அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள லாரன்ஸ்வில் (Lawrenceville) நகரில், குடும்பத் தகராறு காரணமாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவி மற்றும் மூன்று உறவினர்களைத் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 23, 2026) அதிகாலை 2.30 மணியளவில் நடைபெற்ற இந்தக் கொடூரச் சம்பவத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். கொலையாளி 51 வயதான விஜய் குமார் (Vijay Kumar) என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். அட்லாண்டாவில் வசித்து வந்த இவர், தனது மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தத் துயரச் சம்பவத்தில் விஜய் குமாரின் மனைவி மீமு டோக்ரா (Meemu Dogra - 43), கௌரவ் குமார் (Gourav Kumar - 33), நிதி சந்தர் (Nidhi Chander - 37) மற்றும் ஹரிஷ் சந்தர் (Harish Chander - 38) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அட்லாண்டாவில் உள்ள தனது வீட்டில் மனைவி மீமுவுடன் விஜய் குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அங்கிருந்து தனது மகனை அழைத்துக்கொண்டு லாரன்ஸ்வில்லில் உள்ள புரூக் ஐவி கோர்ட் (Brook Ivy Court) பகுதியில் வசித்து வந்த உறவினர்களின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்குச் சென்ற பிறகும் தகராறு முற்றிய நிலையில், விஜய் குமார் தனது கைத்துப்பாக்கியை எடுத்து அங்கிருந்த அனைவரையும் நோக்கிச் சரமாரியாகச் சுட்டுள்ளார். இதில் நான்கு பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்து பலியானார்கள்.
துப்பாக்கிச் சூடு நடந்த சமயத்தில் அந்த வீட்டில் விஜய் குமாரின் 12 வயது மகன் உட்பட 7 மற்றும் 10 வயதுடைய மூன்று குழந்தைகள் இருந்துள்ளனர். துப்பாக்கிச் சத்தத்தைக் கேட்டுப் பயந்துபோன அந்த மூன்று குழந்தைகளும், தங்களைக் காப்பாற்றிக் கொள்ள உடனடியாக அங்கிருந்த ஒரு அலமாரிக்குள் (Closet) சென்று ஒளிந்துகொண்டனர். அதிர்ஷ்டவசமாக அந்தக் குழந்தைகளுக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை. அலமாரிக்குள் ஒளிந்திருந்த விஜய் குமாரின் மகனே தைரியமாக அமெரிக்க அவசர உதவி எண்ணான 911-க்குத் தொடர்பு கொண்டு காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். அந்தச் சிறுவன் அளித்த துல்லியமான தகவல்கள் மற்றும் அந்த வீட்டின் அமைப்பை விவரித்த விதம், காவல்துறையினர் அடுத்த சில நிமிடங்களிலேயே சம்பவ இடத்திற்கு வந்து சேர உதவியது.
காவல்துறையினர் வந்தபோது விஜய் குமாரின் கார் அந்த வீட்டின் முன்பே நின்றிருந்தது. இதனால் அவர் தப்பியோடி இருக்க வாய்ப்பில்லை என்பதை உணர்ந்த காவல்துறையினர், மோப்ப நாய்களின் (K-9 units) உதவியுடன் வீட்டைச் சுற்றியுள்ள காட்டுப் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது வீட்டின் அருகே இருந்த அடர்ந்த மரங்களின் மறைவில் ஒளிந்திருந்த விஜய் குமாரை காவல்துறையினர் சுற்றி வளைத்துப் பிடித்தனர். தற்போது அவர் மீது நான்கு கொலைக் குற்றச்சாட்டுகள் (Malice Murder), நான்கு படுகொலை குற்றச்சாட்டுகள், துப்பாக்கிச் சூடு மற்றும் குழந்தைகள் மீதான கொடுமை உள்ளிட்ட பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து அட்லாண்டாவில் உள்ள இந்தியத் தூதரகம் (Consulate General of India) ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் ஒருவர் இந்தியக் குடிமகன் என்றும், மற்றவர்கள் இந்திய வம்சாவளியினர் என்றும் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து சட்ட உதவிகளையும், மற்ற உதவிகளையும் தூதரகம் செய்து வருவதாகத் தனது எக்ஸ் (X) பக்கத்தில் பதிவிட்டுள்ளது. தப்பிப் பிழைத்த குழந்தைகள் மூன்றும் தற்போது பாதுகாப்பாக உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். குடும்பத் தகராறு நான்கு உயிர்களைப் பறித்ததோடு, மூன்று குழந்தைகளின் வாழ்க்கையையும் ஒரு நரகமாக மாற்றியுள்ள இந்தச் சம்பவம் அமெரிக்காவில் உள்ள இந்திய சமூகத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.