November 13 2026 Doomsday Prediction 
உலகம்

நவம்பர் 13, 2026-ல் உலகம் அழியுமா?.. 66 ஆண்டுகளுக்கு முன்பே கணிதத்தில் வந்த ‘Doomsday’ தேதி - என்னங்க சொல்றீங்க!?

2026 நவம்பர் 13ஆம் தேதி உலகம் அழிந்துவிடும் என்று அந்த ஆய்வு அறிவியல் ரீதியாகக் கணித்ததாக கூறுவது..

Mahalakshmi Somasundaram

தொழில்நுட்ப வளர்ச்சியே இல்லாத காலத்திலும் சரி, தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்ப காலத்திலும் சரி மாறாத ஒன்று உலக அழிவை பற்றிய அச்சமும், எப்படி அழியும் என்ற எதிர்பார்ப்பும் தான். ஹாலிவுட் படங்களில் திடீரென பூமியை நோக்கி வரும் விண்கல், உலகையே புரட்டிப் போடும் இயற்கைப் பேரழிவு என ‘உலக அழிவு’ என்றால் நம் கண்முன்னே பல காட்சிகள் ஓடும். அதுபோல தான் 2026 நவம்பர் 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை உலகம் அழிந்துவிடுமா? என்ற கேள்வி தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

இதற்கு காரணம், சுமார் 66 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஒரு அறிவியல் ஆய்வில், மனித மக்கள் தொகை வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட கணித மாதிரி, 2026ஆம் ஆண்டின் ஒரு குறிப்பிட்ட தேதியை சுட்டிக்காட்டி இருப்பது தான். உலக அழிவு தொடர்பான கணிப்புகள் புதிதல்ல. நோஸ்ட்ராடாமஸ், பாபா வங்கா உள்ளிட்ட பல்வேறு தீர்க்கதரிசிகள் மற்றும் சமய நூல்களை மற்றும் சில அறிவியல் ஆராய்ச்சிகள் அடிப்படையாகக் கொண்டு பல்வேறு காலகட்டங்களில் உலகம் அழியும் என கணிப்புகள் வெளியாகியுள்ளன. ஆனால், 2026 நவம்பர் 13ஆம் தேதி குறித்த இந்தக் கணிப்பு அவற்றிலிருந்து சற்று வித்தியாசமானது. ஏனெனில், இதன் பின்னணியில் ஒரு கணித மாதிரி உள்ளது.

1960-ல் வெளியான ‘Doomsday’ ஆய்வு

1960ஆம் ஆண்டு அமெரிக்கா விஞ்ஞானி ஹெய்ன்ஸ் வான் ஃபோர்ஸ்டர், என்பவர் தனது நண்பர்களான பட்ரீஷியா எம். மோரா மற்றும் லாரன்ஸ் அமியோட் ஆகியோருடன் இணைந்து ‘Science’ இதழில் ஒரு ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார். “Doomsday: Friday, 13 November, A.D. 2026” என்ற தலைப்பில் வெளியான அந்த ஆய்வு, கடந்த காலங்களில் மனித மக்கள்தொகை எவ்வாறு அதிகரித்தது என்பதை அடிப்படையாகக் கொண்டு, அதன் வளர்ச்சிப் போக்கை கணித ரீதியாக மாதிரியாக்க முயன்றது. அந்தக் காலகட்டத்தில் காணப்பட்ட மக்கள்தொகை வளர்ச்சி தொடர்ந்து அதே வேகத்தில் நீடித்தால் என்ன நடக்கும் என்பதை கணிதத்தின் மூலம் கணக்கிடுவதே ஆய்வின் நோக்கமாக இருந்தது.

நவம்பர் 13 என்ற தேதி எப்படி வந்தது?

