அமெரிக்காவில் அதிக சம்பளத்துடன் பணியாற்ற வேண்டும் என்பது இந்தியாவைச் சேர்ந்த பல தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களின் நீண்டகாலக் கனவாக இருந்து வருகிறது. ஆனால், தற்போது அந்தக் கனவில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. அமெரிக்காவில் நிலவும் விசா நிச்சயமற்ற தன்மை, குடியேற்றக் கொள்கைகளில் ஏற்பட்டுள்ள கடுமையான மாற்றங்கள், தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் ஆகிய காரணங்களால் அங்கு பணியாற்றும் இந்தியர்கள் பலர் தாயகம் திரும்பத் தொடங்கியுள்ளனர். இருப்பினும், இந்தியாவுக்குத் திரும்பிய பிறகு அவர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் வேலைவாய்ப்பு மட்டுமல்ல; அமெரிக்காவில் பெற்ற சம்பளத்துடன் ஒப்பிடும்போது இந்தியாவில் கிடைக்கும் சம்பளம் மிகவும் குறைவாக இருப்பதுதான்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகத்தின் குடியேற்றக் கொள்கை மாற்றங்கள் இந்த விவாதத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. குறிப்பாக, எச்-1பி விசா நடைமுறைகளில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற தன்மை, நிரந்தரக் குடியுரிமைக்காகக் காத்திருப்பவர்களின் நீண்ட காலதாமதம் போன்றவை இந்தியத் தொழில்நுட்பப் பணியாளர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளன. இதனுடன் அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி மற்றும் நிறுவன மறுசீரமைப்பு காரணமாக வேலைவாய்ப்புகள் குறைக்கப்படுவதும் பலரை மாற்று வாய்ப்புகளைத் தேடச் செய்துள்ளது.
Xpheno என்ற வேலைவாய்ப்பு ஆய்வு மற்றும் ஆட்சேர்ப்பு நிறுவனத்தின் தரவுகளின்படி, 2026ஆம் ஆண்டில் இதுவரை சுமார் 12,900 தொழில்நுட்பப் பணியாளர்கள் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பியுள்ளனர். 2025ஆம் ஆண்டு முழுவதும் சுமார் 15,100 பேர் திரும்பியிருந்தனர். அதேநேரத்தில், இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்குச் சென்ற தொழில்நுட்பப் பணியாளர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. 2025ஆம் ஆண்டில் சுமார் 21,200 பேர் அமெரிக்காவுக்குச் சென்ற நிலையில், 2026ஆம் ஆண்டில் இதுவரை அந்த எண்ணிக்கை 14,800 ஆக உள்ளது. இந்தப் போக்கு தொடர்ந்தால், இந்த ஆண்டில் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்குத் திரும்புவோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டின் அளவையும் தாண்டக்கூடும் எனத் தொழில்துறை வல்லுநர்கள் கணிக்கின்றனர்.
தாயகம் திரும்பும் அனைவருக்கும் உடனடியாக உயர்ந்த சம்பளத்தில் வேலை கிடைத்துவிடுவதில்லை. அமெரிக்காவில் பல ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் இருந்தாலும், இந்திய நிறுவனங்கள் அவர்களுக்கு வெளிநாட்டு அனுபவத்தின் அடிப்படையில் மட்டும் அதிக சம்பளம் வழங்கத் தயாராக இல்லை. ஒருவரின் தொழில்நுட்பத் திறன், குறிப்பிட்ட துறையில் உள்ள அனுபவம், நிறுவனத்தின் தேவைகள், பொறுப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில்தான் சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. இதனால் அமெரிக்காவில் பெற்ற சம்பளத்தை இந்தியாவிலும் எதிர்பார்க்கும் பலர் ஏமாற்றத்தைச் சந்திக்கின்றனர்.
