உலகம்

அரசியல் ரீதியான முக்கியத் தீர்மானம்...முப்படைகளும் தயார் நிலையில் என இலங்கை இராணுவ அதிகாரி தகவல்!

Malaimurasu Seithigal TV

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு தப்பிய பிறகு போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது.இலங்கையின் புதிய அதிபர் தேர்வு செய்யப்படும் வரை நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்கு முப்படையினரும் தயார் நிலையில் இருப்பதாக பாதுகாப்பு படைகளின் முதன்மை அதிகாரியான முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர  சில்வா தெரிவித்துள்ளார். 

தற்போது நடைபெற்று வரும் சிறப்பு சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.  நாட்டில் உள்ள மக்கள், இளைஞர்கள் நிலைமை இயல்பு நிலைக்கு கொண்டுவரும் வரை அமைதிகாக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆகவே  முப்படையினருக்கும் போலீசாருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் ஆதரவு வழங்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

நாட்டின் சொத்துக்களை பாதுகாப்பதற்காக கடமையாற்றுமாறும் பொதுமக்களிடத்தில் அவர் கோரிக்கை முன்வைத்துள்ளார். புதிய அதிபர் தேர்வு செய்யப்படும் வரை நாட்டின் அமைதி நிலையை பேண முப்படையினரும் பொலிஸாரும் தயார் நிலையில் உள்ளனர்.  

சபாநாயகர் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுவதாகவும், அது குறித்து தமக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளதாகவும் அரசியல் ரீதியான தீர்மானம் ஒன்று அப்போது எடுக்கப்படும் எனவும் சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.