ஆய்வாளர்கள் உருவாக்கிய கணித மாதிரியின் படி, மனித மக்கள்தொகை கடந்த காலங்களில் இருந்த அதே வேகமான வளர்ச்சிப் போக்கை தொடர்ந்து பின்பற்றினால், 2026.9 என்ற காலப்பகுதியில் ஒரு கணித எல்லையை அடையும் என கணிக்கப்பட்டது. இந்தக் கணித மதிப்பு 2026 நவம்பர் 13ஆம் தேதியுடன் தொடர்புபடுத்தப்பட்டது. அந்த நிலையில், மாதிரியில் மனித மக்கள்தொகை கணித ரீதியாக முடிவிலியை நோக்கிச் செல்வதாகக் காட்டப்பட்டது. இதனால் அந்தத் தேதி பின்னர் “Doomsday” அல்லது “உலக அழிவு நாள்” என்ற பெயருடன் பிரபலமானது.

உண்மையிலேயே உலகம் அழியுமா?

இங்குதான் முக்கியமான விஷயம் இருக்கிறது. 2026 நவம்பர் 13ஆம் தேதி உலகம் அழிந்துவிடும் என்று அந்த ஆய்வு அறிவியல் ரீதியாகக் கணித்ததாக கூறுவது தவறான புரிதல். அந்த ஆய்வு, அப்போது காணப்பட்ட மக்கள்தொகை வளர்ச்சிப் போக்கு மாறாமல் தொடர்ந்து கொண்டே இருந்தால் ஏற்படும் கணித முடிவை மட்டுமே எடுத்துக்காட்டியது.

அதாவது, இது உலக அழிவுக்கான அறிவியல் முன்னறிவிப்பு கிடையாது. மாறாக, கட்டுப்பாடற்ற மக்கள்தொகை வளர்ச்சி எவ்வாறு ஒரு கட்டத்தில் யதார்த்தமற்ற கணித நிலையை உருவாக்கும் என்பதை விளக்கும் ஒரு மாதிரியாகும்.

66 ஆண்டுகளில் மாறிய உலகம்

1960ஆம் ஆண்டில் அந்தக் கணித மாதிரி உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து உலக மக்கள்தொகை வளர்ச்சியில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பிறப்பு விகிதம், இறப்பு விகிதம், மருத்துவ வளர்ச்சி, குடும்பக் கட்டுப்பாடு, சமூக மற்றும் பொருளாதார மாற்றங்கள் உள்ளிட்ட பல காரணிகள் மக்கள்தொகை வளர்ச்சியின் வேகத்தை மாற்றியுள்ளன.

இதனால், 1960ஆம் ஆண்டு கணிக்கப்பட்ட அதே வளர்ச்சி அளவை மனிதகுலம் தொடர்ந்து பின்பற்றவில்லை. எனவே, அந்தக் கணித மாதிரியை இன்றைய உலகின் உண்மையான மக்கள்தொகை நிலைக்கு நேரடியாகப் பொருத்தி, 2026 நவம்பர் 13ஆம் தேதி உலகம் அழிந்துவிடும் என்று கூறுவதற்கு அறிவியல் அடிப்படை இல்லை.

அப்படியானால் நவம்பர் 13 என்ன?

சுருக்கமாகச் சொன்னால், 2026 நவம்பர் 13 என்பது உலகம் அழியும் நாள் அல்ல. 1960ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட மக்கள்தொகை வளர்ச்சி கணித மாதிரி அதன் கணித எல்லையை அடையும் எனக் காட்டிய தேதி மட்டுமே. 66 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட அந்த மாதிரி, இன்று மீண்டும் பேசப்படுவதற்கு முக்கிய காரணம் அதன் தலைப்பில் இடம்பெற்றுள்ள “Doomsday” என்ற வார்த்தையும், குறிப்பிட்ட தேதியும் தான்.

ஆனால், அந்த ஆய்வு உணர்த்தும் முக்கியமான விஷயம் உலக அழிவு அல்ல. எந்தவொரு வளர்ச்சிப் போக்கும் முடிவில்லாமல் தொடர்ந்து செல்லும் எனக் கருதினால், அது ஒரு கட்டத்தில் யதார்த்தமற்ற முடிவை நோக்கிச் செல்லும் என்பதை கணிதம் எடுத்துக்காட்டுகிறது. எனவே, நவம்பர் 13, 2026-ல் உலகம் அழிந்துவிடும் என்ற அச்சம் தேவையில்லை. அந்த தேதி 66 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட ஒரு கணித மாதிரியின் முடிவாக மட்டுமே பார்க்கப்பட வேண்டும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்