திருப்பி அனுப்பவும் தேவையான மருத்துவ வசதிகள் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அர்ஜென்டினா, தென்னாப்பிரிக்கா மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளும் தங்கள் நாட்டுப் பயணிகளைக் கண்காணித்து வருகின்றன.
கப்பல் போன்ற மூடிய இடங்களில் காற்றோட்டம் மற்றும் உணவுத் தளம் ஒன்றாக இருப்பதால், வைரஸ் மிக எளிதாகப் பரவ வாய்ப்புள்ளதாகப் நிபுணர்கள் கூறுகின்றனர். அர்ஜென்டினாவின் உசுவாயா (Ushuaia) பகுதியில் இருந்து ஏப்ரல் மாதம் இந்தப் பயணம் தொடங்கியுள்ளது. கப்பலில் ஏறுவதற்கு முன்பே ஏதேனும் ஒரு பயணிக்கு இந்த வைரஸ் தொற்று இருந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இதன் காரணமாக அர்ஜென்டினாவில் உள்ள எலிகள் மற்றும் வைரஸின் மரபணுக்களை ஆய்வு செய்ய அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வரும் நிலையில், மீண்டும் ஒரு வைரஸ் பாதிப்பு கப்பலில் கண்டறியப்பட்டது உலக நாடுகளைத் தற்காப்பு நடவடிக்கைகளில் இறங்க வைத்துள்ளது.
தற்போது ஸ்பெயினில் கப்பல் தரை இறங்கியதும், பயணிகளுக்கு முழுமையான மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்படும். ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் வைக்கப்படுவார்கள்; மற்றவர்கள் அந்தந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டு அங்குள்ள சுகாதாரத் துறையினரால் கண்காணிக்கப்படுவார்கள். இந்த ஹண்டா வைரஸ், கொரோனா அல்லது இன்ஃப்ளூயன்ஸா அளவுக்கு வேகமாகப் பரவாது என்பதால் பொதுமக்களுக்குப் பெரிய ஆபத்து இல்லை என்று உலக சுகாதார மையம் தெரிவித்தாலும், 2026-ஆம் ஆண்டின் மிக முக்கியமான மருத்துவ நெருக்கடியாக இது பார்க்கப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.