இந்தியாவும் நேபாளமும் வெறும் அண்டை நாடுகள் மட்டுமல்ல. கலாச்சார ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலப் பிணைப்புகள் உள்ளன.
ஆனால், இந்த இரு நாடுகளுக்கும் இடையே 210 ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் நீடிக்கும் ஒரு எல்லைப் பிரச்சினை உள்ளது. அந்தப் பிரச்சினையின் மையத்தில் இருப்பது, 1816ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியாவுடன் நேபாளம் செய்துகொண்ட ‘சுகௌலி ஒப்பந்தம் (Treaty of Sugauli)’ எனப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆவணம்.
இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்த ஒப்பந்தத்தின் மூல ஆவணங்கள் தற்போது எங்கே உள்ளன என்பதே நேபாள அரசுக்குத் தெரியவில்லை. இதை அந்த நாட்டு அரசே நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளது.
நாடாளுமன்ற விசாரணைக் குழு ஒன்று, ஆவணக் காப்பகங்கள், அமைச்சகங்கள், அருங்காட்சியகங்கள் என அனைத்து இடங்களிலும் தேடியும், மூல ஒப்பந்தக் காகிதங்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
நேபாளம், இந்தியாவின் சிக்கிம், மேற்கு வங்கம், பீகார், உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களுடன் 1,850 கி.மீ-க்கும் அதிகமான எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தரகண்ட் எல்லையில் அமைந்துள்ள காலாபாணி, லிபுலேக் மற்றும் லிம்பியாதுரா ஆகிய பகுதிகளுக்கு நேபாளம் அவ்வப்போது உரிமை கோரி வருகிறது. ஏற்கெனவே அந்த நாடு வெளியிட்ட 100 ரூபாய் நோட்டுகளில் இடம்பெற்றிருந்த வரைபடத்தில் இந்த மூன்று பகுதிகளும் இடம்பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு முறையும் இந்திய அரசு, இந்தப் பகுதிகள் உத்தரகண்ட் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருப்பதைத் திட்டவட்டமாக வலியுறுத்தி வருகிறது.
இந்த இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லைப் பிரச்சினையின் முக்கிய மையமாக இருப்பது ஒரு நதிதான். மகாகாளி என்று அழைக்கப்படும் காளி நதியே இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த நதிக்கு மேற்குப் பகுதி இந்தியாவுக்கும், கிழக்குப் பகுதி நேபாளத்துக்கும் சொந்தம் என வரையறுக்கப்பட்டது.
ஆனால், இந்த நதியின் உண்மையான பிறப்பிடம் எது? என்ற கேள்வியே இன்றைய எல்லைப் பிரச்சினைக்கு முக்கியக் காரணமாக உள்ளது.
லிம்பியாதுரா (Limpiyadhura) பகுதியில் இருந்து உருவாகும் பிரதான நீரோட்டமே உண்மையான காளி நதி என நேபாளம் வாதிடுகிறது. அவ்வாறு எடுத்துக்கொண்டால், லிம்பியாதுரா, லிபுலேக் மற்றும் காலாபாணி ஆகிய பகுதிகள் நேபாளத்துக்குச் சொந்தமானவை என்பதே அந்த நாட்டின் நிலைப்பாடு.
காலாபாணிக்கு அருகில் உள்ள சிறிய நீரூற்றுகள் மற்றும் கிளை நதிகள் சங்கமிக்கும் இடத்திலிருந்தே காளி நதி தொடங்குகிறது என்றும், எனவே காலாபாணி பகுதி இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தின் கீழ் வருகிறது என்றும் இந்தியா வாதிடுகிறது.
பிரிக்கப்படாத உத்தரப் பிரதேசத்தின், தற்போது உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பித்தோரகர் மாவட்டத்தின் ஒரு பகுதியாகவே காலாபாணி பகுதி வரலாற்று ரீதியாக நிர்வகிக்கப்பட்டு வந்ததை நிரூபிக்க, நிர்வாக மற்றும் வருவாய் ஆவணங்களையும் இந்தியா சுட்டிக்காட்டுகிறது.
இரு தரப்பினரும் தங்களது வாதங்களுக்கு ஆதரவாக பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த வரைபடங்கள் மற்றும் வரலாற்றுப் பதிவுகளை ஆதாரமாக முன்வைக்கின்றனர். ஆனால், இந்த எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் முக்கியப் பங்கு வகிக்கக்கூடிய அசல் ஆவணமே தற்போது காணவில்லை.
