அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் மிகக் கடுமையாகப் பேசியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றத்தைத் தணிக்கும் வகையில், ஈரான் விவகாரத்தில் அமெரிக்கா எத்தகைய ஒப்பந்தத்தைக் கொண்டு வந்தாலும், அதை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். இது குறித்து நிதி சார்ந்த செய்தி நிறுவனம் ஒன்றிற்கு டிரம்ப் அளித்த பேட்டியில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தரப்பில் ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளில் முடிவெடுக்கும் அதிகாரம் தன்னிடம் மட்டுமே உள்ளது என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்திக்கொண்டு, மீண்டும் பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும் என்று நெதன்யாகுவிடம் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். ஈரான் சமீபத்தில் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவித் தாக்குதல் நடத்திய சூழலில், டிரம்ப் இவ்வாறு கூறியிருப்பது பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இஸ்ரேலிய ராணுவத்தின் நிலைப்பாட்டிற்கு மாறாக, அமெரிக்க அதிபரின் இந்த உத்தரவு அமைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. ஈரானுடன் ஒரு நல்ல ஒப்பந்தத்தை எட்ட அமெரிக்கா நெருக்கமாக இருப்பதாகக் கருதும் டிரம்ப், எந்த ஒரு ராணுவ நடவடிக்கையும் இப்போதைக்குத் தேவையில்லை என்பதில் உறுதியாக இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்கள், அமெரிக்கா - ஈரான் இடையிலான பேச்சுவார்த்தைகளை எந்த வகையிலும் பாதிக்காது என்று டிரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஈரானுடன் அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதில் தான் இன்னும் முனைப்புடன் இருப்பதாக அவர் கூறியுள்ளார். அதே சமயம், பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் அடுத்தகட்டமாக என்ன நடக்கும் என்பதையும் அவர் மறைக்கவில்லை. ஒப்பந்தம் கைக்கூடாத பட்சத்தில், ஈரானுக்குள் கமாண்டோ படை மூலம் அதிரடித் தாக்குதல் நடத்தவோ அல்லது அந்நாட்டின் மீது இன்னும் கடுமையான பொருளாதாரத் தடைகளைத் தொடர்ந்து அமல்படுத்தவோ தயங்க மாட்டேன் என்று அவர் எச்சரித்துள்ளார்.
கடந்த வாரம் நெதன்யாகுவிடம் டிரம்ப் தொலைபேசியில் பேசியபோது, மிகவும் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தித் திட்டியதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. நீங்களாக ஒரு முடிவை எடுப்பது தவறு என்றும், நான் மட்டும் உதவாமல் இருந்திருந்தால் நீங்கள் இப்போது சிறையில் இருந்திருப்பீர்கள் என்றும், தற்போதைய சூழலில் அனைவரும் உங்கள் மீதும் இஸ்ரேல் மீதும் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்றும் டிரம்ப் கூறியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தொலைபேசி உரையாடல் குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகளை டிரம்ப் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தன்னுடைய உத்தரவுகளை மீறி இஸ்ரேல் செயல்பட முடியாது என்பதில் டிரம்ப் மிகத் தெளிவாக இருக்கிறார். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் இந்த இக்கட்டான சூழலில், அமெரிக்காவின் தலையீடு எந்த அளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது உலக நாடுகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. நெதன்யாகுவுக்கு எதிராக டிரம்ப் காட்டும் இந்த அதிரடி அணுகுமுறை, வரும் நாட்களில் போரின் போக்கை மாற்றும் ஒரு முக்கியக் காரணியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.