பாகிஸ்தானின் அரசியல் அரங்கில் தற்போது ஏற்பட்டிருக்கும் அதிர்ச்சிகரமான மாற்றம், அந்நாட்டின் மக்களாட்சி மரபுகளை மட்டுமல்லாமல், அதன் அடிப்படைச் சட்டக் கட்டமைப்பையேத் தலைகீழாக மாற்றியிருக்கிறது. அண்மையில், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 'இருபத்தி ஏழாவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம்' (27th Constitutional Amendment) என்பது, ஒரு இராணுவப் புரட்சி இல்லாமல், அரசமைப்புச் சட்டத்தின் வழியாகவே இராணுவத்தின் அதிகாரத்தை நிரந்தரமாக நிலைநிறுத்தும் ஒரு 'இரத்தமற்றப் புரட்சி'யாகப் பார்க்கப்படுகிறது. இந்தச் சட்டத்திருத்தத்தின் மூலம், அந்நாட்டின் அதிகாரம்மிக்க இராணுவத் தளபதியான சையத் ஆசிம் முனீருக்கு இணையற்ற அதிகாரங்களும், வாழ்நாள் சட்டப் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளன. இது, குடியுரிமை ஆட்சியின் அதிகாரத்தைக் குறைத்து, இராணுவத்தின் மேலாதிக்கத்தை சட்டபூர்வமாக்கியுள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர்.
இந்தத் திருத்தச் சட்டம், நாடாளுமன்றத்தில் மிகக் குறுகிய கால அவகாசத்தில், ஆளும் கட்சிகளின் பலத்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. நாட்டின் ஆளுங்கூட்டணியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியும், பாகிஸ்தான் மக்கள் கட்சிகளும் ஒன்றிணைந்து, இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சட்டத்தை ஆதரித்தன. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் இந்தச் சட்டம் சட்டமானது. முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ.) கட்சி நாடாளுமன்றத்தில் இந்தக் கூட்டம் நடந்தபோது, மசோதாவின் பிரதிகளை கிழித்து எறிந்து தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தது. ஆயினும், இந்தச் சட்ட மாற்றங்கள் பாகிஸ்தானின் ஜனநாயகச் செயல்பாட்டை நசுக்கி, நீதித்துறையின் சுதந்திரத்தைப் பறிக்கும் ஒரு சர்வாதிகார நகர்வு என்று எதிர்க்கட்சிகள் கொதித்தெழுந்துள்ளன.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தச் சட்டத்திருத்தத்தின் மையப்பகுதியாக, இராணுவத் தளபதி ஆசிம் முனீருக்குக் கிடைத்துள்ளப் புதிய உயர் பதவியும், பாதுகாப்பும் அமைகின்றன. முனீர், ‘ஃபீல்டு மார்ஷல்’ என்ற ஐந்து நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டதோடு மட்டுமல்லாமல், மூன்று இராணுவப் பிரிவுகளுக்கும் ஒரே தலைமைத் தளபதியாக இருக்கும் வகையில், 'பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி' (Chief of Defence Forces - CDF) என்ற புதிய பதவியை உருவாக்கப்பட்டு, அதிலும் நியமிக்கப்பட்டிருக்கிறார். முன்னதாக, இராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய மூன்றுப் படைகளின் தளபதிகளும் சம அந்தஸ்தில் இருந்த நிலை மாறி, இப்போது முனீர் தலைமையிலான இராணுவமே மொத்தப் பாதுகாப்பு அமைப்பின் உச்சகட்ட அதிகார மையமாக மாறியிருக்கிறது. இதன்மூலம், நாட்டின் அணு ஆயுதக் கட்டுப்பாடும், பாதுகாப்பு உத்தியும் இனி நேரடியாகத் தலைமைத் தளபதியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், இந்தச் சட்டத்தின் மிக முக்கியமான அம்சம் யாதெனில், இராணுவத்தின் மிக உயர்ந்த பதவியில் இருப்பவர்களுக்கு, பதவி முடிந்த பின்னரும் கூட, வாழ்நாள் முழுவதும் குற்றவியல் நடவடிக்கைகளில் இருந்து விலக்கும், சட்டப் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருப்பது தான்.
இந்தச் சட்டத்திருத்தமானது இராணுவத்தின் அதிகார வரம்பை விரிவாக்கியதோடு மட்டுமல்லாமல், நீதித்துறையின் சுதந்திரத்தையும் கடுமையாகத் தாக்கி, அதன் பிடியை தளர்த்தியுள்ளது. இதுநாள் வரை நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சங்கள் குறித்து கேள்வியெழுப்பவும், அரசைக் கட்டுப்படுத்தவும் உச்ச நீதிமன்றத்திற்கு இருந்த அதிகாரமானது, இப்போது புதிதாக உருவாக்கப்பட்ட 'கூட்டாட்சி அரசியலமைப்பு நீதிமன்றத்திற்கு' (Federal Constitutional Court) மாற்றப்பட்டிருக்கிறது. இந்த புதிய நீதிமன்றத்தின் நீதிபதிகள் நேரடியாக ஆளும் அரசால் நியமிக்கப்படுவார்கள். இதன்மூலம், மிகவும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை இனி அரசைச் சார்ந்திருக்கும் நீதிபதிகளே விசாரிப்பார்கள் என்பதால், உச்ச நீதிமன்றத்தின் அசல் அதிகாரம் பறிக்கப்பட்டதாகவேப் பார்க்கப்படுகிறது. அத்துடன், மாகாண உயர் நீதிமன்ற நீதிபதிகளை இடமாற்றம் செய்யவும் குடியரசுத் தலைவருக்கு இந்தத் திருத்தம் அதிகாரமளிக்கிறது. இந்த மாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பதவி விலகியிருப்பது, நீதித்துறைக்குள் நிலவும் தீவிரமான அச்சத்தையும், பதற்றத்தையும் வெளிப்படுத்துகிறது.
