ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றுள்ள 56 வயதான அயதுல்லா மொஜ்தபா காமேனிக்கு (Ayatollah Mojtaba Khamenei) பாதுகாப்பு வழங்குவதற்காக, அந்நாட்டின் மிக ரகசியமான மற்றும் சக்திவாய்ந்த 'நோப்போ' (NOPO) என்ற சிறப்புப் படை களம் இறக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய 'ஆபரேஷன் எபிக் பியூரி' (Operation Epic Fury) என்ற அதிரடித் தாக்குதலில் மொஜ்தபாவின் தந்தை அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானில் நிலவும் அசாதாரண சூழலில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 28-ம் தேதி நடந்த அந்தத் தாக்குதலில் மொஜ்தபாவும் காயமடைந்ததாகத் தகவல்கள் பரவினாலும், அவர் "நலமாக உள்ளார்" என்று ஈரான் தரப்பு தற்போது உறுதிப்படுத்தியுள்ளது.
மொஜ்தபா காமேனி இன்னும் நாட்டு மக்களிடையே நேரடியாகத் தோன்றாத நிலையில், அவர் ஒரு ரகசிய இடத்தில் தங்கியிருப்பதாகத் தெரிகிறது. அவருக்குப் பாதுகாப்பு அரணாக விளங்கும் 'நோப்போ' படை, ஈரானின் காவல் துறையின்கீழ் இயங்கும் ஒரு மிகச்சிறந்த கமாண்டோ பிரிவாகும். 1991-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தப் படை, கருப்பு நிற உடைகளை அணிந்து செயல்படுவதால் 'கருப்புச் சட்டைப் படை' என்றும் அழைக்கப்படுகிறது. பணயக் கைதிகளை மீட்பது இவர்களின் முக்கியப் பணி என்றாலும், ஈரானில் நடக்கும் மக்கள் போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதிலும் இவர்கள் பெயர்பெற்றவர்கள்.
'நோப்போ' என்பதன் பாரசீகச் சுருக்கத்திற்கு 'உச்ச தலைவரைப் பாதுகாக்கும் சிறப்புப் படை' என்று பொருள். ஈரானின் மற்றொரு ராணுவ அமைப்பான ஐஆர்ஜிசி-யை (IRGC) விட இந்தப் படை மிகவும் கொடூரமானது, நன்கு பயிற்சி பெற்றது மற்றும் நவீன ஆயுதங்களைக் கொண்டது என்று சொல்லப்படுகிறது. அலி காமேனி உயிருடன் இருந்தபோது, அவர் மற்ற எந்தப் படையையும் விட இந்த நோப்போ படையினரையே அதிகம் நம்பினார். தற்போதையத் தாக்குதலில் இந்தப் படையின் சில வீரர்கள் கொல்லப்பட்டிருந்தாலும், புதிய தலைவரான மொஜ்தபாவைப் பாதுகாக்கும் பணியில் அவர்கள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
புதிய தலைவர் மொஜ்தபா காமேனியின் நிலை குறித்துப் பல ஊகங்கள் எழுந்துள்ளன. அவர் கால்களில் காயம் அடைந்துள்ளதாகவும், தகவல் தொடர்பு வசதிகள் குறைந்த ஒரு பாதுகாப்பான இடத்தில் தங்கியிருப்பதாகவும் நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால், ஈரானிய அதிபரின் மகன் யூசுப் பெசெஷ்கியன் (Yousef Pezeshkian), மொஜ்தபா நலமுடன் இருப்பதாகத் தனது டெலிகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மார்ச் 8-ம் தேதி ஈரானின் மூன்றாவது உச்ச தலைவராக மொஜ்தபா தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மொஜ்தபா காமேனியின் இந்தப் பதவியேற்பிற்குப் பின்னால் ஈரானின் புரட்சிகரக் காவல் படையின் (Revolutionary Guards) அழுத்தம் இருப்பதாகக் கூறப்படுகிறது. தனது தந்தையை விட மொஜ்தபா மிகவும் மென்மையானவர் என்றும், இதன் மூலம் தங்களது கடும்போக்குக் கொள்கைகளை எளிதாகச் செயல்படுத்தலாம் என்றும் அவர்கள் கருதுகின்றனர். இதனால் வரும் காலங்களில் ஈரான் ஒரு ராணுவ நாடாக மாறக்கூடும் என்றும், உள்நாட்டில் இன்னும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்றும் அரசியல் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.