நேபாள நாட்டில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. நாட்டின் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட பேரழிவில் 500-க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் சிக்கியுள்ளனர்.
வெள்ளத்தில், சீன எல்லைக்கு அருகில் உள்ள ரசுவா (Rasuwa) மாவட்டம் உள்ளிட்ட பல பகுதிகளில் சிறிய நகரங்கள் சுவடு தெரியாமல் அழிந்துள்ளன. நீர்மின் திட்டங்களும் சேதமடைந்துள்ளன.
இரண்டு நாட்களுக்கும் மேலாக மீட்புப் பணிகள் நடைபெற்றும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இன்னும் கண்டறியப்படாமல் உள்ளனர். ஆனாலும், மீட்புப் பணிகளுக்காக சர்வதேச நாடுகள் நீட்டிய உதவிக்கரங்களை நேபாள அரசு நிராகரித்துள்ளது.
இந்தியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் தங்களது நாட்டுக் குடிமக்களை மீட்கவும், பல்வேறு நாடுகள் அவசர உதவி வழங்கவும் முன்வந்தபோதிலும், "தற்போதைக்கு வெளிநாட்டு உதவிகள் தேவையில்லை" என நேபாள வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தென் கொரியா ஏற்கனவே தனது முதற்கட்ட மீட்புக் குழுவை நேபாளத்திற்கு அனுப்பியுள்ளதாகவும், விரைவில் கூடுதல் நிவாரணக் குழுவை அனுப்பவுள்ளதாகவும் அறிவித்திருந்தது. ஆனால், நேபாள அரசு வெளிநாட்டு மீட்புக் குழுக்களை அனுமதிக்கத் தயாராக இல்லை என்று தெரிவித்துவிட்டது.
இது குறித்து நேபாள வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லோக் பகதூர் சேத்ரி பேசுகையில், "பல்வேறு நாடுகள் உதவி செய்ய முன்வருவது இயல்பானதுதான். ஆனால், எங்கள் நாட்டின் பாதுகாப்புப் படைகளே தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளைத் திறம்படச் செய்து வருகின்றன. எனவே, தற்போதைக்கு எங்களுக்கு வெளிநாட்டு உதவிகள் தேவையில்லை" என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
"நேபாள அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி, மீட்புக் குழுவை அனுப்ப முயற்சிப்போம்" என தென் கொரிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அத்துடன், சர்வதேச அமைப்புகள் மூலமாக 1 மில்லியன் டாலர் நிவாரண உதவியை வழங்குவதாகவும் தென் கொரியா அறிவித்துள்ளது.
இந்தத் தேடுதல் வேட்டையில் தங்களது நிபுணர் குழுக்களை அனுமதிக்கக் கோரி, இந்தியா, சீனா, அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், தென் கொரியா, இலங்கை மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகள் நேபாள அரசிடம் அதிகாரப்பூர்வமாகக் கோரிக்கை விடுத்திருந்ததாக ‘தி காத்மண்டு போஸ்ட்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
வெளிநாட்டு மீட்புக் குழுக்களை நேபாளம் நிராகரித்ததன் பின்னணியில் ஒரு அரசியல் காரணம் இருக்கலாம் என்று ஜெனீவாவுக்கான நேபாளத்தின் முன்னாள் ஐ.நா. தூதர் தினேஷ் பட்டராய் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் கூறுவதன்படி, "வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ரசுவா மாவட்டம், சீனாவின் திபெத் பகுதிக்கு மிக அருகில் உள்ள ஒரு சிக்கலான எல்லைப் பகுதியாகும். அந்தப் பகுதியின் புவியியல் மற்றும் பாதுகாப்பு முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டே, வெளிநாட்டுப் படைகளை அனுமதிக்க நேபாள அரசு யோசித்திருக்கலாம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கருத்து சர்ச்சையையும், நேபாள அரசின் மீது விமர்சனங்களையும் ஏற்படுத்தியது. இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள செய்தித் தொடர்பாளர் சேத்ரி, "சீனாவின் எல்லைப் பாதுகாப்பு காரணங்களுக்கும் இந்த முடிவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நேபாள நாட்டின் சொந்த மீட்புக் குழுக்களே இந்தச் சவாலைச் சமாளிக்கும் திறன் கொண்டவை என்பதால் மட்டுமே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" எனக் கூறி விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
வெளிநாட்டு மீட்புக் குழுக்களை அனுமதிக்காததற்கு மற்றொரு காரணமும் கூறப்படுகிறது. கடந்த காலத்தில் நேபாளம் கற்றுக்கொண்ட பாடத்தின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்கின்றனர்.
2015-ஆம் ஆண்டு நேபாளத்தைத் தாக்கிய பேரழிவுகரமான நிலநடுக்கத்தின்போது, உலகெங்கிலும் இருந்து ஏராளமான ராணுவ விமானங்கள், சர்வதேச நிவாரண அமைப்புகள் மற்றும் வெளிநாட்டு மீட்புக் குழுக்கள் நேபாளத்தில் குவிந்தன. அது அவசரகால உதவிகளுக்குப் பெருமளவில் கைகொடுத்தாலும், மிகப்பெரிய நிர்வாகச் சிக்கலையும் குழப்பத்தையும் உருவாக்கியது.
விமான நிலையங்கள், சாலைகள் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகள் ஏற்கனவே பேரழிவால் முடங்கிக் கிடந்த சூழலில், கட்டுப்பாடற்ற முறையில் அடுத்தடுத்து வந்த வெளிநாட்டு உதவிகளை நிர்வகிப்பது நேபாள அரசுக்குப் பெரும் சவாலாக மாறியது.
அதோடு, வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த மீட்புக் குழுக்களுக்கு இடையே நிலவிய போட்டியும், ஒருங்கிணைப்புக் குறைபாடும் மீட்புப் பணிகளின் வேகத்தைக் குறைத்தன.
அந்தக் குழப்பம் மீண்டும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் நேபாள அரசு கவனமாக இருந்திருக்கலாம். தனித்தனியாக இயங்கும் பல வெளிநாட்டு மீட்புக் குழுக்களைச் சமாளிப்பதைவிட, நேபாளத்தின் சொந்த அதிகார அமைப்பின் (Chain of Command) கீழ் பணிகளை ஒருங்கிணைப்பதே விரைவான மற்றும் திறமையான மீட்புக்கு வழிவகுக்கும் எனக் கருதியிருக்கலாம் என்கின்றனர்.
அதேநேரம், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கான ஆட்களை (Search-and-rescue teams) மட்டுமே நேபாளம் நிராகரித்துள்ளதே தவிர, நிதி உதவிகளையும் நிவாரணப் பொருட்களையும் ஏற்றுக்கொள்ளத் தயங்கவில்லை.
இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், "நேபாள அரசு எங்களிடம் என்னென்ன உதவிகளைக் கேட்கிறதோ, அவற்றைக் கட்டாயம் உடனுக்குடன் செய்து வருகிறோம்" எனத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்