மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், காசா பகுதியில் பதற்றம் குறைந்தபாடில்லை. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருக்கும் நிலையில், இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய பாதுகாப்புப் பொறுப்பாளர் கொல்லப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இரு தரப்புக்கும் இடையே மீண்டும் மோதல் அதிகரிக்குமா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
காசா நகரின் மேற்குப் பகுதியில் செவ்வாய்க்கிழமை இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஹமாஸ் அமைப்பின் உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவுக்குத் தலைமை வகித்து வந்த நயீம் அபு நஹேல் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காசா பகுதியில் அமைப்பின் உள்நாட்டுப் பாதுகாப்பு நடவடிக்கைகளை கவனித்து வந்த முக்கிய நபராக அவர் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதலை இஸ்ரேல் ராணுவமும் அந்நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பு அமைப்பான ஷின் பெட்டும் கூட்டாக உறுதிப்படுத்தியுள்ளன. ஹமாஸ் அமைப்பின் மூத்த உறுப்பினர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்துள்ள அவை, உயிரிழந்த நபரின் பெயரை உடனடியாக வெளியிடவில்லை. இதுதொடர்பாக கூடுதல் விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளன. இதனால் தாக்குதலின் முழுமையான பின்னணி குறித்து இன்னும் தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.
கடந்த 2025-ம் ஆண்டு அக்டோபரில் அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. இதன் மூலம் நீண்ட காலமாகத் தொடர்ந்து வந்த பெரிய அளவிலான சண்டைகள் ஓரளவுக்குக் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த பிறகும் காசா பகுதியில் இஸ்ரேலின் ராணுவத் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. குறிப்பாக ஹமாஸ் அமைப்பின் முக்கியத் தலைவர்கள் மற்றும் தளபதிகளைக் குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்படுவது கவனத்தை ஈர்த்துள்ளது.
கடந்த நவம்பர் 15-ம் தேதியும் தெற்கு காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் ரஃபா படைப்பிரிவுக்குத் தலைமை வகித்த சமீர் அபு யூனிஸ் கொல்லப்பட்டார். அவரது உயிரிழப்பை இஸ்ரேலும் ஹமாஸ் அமைப்பும் உறுதிப்படுத்தின. இதற்கு முன்னதாக நவம்பர் மாத தொடக்கத்திலும் நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஹமாஸ் ராணுவ உளவுப் பிரிவின் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான ஜமால் அபு சயீத் உள்ளிட்ட ஏழு பேர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. இவ்வாறு தொடர்ந்து முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள் குறிவைக்கப்படுவது காசா பகுதியில் பதற்றத்தை அதிகரித்து வருகிறது.
காசா மக்களின் வாழ்க்கை நிலையும் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. நீண்ட காலமாகத் தொடரும் ராணுவ நடவடிக்கைகளால் அப்பகுதியில் வீடுகள், மருத்துவமனைகள், குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டமைப்புகள் பெருமளவில் சேதமடைந்துள்ளன. சர்வதேசத் தொண்டு அமைப்பான ஆக்ஸ்பாம் வெளியிட்ட எச்சரிக்கையின்படி, காசாவின் 99 சதவீதத்திற்கும் அதிகமான பகுதிகளில் சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. குண்டுவெடிப்புகளால் உருவான நச்சுப் பொருட்கள், கன உலோகங்கள், சேதமடைந்த கட்டடங்களில் உள்ள ஆஸ்பெஸ்டாஸ் போன்றவை மக்களின் உடல்நலத்துக்கு நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
அங்குள்ள ஆறு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களும் செயல்படாமல் இருப்பதால், சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நிலத்தடி நீரிலும் கடல் பகுதியிலும் கலக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மழை மற்றும் குளிர்காலப் புயல்களால் மாசடைந்த நீர் குடியிருப்புப் பகுதிகளுக்கும் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள முகாம்களுக்கும் பரவும் நிலை உருவாகியுள்ளது. இத்தகைய சூழலில், போர் நிறுத்த ஒப்பந்தம் இருந்தும் தாக்குதல்கள் தொடர்வது காசா மக்களின் எதிர்காலம் குறித்த கவலையை அதிகரித்துள்ளது. ஒரு பக்கம் இரு தரப்புக்கும் இடையே அமைதியை ஏற்படுத்தும் முயற்சிகள் நடைபெறுகின்றன; மறுபக்கம் தாக்குதல்கள் மற்றும் உயிரிழப்புகள் தொடர்கின்றன. இதனால் காசாவில் உண்மையான அமைதி எப்போது திரும்பும் என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்