White LED street lights White LED street lights
உலகம்

"இரவில் எரியும் வெள்ளை விளக்குகள்…" ஆயிரக்கணக்கான உயிர்களுக்கு தெரியாமல் விரியும் மரண வலை!

இந்தச் சுழற்சியில் சிக்கிய உயிரினங்கள் மணிக்கணக்கில் சுற்றிக்கொண்டே இருப்பதால், அவற்றின் சக்தி முழுவதும் வீணாகிறது.

மாலை முரசு செய்தி குழு

நகரங்களின் சாலைகள் இரவு நேரத்தில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக தெருவிளக்குகள் அமைக்கப்படுகின்றன. அவை மனிதர்களுக்கு வழிகாட்டுகின்றன, விபத்துகளை குறைக்கின்றன, குற்றச்செயல்களைத் தடுக்க உதவுகின்றன. ஆனால், மனிதர்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த வெள்ளை LED தெருவிளக்குகள், இயற்கையில் வாழும் சிறிய உயிரினங்களுக்கு எதிர்பாராத ஆபத்தாக மாறியிருப்பதை புதிய அறிவியல் ஆய்வு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

இஸ்ரேலில் நடத்தப்பட்ட புதிய ஆய்வில், வெள்ளை நிற தெருவிளக்குகள் ஆயிரக்கணக்கான ‘பில் பக்’ (Pill Bug அல்லது Woodlouse) எனப்படும் சிறிய நிலவாழ் உயிரினங்களை ஒரு விசித்திரமான “Death Spiral” எனப்படும் சுழல் இயக்கத்திற்குள் சிக்க வைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்தச் சுழற்சியில் சிக்கிய உயிரினங்கள் மணிக்கணக்கில் சுற்றிக்கொண்டே இருப்பதால், அவற்றின் சக்தி முழுவதும் வீணாகிறது. இறுதியில் அவை சோர்வடைந்து வேட்டையாடும் பறவைகள் மற்றும் பிற உயிரினங்களுக்கு எளிய இரையாக மாறுகின்றன.

பில் பக் அல்லது வுட்லைஸ் என்பது பூச்சி அல்ல. அவை நண்டு, இறால் போன்றவற்றின் உறவினர்களாகக் கருதப்படும் சிறிய நிலவாழ் கிரஸ்டேஷியன் (Crustacean) உயிரினங்கள். தமிழில் இவற்றை பொதுவாக “உருண்டைப் பூச்சி” என்று பலர் அழைப்பார்கள். ஆபத்து ஏற்பட்டால் உடலை முழுமையாக உருட்டி பந்துபோல் மாறும் தன்மை இவற்றுக்குண்டு. இவை பொதுவாக ஈரமான மண், கற்கள் அடியில், உதிர்ந்த இலைகள் நிறைந்த பகுதிகளில் வாழ்கின்றன. இயற்கையில் அழுகிய தாவரங்களைச் சிதைத்து மண்ணை வளப்படுத்தும் முக்கிய பணியை இவை செய்து வருகின்றன.

இந்த ஆய்வின் தொடக்கமே மிகவும் சுவாரஸ்யமானது. வடக்கு இஸ்ரேலின் கோலன் ஹைட்ஸ் பகுதியில் ஒரு கோடை இரவில் இயற்கை ஆர்வலரான எவியாதார் இட்ஸ்கோவிச் தெருவிளக்கின் கீழ் ஆயிரக்கணக்கான சிறிய உயிரினங்கள் ஒரே திசையில் வட்டமாகச் சுற்றிக்கொண்டிருப்பதைக் கவனித்தார். ஆரம்பத்தில் இது சாதாரண நிகழ்வாகத் தோன்றினாலும், பல மணி நேரம் கழித்தும் அவை தொடர்ந்து அதேபோல் சுற்றிக்கொண்டிருந்ததைப் பார்த்த அவர், இந்த தகவலை ஜெருசலேமில் உள்ள ஹீப்ரு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களிடம் பகிர்ந்தார். அதன்பிறகே இந்த விஷயம் அறிவியல் ஆய்வாக மாறியது.

ஆய்வாளர்கள் பல இரவுகள் தொடர்ந்து கண்காணித்தபோது, சில தெருவிளக்குகளின் கீழ் 5,000-க்கும் அதிகமான பில் பக்குகள் ஒரே நேரத்தில் மிகப்பெரிய வட்ட வடிவில் சுற்றிக்கொண்டிருப்பதை பதிவு செய்தனர். இதுபோன்ற நடத்தை இதற்கு முன்பு உலகில் எந்த நிலவாழ் ஐசோபாட் (Isopod) இனத்திலும் பதிவாகவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விசித்திரமான நடத்தை ஏன் ஏற்படுகிறது என்பதை அறிய விஞ்ஞானிகள் பல சோதனைகள் மேற்கொண்டனர். முதலில், அப்பகுதியில் இருக்கும் காந்தப்புலம் (Magnetic Field) காரணமாக இருக்குமா என்று ஆய்வு செய்தனர். அதற்காக சக்திவாய்ந்த காந்தங்களை பயன்படுத்தியும் சோதனை நடத்தினர். ஆனால், பில் பக்குகளின் நடத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

