உலகம்

சிங்கப்பூரில் புது டெக்னாலஜி.. இனி கார் ஓட்டுநர்கள் இறங்கத் தேவையில்லை! பாஸ்போர்ட் இல்லாமல் இமிகிரேஷன் கிளியரன்ஸ் - எப்படித் தெரியுமா?

பயணிகள் தங்கள் வாகனத்தில் இருந்தபடியே க்யூஆர் கோடைப் பயன்படுத்தி

மாலை முரசு செய்தி குழு

சிங்கப்பூரின் துவாஸ் செக்பாயிண்டில் (Tuas Checkpoint) கார் ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளுக்காக முழுமையாக ஆட்டோமேஷன் செய்யப்பட்ட இமிகிரேஷன் கிளியரன்ஸ் சிஸ்டம் இன்னும் சில மாதங்களில் சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்தை வரும் 2027-ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூரின் அனைத்து நில எல்லைகளிலும் அமல்படுத்த குடிவரவு மற்றும் சோதனைச் சாவடி ஆணையம் (ICA) திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் பயணிகள் தங்கள் வாகனத்தில் இருந்தபடியே பாஸ்போர்ட் அல்லது க்யூஆர் கோடைப் பயன்படுத்தி மிக எளிதாக சோதனைகளை முடித்துக் கொள்ள முடியும்.

ஆட்டோமேட்டட் பேசஞ்சர் கிளியரன்ஸ் சிஸ்டம் (APCS) எனப்படும் இந்தத் தொழில்நுட்பத்தில், சாலையில் அமைக்கப்பட்டுள்ள கியோஸ்க் இயந்திரங்களில் க்யூஆர் கோடு அல்லது பாஸ்போர்ட்டைக் காண்பித்து பயணிகள் விவரங்களைச் சமர்ப்பிக்கலாம். அங்குள்ள நான்கு கேமராக்கள் பயணிகளின் முக அடையாளங்களை (Facial Biometrics) சரிபார்க்கும். காரின் ஜன்னல் அருகில் அமராத பயணிகளுக்கு வசதியாக, பயோமெட்ரிக் டேப்லெட் வசதியும் இந்த லேன்களில் கொடுக்கப்படும். இதனால் இனி இமிகிரேஷன் அதிகாரி ஒருவர் நேரில் வந்து ஒவ்வொருவரையும் சரிபார்க்க வேண்டிய அவசியம் இருக்காது.

இந்த ஆட்டோமேஷன் முறை மூலம் அதிகாரிகளின் பணிச்சுமை குறையும் என்றும், அவர்கள் சந்தேகம் உள்ள நபர்களிடம் விசாரணை நடத்துவது போன்ற முக்கிய பணிகளில் அதிக கவனம் செலுத்த முடியும் என்றும் ஐசிஏ தெரிவித்துள்ளது. இந்தச் சோதனை ஓட்டத்தின் போது பயணிகளிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு, சிஸ்டம் இன்னும் மேம்படுத்தப்படும். வரும் 2027-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் துவாஸ் செக்பாயிண்டில் இது முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும் என்றும், அதன் பிறகு வுட்லண்ட்ஸ் செக்பாயிண்டிலும் இது அறிமுகப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சர் கே. சண்முகம் இது குறித்துப் பேசுகையில், நாட்டின் எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்தவும், பயணிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த சேவையை வழங்கவும் ஐசிஏ தொடர்ந்து புதிய கண்டுபிடிப்புகளைப் புகுத்தி வருவதாகப் பாராட்டினார். கடந்த 2024 மார்ச் மாதத்திலேயே க்யூஆர் கோடு மூலம் இமிகிரேஷன் கிளியரன்ஸ் செய்யும் வசதியை ஐசிஏ அறிமுகம் செய்தது. தற்போது அதை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் விதமாக இந்த முழு ஆட்டோமேஷன் சிஸ்டம் கொண்டு வரப்படுகிறது.

இந்த புதிய வசதி கார் பயணிகளுக்கு மட்டுமல்லாமல், சரக்கு வாகன ஓட்டுநர்களுக்கும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்கள் தங்கள் வாகனத்தின் உயரத்திற்கு ஏற்ப அட்ஜஸ்ட் செய்யக்கூடிய கியோஸ்க்குகளைப் பயன்படுத்தித் தங்களைச் சரிபார்த்துக் கொள்ளலாம். சிங்கப்பூருக்கு வரும் அனைத்து வெளிநாட்டுப் பயணிகளும் முன்கூட்டியே பதிவு செய்யாமல் ஆட்டோமேட்டிக் லேன்களைப் பயன்படுத்தும் வசதியை ஏற்கனவே ஐசிஏ அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம் எல்லைப் பயணங்களில் சிங்கப்பூர் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.