ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிடுவதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் திட்டத்தில் தாங்கள் தலையிடப் போவதில்லை என்றும், சண்டை முடிந்த பின்னரே தலையிடுவோம் என்றும் நேட்டோ கூட்டணி நாடுகள் திங்களன்று தெரிவித்துள்ளன. இந்த நடவடிக்கை டிரம்பைக் கோபப்படுத்துவதோடு, கூட்டணியில் உள்ள விரிசல்களை மேலும், அதிகரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. ஈரானுடனான ஆறு வார கால மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உடன்பாட்டை எட்டுவதில் வார இறுதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, திங்கள்கிழமை தொடங்கிய ஹோர்மோஸ் முற்றுகையின் போது, அங்கு அருகில் வரும் எந்தவொரு ஈரானியக் கப்பல்களையும் அமெரிக்க இராணுவம் அழித்துவிடும் என்று டிரம்ப் கூறினார்.
ஹோர்முஸ் நீர்சந்தி வழியாகச் செல்லும் கப்பல்களைத் தடுக்க மற்ற நாடுகளுடன் இணைந்து அமெரிக்கா செயல்படும் என்று டிரம்ப் ஆரம்பத்தில் கூறினார், ஆனால் பின்னர் அமெரிக்க இராணுவம், இந்த முற்றுகையானது ஈரானிய துறைமுகங்களுக்குச் செல்லும் அல்லது அங்கிருந்து வரும் கப்பல்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று தெளிவுபடுத்தியது. பிப்ரவரி 28 அன்று போர் தொடங்கியதிலிருந்து, ஈரான் தனது சொந்தக் கப்பல்களைத் தவிர மற்ற அனைத்துக் கப்பல்களை ஹோர்மோஸ் நீர்சந்தி வழியாக செல்வதை தடுத்துவந்தது. மேலும் ஈரான், அந்த நீர்வழிப்பாதையின் மீதான தனது கட்டுப்பாட்டை நிரந்தரமாக்கவும், அதைப் பயன்படுத்தும் கப்பல்களிடமிருந்து கட்டணங்களை வசூலிக்கப் போவதாக பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.
இதையடுத்து தற்போது டிரம்ப், ஹோர்மோஸ் நீர்சந்தியை முற்றுகையிடப்போவதை பற்றி பேசினார். "இந்த முற்றுகை விரைவில் தொடங்கும். இந்த முற்றுகையில் மற்ற நாடுகளும் ஈடுபடுத்தப்படும்," என்று டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் பதிவிட்டிருந்தார். ஆனால், பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட 'நேட்டோ' கூட்டாளிகள், இந்த முற்றுகையில் பங்கேற்பதன் மூலம் மீண்டும் மோதலில் சிக்கிக்கொள்ளப் போவதில்லை என்றும், மாறாக, பொதுவாக உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு கடந்துசெல்லும் ஹோர்மோஸ் நீர்வழிப்பாதையைத் திறப்பதற்கான ஒரு முயற்சியில் தாங்கள் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தனர். அவர்கள் பங்கேற்க மறுப்பது டிரம்பிற்கும் நேட்டோ நாடுகளுக்கும் உள்ள உறவில் விரிசலை மேலும் அதிகப்படுத்துவதாக கூறப்படுகிறது.
ஈரான் மீதான தாக்குதல்களுக்காக அமெரிக்க இராணுவ விமானங்கள் தங்கள் வான்வழியைப் பயன்படுத்த பல நாடுகள் அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து, இராணுவக் கூட்டணியிலிருந்து விலகப்போவதாக டிரம்ப் அச்சுறுத்தினார். மேலும், ஐரோப்பாவிலிருந்து சில அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுவது குறித்தும் பரிசீலித்து வருகிறார். "நாங்கள் இந்த முற்றுகையை ஆதரிக்கவில்லை," என பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் பிபிசி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். "எவ்வளவு அழுத்தம் இருந்தாலும், நாங்கள் போருக்குள் இழுத்துச் செல்லப்பட மாட்டோம் என்பதுதான் எனது தெளிவான முடிவு," என்றும் அவர் கூறினார். ஹோர்மோஸ் நீர்சந்தியைப் பாதுகாக்க போவதாக அண்மைக் காலத்தில் உறுதியான வாக்குறுதிகளை டிரம்ப் விரும்புகிறார் என நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே ஐரோப்பிய அரசாங்கங்களிடம் தெரிவித்துள்ளார். நேட்டோவின் 32 உறுப்பு நாடுகளும் ஒரு பணிக்குழுவை அமைப்பதற்கு ஒப்புக்கொண்டால், ஹோர்மோஸ் நீர்சந்தியில் நேட்டோ தனக்கென்று ஒரு பங்கை ஆற்ற முடியும் என்று ரூட்டே கூறினார்.
பல ஐரோப்பிய நாடுகள், இந்த போருக்கு ஒரு முழுமையான முடிவு ஏற்பட்ட பின்னரும், தங்கள் கப்பல்கள் தாக்கப்படாது என்று ஈரானுடன் ஒரு உடன்பாடு எட்டப்பட்ட பின்னரும் மட்டுமே, ஹோர்மோஸ் நீர்சந்தியில் உதவத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளன. ஹோர்மோஸ் நீர்சந்தியில் கப்பல் போக்குவரத்தை மீட்டெடுப்பதற்காக, பிரிட்டன் மற்றும் பிற நாடுகளுடன் இணைந்து ஒரு பன்னாட்டுப் பணிக்குழுவை உருவாக்க பிரான்ஸ் ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்யும் என்று பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்தார். "போரிடும் தரப்புகளிடமிருந்து வேறுபட்ட, முற்றிலும் தற்காப்பு சார்ந்த இந்த நடவடிக்கை, சூழ்நிலை அனுமதித்தவுடன் செயல்படுத்தப்படும்," என்றும் மக்ரோன் கூறினார். பாதுகாப்பான பயணத்திற்கான விதிகளை வகுப்பதும், எண்ணெய் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காக இராணுவக் கப்பல்களை ஒருங்கிணைப்பதும் இந்த முன்னெடுப்பின் நோக்கம் என்று ஸ்டார்மர் திங்களன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். வளைகுடா நாடுகள், கிரீஸ், ஸ்பெயின், இத்தாலி, நெதர்லாந்து மற்றும் சுவீடன் உள்ளிட்ட சுமார் 30 நாடுகள் பங்கேற்கும் இந்தத் திட்டங்களை வகுப்பதற்கான கூட்டம், வியாழக்கிழமையன்று பாரிஸ் அல்லது லண்டனில் நடைபெறக்கூடும் என்று பிரெஞ்சு தூதரக வட்டாரம் தரப்பில் கூறப்பட்டு வருகிறது. ஆனால், டிரம்ப் முற்றுகைக்கு உத்தரவிட்ட நிலையில், தற்போது ஒரு தூதுக்குழு அமைப்பதை அவர் வரவேற்பாரா? என்ற மற்றொரு ஐரோப்பிய தூதரக வட்டாரம் கேள்வி எழுப்பியது. இது பலரின் கேள்வியாகவே எழுந்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.