பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தற்போது சிறைச்சாலையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பது அனைவரும் அறிந்த செய்திதான். இந்தச் சூழலில், கடந்த சில தினங்களாக இம்ரான் கான் உடல்நலம் மற்றும் நிலை குறித்து, இணையதளம் முழுவதும் ஒரு பெரிய வதந்தி பரவி, ஒட்டுமொத்த நாட்டு மக்களிடையேயும் கடுமையான பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் சிறைச்சாலைக்கு உள்ளேயே தாக்குதலுக்கு உள்ளாகி இறந்துவிட்டார் எனவும், இல்லை என்றால் உடல்நலம் மிகவும் மோசமாகி இருப்பதாகவும் பலவிதமான ஊகங்கள் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரப்பப்பட்டு வருகின்றன. இந்தத் தவறான தகவல்கள் காரணமாக, பாகிஸ்தானில் அரசியல் சூழல் கொந்தளிப்பாக இருக்கிறது.
இந்த வதந்திகள் இவ்வளவு பெரிய அளவில் கிளம்ப முக்கியக் காரணம் என்னவென்றால், இம்ரான் கானின் சகோதரிகள் சமீபத்தில் அவரைச் சிறைச்சாலையில் சந்திப்பதற்காகச் சென்றார்கள். அப்போது, அடியாளா சிறைச்சாலை வளாகத்தின் வாசலிலேயே காவல் துறையினர் அவர்களைத் தாக்கி, உள்ளே செல்ல விடாமல் தடுத்ததாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் முன்னாள் தலைவரின் உறவினர்கள் மீது காவல்துறை வரம்பு மீறி நடந்துகொண்ட இந்தச் சம்பவம், இம்ரான் கானின் பாதுகாப்பு மற்றும் உடல்நலம் குறித்துப் பொதுமக்களின் மனதில் பெரிய கேள்விகளை எழுப்பிவிட்டது. இந்தச் சம்பவத்துக்குப் பிறகுதான், அவர் சிறைக்குள் கொல்லப்பட்டார் என்றெல்லாம் தவறான தகவல்கள் இணையம் முழுவதும் பரவத் தொடங்கின.
மேலும், பாகிஸ்தான் அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் இருந்து வந்தது போல ஒரு போலியான செய்தி அறிக்கை இணையதளத்தில் வெளியாகி, இந்த வதந்திகளுக்கு மேலும் வலு சேர்த்தது. அதில் இம்ரான் கான் மறைந்துவிட்டார் என்றும், இது குறித்து உரிய விசாரணை நடந்து வருவதாகவும் குறிப்பிட்டு இருந்தது. ஆனால், இந்த வதந்திகள் பரவுவதைத் தடுப்பதற்காக, பாகிஸ்தான் நாட்டின் செய்தி மற்றும் தகவல் பரப்புத்துறை அமைச்சகம் உடனடியாக அதிகாரப்பூர்வமாக ஒரு விளக்கத்தை வெளியிட்டது. அந்த அறிக்கை முற்றிலும் போலியானது என்றும், இந்த மாதிரி எந்தச் செய்தியையும் தாங்கள் வெளியிடவில்லை என்றும், இம்ரான் கான் அவர்கள் நலமுடன் இருக்கிறார் என்றும் அரசுத் தரப்பில் உறுதி செய்யப்பட்டது.
இருப்பினும், இம்ரான் கானின் அரசியல் கட்சி உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் அவர் உடல்நலம் குறித்து இன்னும் அச்சத்துடன்தான் இருக்கிறார்கள். அவர் உடல்நிலையைச் சோதிக்க மருத்துவர்களை அனுமதிக்க அரசு மறுக்கிறது என்றும், அவர் மிக மோசமான சூழலில் சிறைச்சாலையில் வைக்கப்பட்டு இருக்கிறார் என்றும் அவருடைய கட்சி நிர்வாகிகள் நீதிமன்றத்தில் முறையிட்டு இருக்கிறார்கள். பொதுமக்களிடையே அமைதியைக் காக்கவும், அதிகாரப்பூர்வமாக வரும் செய்திகளை மட்டுமே நம்ப வேண்டும் என்றும் அரசுத் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.