சுகௌலி ஒப்பந்தத்தை மையமாகக் கொண்ட இந்த எல்லைத் தகராறு, பலமுறை இந்தியா - நேபாள உறவில் விரிசலை ஏற்படுத்தியிருக்கிறது. நேபாளத்தின் முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஓலி, தனது ஆட்சி நெருக்கடியில் இருந்த 2020ஆம் ஆண்டில், இந்த எல்லைப் பிரச்சினையை ஒரு பெரிய தேசியவாதப் பிரச்சினையாக மாற்றினார்.
காலாபாணி, லிபுலேக் மற்றும் லிம்பியாதுரா ஆகிய மூன்று பகுதிகளையும் உள்ளடக்கிய புதிய அரசியல் வரைபடத்தை நேபாளம் வெளியிட்டது. பின்னர் அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் அந்த வரைபடத்தை நாடாளுமன்றத்திலும் நிறைவேற்றியது.
இதை, நேபாளம் தனது நிலப்பரப்பை "செயற்கையாகப் பெரிதுபடுத்திக் காட்டும் முயற்சி" என்று கூறி இந்தியா நிராகரித்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
சில மாதங்களுக்கு முன்பு, தற்போதைய நேபாள பிரதமர் பாலேன் ஷா நாடாளுமன்றத்தில், "நான் பிரதமராகப் பதவியேற்ற பிறகுதான், இந்தியா நேபாளத்தின் நிலப்பகுதிகளை ஆக்கிரமித்திருப்பது மட்டுமல்லாமல், நேபாளமும் பல இடங்களில் இந்தியாவின் நிலப்பகுதிகளை ஆக்கிரமித்திருப்பது எனக்குத் தெரிய வந்தது" என்று பேசி மற்றொரு சர்ச்சையை ஏற்படுத்தினார்.
பின்னர், பிரச்சினைக்குரிய பகுதிகள் தொடர்பான காத்மாண்டுவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று நேபாள வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்தது.
இந்தியாவும் சீனாவும் லிபுலேக் வழியாக வர்த்தகத்தை மீண்டும் தொடங்க ஒப்புக்கொண்ட பிறகு, இந்த எல்லைப் பிரச்சினை இன்னொரு பரிமாணத்தை அடைந்தது.
லிபுலேக், லிம்பியாதுரா, காலாபாணி ஆகிய பகுதிகள் தன் நிலப்பரப்பின் இன்றியமையாத பகுதிகள் என்று கூறி நேபாளம் இதற்கு ஆட்சேபனை தெரிவித்தது. இப்போது, மூல ஒப்பந்தக் காகிதங்களே கிடைக்காத நிலையில், லிபுலேக், காலாபாணி, லிம்பியாதுரா மீதான நேபாளத்தின் உரிமைக்கோருவது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
நேபாள பிரதிநிதிகள் சபையில் பேசிய வெளியுறவு அமைச்சர் ஷிசிர் கானல், மூல ஒப்பந்த ஆவணங்கள் தங்களிடம் இருக்கிறதா என்பதை உறுதியாகக் கூற முடியாது என்பதை ஏற்றுக்கொண்டார்.
"உண்மையான உத்தியோகபூர்வ ஒப்பந்த ஆவணங்கள் எங்களிடம் இருக்கிறதா இல்லையா என்பது குறித்து நேபாள அரசிடம் தெளிவான தகவல் இல்லை. சில ஒப்பந்தங்கள் தொடர்பான ஆவணங்கள் தேசிய ஆவணக் காப்பகத்தில் வைக்கப்பட்டிருப்பதாகப் பதிவுகள் உள்ளன. ஆனால் அவைதான் உண்மையான உத்தியோகபூர்வ ஒப்பந்தங்களா என்பது குறித்து எங்களிடம் தெளிவான தகவல் இல்லை" என்று கானல் நாடாளுமன்றத்தில் தெரிவித்ததாக ‘தி காத்மாண்டு போஸ்ட்’ நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.
இருப்பினும், 1816ஆம் ஆண்டு சுகௌலி ஒப்பந்தம் மற்றும் இந்தியாவுடனான 1950ஆம் ஆண்டு அமைதி மற்றும் நட்பு ஒப்பந்தம் ஆகிய இரண்டு ஒப்பந்தங்கள் தொடர்பான ஆவணங்கள் நேபாளத்திடம் இருப்பதாக கானல் தெரிவித்தார்.
இந்த ஆவணங்களைத் தேடுவது இதுவே முதல் முறையல்ல.
