உலகம்

“No More Mr. Nice Guy”- டிரம்ப் பதிவால் பதற்றம்!.. எச்சரிக்கிறதா அமெரிக்கா?

வெள்ளை மாளிகை அதிகாரிகள், உலகளாவிய எண்ணெய் சந்தையை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள்

Muthu Lakshmi

அமெரிக்கா–ஈரான் இடையிலான போர் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், டொனால்ட் டிரம்ப் TRUTH சோசியல் மீடியாவில் பதிவிட்ட பதிவு உலகளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த பதிவில், அவர் கருப்பு கண்ணாடி அணிந்து துப்பாக்கியை ஏந்தியபடி காணப்படும் படம் மற்றும் “இனி நல்லவன் வேடம் இல்லை” (NO MORE MR. NICE GUY!) என்ற வாசகம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, ஈரான் பேச்சுவார்த்தைக்கு வர விரும்பினால் தாங்கள் தயாராக உள்ளதாக டிரம்ப் தெரிவித்திருந்தார். ஆனால் அதற்கு முன்பாகவே Truth Social தளத்தில் பதிவிட்ட பதிவில், ″ஈரான் திருந்தவில்லை. அணு ஆயுதமற்ற ஒப்பந்தத்தில் எப்படி கையெழுத்திடுவது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் விரைவில் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும்!” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சூழலில், அமெரிக்கா ஈரானுக்கு எதிராக விதித்துள்ள பொருளாதார மற்றும் கடல் வழி முற்றுகையை மேலும் நீட்டிக்க கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து வெள்ளை மாளிகை அதிகாரிகள், உலகளாவிய எண்ணெய் சந்தையை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் அமெரிக்க நுகர்வோருக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

இந்த அறிவிப்புகளின் தாக்கமாக, உலக எண்ணெய் சந்தையில் அதிர்வு ஏற்பட்டுள்ளது. ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை கிட்டத்தட்ட 4% உயர்ந்து, ஒரு மாத உச்சத்தை எட்டியது. குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இருந்து வரும் எண்ணெய் விநியோகத்தில் தடைகள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதற்கிடையில், ஈரான் தனது நிலைப்பாட்டை தெளிவாக வெளியிட்டுள்ளது. தங்களுக்கு அச்சுறுத்தல் நீடிக்கும் வரை முக்கியமான கடல் வழித்தடங்களில் போக்குவரத்தை சீர்குலைப்போம் என்று எச்சரித்துள்ளது. மேலும், அமெரிக்காவின் தொடர்ச்சியான முற்றுகைக்கு பதிலளிக்க “முன்னெப்போதும் இல்லாத இராணுவ நடவடிக்கை” எடுக்கப்படும் என்றும் தெஹ்ரான் தெரிவித்துள்ளது.

அணு ஆயுத விவகாரத்தில், ஈரானிடம் அணு ஆயுதம் இருக்க முடியாது என்று டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அதேசமயம்,அதற்கு தங்களின் அணுசக்தி திட்டங்கள் முழுவதும் அமைதியானவை தான் என ஈரான் மறுப்பு தெரிவித்து வருகிறது. இந்த மோதல் நீடித்தால், உலக பொருளாதாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. எண்ணெய் விலை உயர்வு, கடல் வர்த்தக தடைகள் மற்றும் இராணுவ பதற்றம் ஆகியவை இணைந்து, உலக சந்தைகளை அசைக்கக் கூடிய சூழ்நிலையை உருவாக்கியுள்ளன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.