அமெரிக்காவில் எச்-1பி விசாவில் பணியாற்றும் இத்தகைய நிபுணர்களுக்கு ஆண்டுக்கு சுமார் 70,000 முதல் 1.5 லட்சம் அமெரிக்க டாலர்கள் வரை சம்பளம் கிடைக்கலாம். சராசரியாக ஆண்டுக்கு 1.05 லட்சம் டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு இணையான தொகை கிடைக்கிறது. ஆனால், அதே திறனும் அனுபவமும் கொண்ட இந்தியாவின் மிகச் சிறந்த ஒரு சதவீத நிபுணர்களுக்குக்கூட ஆண்டுக்கு சுமார் 19 லட்சம் முதல் 30 லட்சம் ரூபாய் வரையிலான சம்பளமே கிடைப்பதாக Xpheno தரவுகள் தெரிவிக்கின்றன. இதனால் சிலர் அமெரிக்காவில் பெற்ற சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கு அல்லது நான்கில் ஒரு பங்கு மட்டுமே கிடைக்கும் வேலைகளை ஏற்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
அப்படியானால் இந்தியாவில் வேலைவாய்ப்புகளே இல்லையா என்ற கேள்வியும் எழுகிறது. உண்மையில், செயற்கை நுண்ணறிவு, கிளவுட் கம்ப்யூட்டிங், சைபர் பாதுகாப்பு, தரவு பகுப்பாய்வு, மென்பொருள் உருவாக்கம் போன்ற துறைகளில் திறமையானவர்களுக்கான தேவை தொடர்ந்து காணப்படுகிறது. குறிப்பாக, உலகளாவிய நிறுவனங்களின் இந்திய அலுவலகங்கள் என்று அழைக்கப்படும் GCC நிறுவனங்கள் அனுபவமுள்ள பணியாளர்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்குகின்றன. அமெரிக்காவிலிருந்து திரும்பிய சுமார் 2,500 மூத்த தொழில்நுட்ப வல்லுநர்கள் இத்தகைய நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளதாக TeamLease Digital நிறுவனம் தெரிவித்துள்ளது. இங்கு சிலருக்கு தயாரிப்புகளை உருவாக்குதல், தொழில்நுட்பத் திட்டங்களை நிர்வகித்தல் போன்ற பெரிய பொறுப்புகளும் கிடைக்கின்றன.
இந்த வருகை இந்தியாவில் ஏற்கெனவே பணியாற்றும் தொழில்நுட்ப ஊழியர்களுக்குப் புதிய போட்டியை உருவாக்கலாம். குறிப்பாக மூத்த பணியிடங்கள் மற்றும் அதிக அனுபவம் தேவைப்படும் வேலைகளுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதேவேளையில், வெளிநாடுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்கள் இந்திய நிறுவனங்களுக்குப் புதிய தொழில்நுட்ப அறிவையும் சர்வதேசப் பணிச்சூழல் அனுபவத்தையும் கொண்டு வர முடியும்.
அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பும் தொழில்நுட்ப வல்லுநர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை வெறும் வேலைவாய்ப்பு மாற்றமாக மட்டும் பார்க்க முடியாது. இது உலகளாவிய தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டுவரும் மாற்றத்தின் ஒரு பகுதியாகும். வெளிநாட்டு சம்பளத்தை எதிர்பார்ப்பதற்குப் பதிலாக இந்தியச் சந்தையின் நிலை, தங்களுடைய திறனுக்கான தேவை, எதிர்கால வளர்ச்சி வாய்ப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு முடிவெடுக்க வேண்டிய சூழல் திரும்பி வருபவர்களுக்கு உருவாகியுள்ளது. அமெரிக்காவில் கிடைத்த வருமானத்தை இழந்தாலும், இந்தியாவில் கிடைக்கும் புதிய பொறுப்புகளும் வளர்ச்சி வாய்ப்புகளும் அவர்களின் அடுத்தகட்ட வாழ்க்கையைத் தீர்மானிக்கப் போகின்றன.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.