கனடாவில் நடந்த ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவருக்குப் பெரிய அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜக்ஜித் சிங் (51 வயது) என்ற இந்தியர், கனடாவில் பிறந்துள்ள தன்னுடைய பேரன்/பேத்தியைப் பார்க்கச் சுற்றுலா விசாவில் (6 மாத விசா) ஜூலை மாதம் கனடாவின் ஒன்டாரியோ பகுதிக்குச் சென்றிருந்தார்.
அவர் கனடாவுக்குச் சென்ற சில நாட்களிலேயே, சார்னியா (Sarnia) பகுதியில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியின் அருகில் அடிக்கடி நின்றுள்ளார். செப்டம்பர் 8 முதல் 11-ஆம் தேதி வரை, பள்ளியின் வெளியே புகைப்பிடிக்கும் இடத்தில் இருந்த இளம் மாணவிகளை அவர் தொடர்ந்து தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது. அந்தச் சிறுமிகளிடம் அவர் கட்டாயப்படுத்தி புகைப்படம் எடுக்க முயன்றதுடன், போதைப் பொருட்கள் மற்றும் மதுபானங்கள் பற்றிப் பேசியுள்ளார்.
சிறுமி ஒருவர் முதலில் புகைப்படம் எடுக்க மறுத்தும், அவர் தொடர்ந்து தொந்தரவு செய்யவே, வேறு வழியில்லாமல் சம்மதித்துள்ளார். அப்போது சிங், அந்தச் சிறுமியின் மிக அருகில் வந்து கையை அவள் மீது போட முயன்றுள்ளார். இதனால் பயந்துபோன அந்தச் சிறுமி, அவரது கையைத் தள்ளிவிட்டுள்ளார். மேலும், ஆங்கிலம் பேசத் தெரியாத சிங், பள்ளி முடிந்து செல்லும் சில மாணவிகளைத் தொடர்ந்து பின் தொடர்ந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இந்தச் புகார்களின் அடிப்படையில், சிங் செப்டம்பர் 16-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் மீது பாலியல் தாக்குதல் மற்றும் பாலியல் வன்முறைக்கான முயற்சி ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. பிறகு, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, பாலியல் வன்முறைக்கான முயற்சியை மறுத்து, குற்றவியல் தொந்தரவு செய்ததை ஒப்புக்கொண்டார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிறிஸ்டா லின் லெஸ்சிசின்ஸ்கி, "பள்ளி வளாகத்தில் இவர் சென்றிருக்க வேண்டிய அவசியமே இல்லை. இத்தகைய நடத்தை கனடாவில் ஒருபோதும் அனுமதிக்கப்படாது" என்று கடுமையாகக் கண்டனம் தெரிவித்தார். சிங், டிசம்பர் 30-ஆம் தேதி இந்தியாவுக்குத் திரும்பத் தயாராக இருந்தபோதிலும், நீதிபதி அவரை உடனடியாக நாடு கடத்தவும், மீண்டும் கனடாவிற்குள் நுழைய வாழ்நாள் தடை விதிக்கவும் உத்தரவிட்டார். மேலும், அவர் குழந்தைகளிடம் பேசக் கூடாது, பள்ளிகள், பூங்காக்கள் போன்ற இடங்களுக்கு 100 மீட்டருக்குள் செல்லக் கூடாது என்ற கடுமையான நிபந்தனைகளுடன் மூன்று வருடத்திற்கான நன்னடத்தை உத்தரவையும் நீதிபதி விதித்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.