2016ஆம் ஆண்டு, நேபாளம் - இந்தியா உறவுகள் தொடர்பான 'விதிஷ்ட நபர்கள் குழு' (Eminent Persons' Group), 1950ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யவோ அல்லது புதிதாக உருவாக்கவோ முயற்சிகளைத் தொடங்கியபோது, நேபாள தரப்பினர் அந்த ஒப்பந்தத்தின் மூல பிரதியைத் தேடினர். ஆனால் அது கிடைக்கவில்லை. இறுதியில், பேக் பகதூர் தாபா தலைமையிலான குழுவிடம் அரசு ஒரு நகல் பிரதியை வழங்கியது என்று 'பிடிஐ' செய்தி நிறுவனம் தெரிவித்தது.
அதன் பிறகு, இந்தத் தேடல் இன்னும் விரிவடைந்தது. நூலகங்கள், ஆவணக் காப்பகங்கள் மட்டுமல்லாமல், தொல்பொருள் ஆய்வுத் துறை, நாராயண்ஹிட்டி அரண்மனை அருங்காட்சியகம், சட்ட அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம் ஆகிய இடங்களிலும் நாடாளுமன்ற விசாரணைக் குழு தேடியது. இருந்தும், சுகௌலி ஒப்பந்தம் மற்றும் 1950ஆம் ஆண்டு நேபாளம் - இந்தியா ஒப்பந்தம் ஆகிய இரண்டின் மூலப் பிரதிகளையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று அந்தக் குழு தன் அறிக்கையில் தெரிவித்தது.
2018ம் ஆண்டு இந்த குழு வெளியிட்ட அறிக்கையை இரு நாடுகளும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2019ஆம் ஆண்டிலேயே, அப்போதைய நேபாள வெளியுறவு அமைச்சர் பிரதீப் க்யவாலியும் இதே நிச்சயமின்மையை ஒப்புக்கொண்டிருந்தார். "எங்களிடம் இரண்டு ஒப்பந்தங்களும் இருக்கின்றன. ஆனால், இவை மூல பிரதிகளா இல்லையா என்பதை அறிவியல் முறையில் உறுதிப்படுத்த வேண்டும். இந்தியாவிலும், இங்கிலாந்திலும் உள்ள வரலாற்று ஆவணங்களையும், வரைபடங்களையும் கண்டுபிடிக்க நாங்கள் முயற்சி செய்து வருகிறோம்" என்று அவர் அப்போது தெரிவித்திருந்தார்.
1814-16ஆம் ஆண்டுகளில் நடந்த ஆங்கிலோ-நேபாள போரில் நேபாளம் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரிட்டிஷ் இந்தியாவுக்கும் இந்து அரசான நேபாளத்துக்கும் இடையேயான எல்லையை நிர்ணயித்தது இந்த சுகௌலி ஒப்பந்தம். 1815ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கையெழுத்தான இந்த ஒப்பந்தம், 1816ஆம் ஆண்டு மார்ச் மாதம் அங்கீகரிக்கப்பட்டது. இதுவே, இன்றைய நேபாளத்தின் நிலப்பரப்பு எல்லைகளுக்கு அடிப்படையாக அமைந்தது.
இன்றைய பிரச்சினைக்கு மிக முக்கியமானது இந்த ஒப்பந்தத்தின் 5-வது பிரிவு. காளி நதிக்கு மேற்கே இருக்கும் நிலப் பகுதிகள் மீது தனக்கு எந்த உரிமையும் இல்லை என்று நேபாளம் அப்போது ஒப்புக்கொண்டது. இதன் சிக்கல் என்ன என்பதை ஏற்கெனவே பார்த்தோம்.
இதோடு இன்னொரு வரலாற்றுச் சிக்கலும் இருக்கிறது. காளி நதியின் பிறப்பிடம் பற்றி அந்த ஒப்பந்தமே தெளிவாகக் குறிப்பிடவில்லை. மேலும், அந்த நதியின் பிறப்பிடத்தை உறுதிப்படுத்தும் வகையில், இரு தரப்பினராலும் அங்கீகரிக்கப்பட்ட எந்த வரைபடமும் அந்த ஒப்பந்தத்துடன் இணைக்கப்பட்டதாகவும் தெரியவில்லை என்று 'தி காத்மாண்டு போஸ்ட்' நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.
நூற்றாண்டுகால எல்லை ஏற்பாட்டுக்கு அடிப்படையான மூல ஒப்பந்தக் காகிதங்கள் தன்னிடம் இருக்கிறதா என்பதைக்கூட உறுதிப்படுத்த முடியாத நிலையை, இன்று காத்மாண்டு ஒப்புக்கொண்டு அந்த நாட்டு மக்களே விமர்சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்