அடுத்ததாக, புறஊதாக் கதிர்கள் (Ultraviolet Light) காரணமா என்று ஆராய்ந்தனர். அதுவும் காரணமில்லை என்பது உறுதியானது. இறுதியில், முக்கிய காரணம் வெள்ளை நிற செயற்கை வெளிச்சம் என்பதே தெரியவந்தது. தெருவிளக்கால் உருவாகும் வட்டமான ஒளிப்பகுதியின் எல்லையை பில் பக்குகள் தொடர்ந்து பின்தொடர முயற்சிக்கின்றன. ஒருவர் சுற்றத் தொடங்கினால், மற்ற உயிரினங்களும் அதே பாதையைப் பின்பற்றுகின்றன. இதனால் சிறிய வட்டம், சில நிமிடங்களில் ஆயிரக்கணக்கான உயிரினங்களைக் கொண்ட மிகப்பெரிய சுழற்சியாக மாறுகிறது. இந்தச் சுழற்சியை விஞ்ஞானிகள் “Death Spiral” என்று அழைக்கக் காரணமும் அதுதான். இந்த உயிரினங்கள் உணவு தேடவோ, தண்ணீர் தேடவோ முடியாமல் ஒரே இடத்தில் தொடர்ந்து சுற்றிக்கொண்டே இருக்கின்றன. இதனால் அவற்றின் உடல் சக்தி முழுவதும் குறைகிறது. மேலும், திறந்த வெளியில் நீண்ட நேரம் இருப்பதால் பறவைகள், பல்லிகள் மற்றும் பிற வேட்டையாடும் உயிரினங்களுக்கு அவை எளிதில் கண்ணில் படுகின்றன. இதனால் அவற்றின் உயிர் பிழைக்கும் வாய்ப்பு மிகவும் குறைகிறது.

இந்த ஆய்வு இன்னொரு முக்கியமான விஷயத்தையும் வெளிப்படுத்துகிறது. இதுவரை ஒளி மாசுபாடு (Light Pollution) குறித்து பேசும்போது, இரவு நேரப் பறவைகள், பட்டாம்பூச்சிகள், கடல் ஆமைகள் அல்லது வௌவால்கள் மீது ஏற்படும் தாக்கங்கள் பற்றியே அதிகமாக ஆராயப்பட்டது. ஆனால், மண்ணுக்கு மிக அருகில் வாழும் சிறிய உயிரினங்களின் நடத்தையையும் செயற்கை வெளிச்சம் இவ்வளவு ஆழமாக மாற்றும் என்பது பலருக்கும் புதிய தகவலாக உள்ளது. பில் பக்குகள் அளவில் சிறியதாக இருந்தாலும், சுற்றுச்சூழலில் அவற்றின் பங்கு மிகப் பெரியது. மண்ணில் விழும் உதிர்ந்த இலைகள், அழுகிய தாவரங்கள் போன்றவற்றை சிதைத்து, மீண்டும் மண்ணுடன் கலக்கச் செய்வதில் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன. இதன் மூலம் மண் வளம் அதிகரிக்கிறது. இவற்றின் எண்ணிக்கை குறைந்தால், மண்ணின் இயற்கை சுழற்சியும் பாதிக்கப்படலாம் என்று சுற்றுச்சூழல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்த ஆய்வை வெளியிட்ட ஆராய்ச்சியாளர்கள், தெருவிளக்குகளை முற்றிலும் அகற்ற வேண்டும் என்று கூறவில்லை. மாறாக, ஒளி மாசுபாட்டைக் குறைக்கும் வகையில் திசை கட்டுப்படுத்தப்பட்ட விளக்குகள், தேவையான அளவுக்கு மட்டுமே வெளிச்சம் தரும் அமைப்புகள், இரவு நேரத்தில் தேவையற்ற அதிக ஒளியைத் தவிர்ப்பது போன்ற நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர். இத்தகைய மாற்றங்கள் மனிதர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும்; அதே நேரத்தில் இயற்கை உயிரினங்களின் வாழ்வையும் பாதுகாக்க உதவும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

மனிதர்களுக்கு பாதுகாப்பையும் வசதியையும் வழங்கும் ஒரு சாதாரண தெருவிளக்கு, மற்றொரு உயிரினத்தின் வாழ்க்கையில் உயிரிழப்புக்கான கண்ணியாக மாறலாம் என்பதை இந்த ஆய்வு நினைவூட்டுகிறது. நாம் உருவாக்கும் ஒவ்வொரு தொழில்நுட்ப வசதியும், மனிதர்களை மட்டுமல்லாமல், நம்முடன் வாழும் எண்ணற்ற சிறிய உயிரினங்களின் வாழ்க்கையையும் பாதிக்கக்கூடியது. இரவில் சாலையோரத்தில் அமைதியாக எரியும் ஒரு வெள்ளை தெருவிளக்கைப் பார்க்கும்போது, அதன் கீழ் ஆயிரக்கணக்கான சிறிய உயிர்கள் தங்களுக்கே தெரியாமல் ஒரு முடிவில்லா மரணச் சுழலில் சிக்கியிருக்கலாம் என்பதை இந்த புதிய அறிவியல் கண்டுபிடிப்பு உலகிற்கு உணர்த்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்