இத்தகையச் சட்டத் திருத்தத்தை ஆளும் தரப்பினர், குறிப்பாக சட்டத்துறை அமைச்சர், மே மாதம் இந்தியாவுடனான எல்லைச் சண்டையில் முனீர் தலைமையிலானப் படைகளின் "வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைக்" காரணம் காட்டி ஆதரித்தார். முனீர் நாட்டுக்கே ஒரு மாவீரன் என்றும், அவருக்கானப் பாதுகாப்பை அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வாதிட்டார். அத்துடன், நவீனப் போரியல் சூழலில், மூன்றுப் படைகளுக்கும் ஒரே ஒரு தலைமைத் தளபதி இருப்பது பாதுகாப்புக்கு அவசியம் என்றும் அவர்கள் நியாயம் கற்பித்தனர். ஆனால், முனீர் மே மாத மோதலுக்குப் பிறகு 'ஃபீல்டு மார்ஷல்' பதவிக்கு உயர்த்தப்பட்டதை இராணுவ ஆய்வாளர்கள் கேள்விக்கு உள்ளாக்குகின்றனர். அந்த மோதலில் விமானப் போரே அதிக ஆதிக்கம் செலுத்திய நிலையில், தரைப்படை தளபதிக்கு அந்தப் பதவி வழங்கப்பட்டது அரசியலில் ஆதிக்கம் செலுத்துவதற்காகவே என்று அவர்கள் கருதுகின்றனர். மேலும், இந்தத் திருத்தம், இராணுவத்தின் நடவடிக்கைகள் மீதான குடியுரிமை மேற்பார்வையைப் (Civilian Oversight) பூண்டோடு நீக்கிவிடும் என்றும், இராணுவ அதிகார அமைப்பில் சமநிலையைப் பாதிக்கும் என்றும் சட்ட வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
முன்னாள் இராணுவ ஆட்சியாளர்களான ஜியா-உல்-ஹக் மற்றும் பர்வேஸ் முஷாரஃப் ஆகியோரைப் போலவே, ஆசிம் முனீரும் அதிகாரத்தைக் குவித்துள்ளார். ஆனால், முஷாரஃப் இராணுவப் புரட்சி மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றிய நிலையில், முனீர் அதற்கு அரசமைப்புச் சட்டத்தின் வழியாகச் சட்டபூர்வ அங்கீகாரத்தை வழங்கியிருக்கிறார். இராணுவத்தின் இந்தப் புதிய அதிகாரம், நாட்டின் மக்களாட்சியின் எதிர்காலத்தை இருளில் தள்ளியுள்ளது. இது, பாகிஸ்தான் தனது குடியுரிமை அரசாங்கத்திற்கும், நீண்ட காலமாக அதிகாரத்தில் கோலோச்சும் இராணுவத்திற்கும் இடையேயான பலம் மிகுந்த அதிகாரச் சமநிலையைக் கட்டிக்காக்கத் தவறிவிட்டது என்பதையே உணர்த்துகிறது. நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற்ற இந்தத் திருத்தமானது, முனீர் அவர்களுக்கு 2027ஆம் ஆண்டுடன் முடிவடையவிருந்த பதவிக்காலத்தை 2030ஆம் ஆண்டு வரையிலும் நீட்டித்துள்ளது. இதன்மூலம், எதிர்வரும் பொதுத் தேர்தல்களையும் அவர் மேற்பார்வையிடும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
இந்தச் சட்டத்திருத்தத்தின் மற்றொருப் பயனாளியாக குடியரசுத் தலைவர் ஆசிப் அலி சர்தாரி இருக்கிறார். அவருக்கும் இந்தச் சட்டத்தின் கீழ் வாழ்நாள் சட்டவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பல சட்ட வழக்குகளைச் சந்தித்துவரும் சர்தாரிக்கு, இந்தச் சட்டப் பாதுகாப்பு ஒரு வரப்பிரசாதமாகக் கருதப்படுகிறது. சுருக்கமாகச் சொன்னால், இந்த இருபத்தி ஏழாவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, நீதித்துறை, மற்றும் இராணுவம் ஆகிய மூன்றுத் தூண்களில், இராணுவத்தைத் தவிர மற்ற இரண்டும் இராணுவ அதிகாரத்தின் கீழ் கட்டுண்டு கிடக்கின்றன என்பதைப் பகிரங்கமாக அறிவித்திருக்கிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.