உலகம்

இனி, ஹோர்முஸ் நீர்சந்தி வழியாக செல்ல வரி கட்டவேண்டுமா...? பாதிக்கப்படும் உலக நாடுகள்!

'ஜி7 நாடுகள், மற்ற நாடுகளுக்கு கச்சா எண்ணெய் தர முன்வரவேண்டும்' என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கோரிக்கை விடும் அளவிற்கு பாதிப்பை ..

மாலை முரசு செய்தி குழு

ஈரான் நாடாளுமன்றத்தில் இதுகுறித்து நடந்த பரிசீலனை கூட்டம்! ஹோர்முஸ் நீர்சந்தி வழியாகப் பாதுகாப்பாகச் செல்ல விரும்பும் கப்பல்களுக்குக் கட்டணங்களையும் வரிகளையும் விதிக்கும் மசோதாவை ஈரானிய நாடாளுமன்றம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகளாவிய எண்ணெய் மற்றும் திரவ எரிவாயுவில் ஐந்தில் ஒரு பங்கினை எடுத்துச்செல்லும் முக்கிய நீர்வழியான ஹோர்முஸ் நீர்சந்தியின் மீது 'தெஹ்ரான்' புதிதாக, அவ்வழியே செல்லும் கப்பல்களுக்குப் போக்குவரத்து கட்டணம் விதிக்கும் திட்டத்தை ஈரான் பரிசீலித்து வருவதாக ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரயேலின் கூட்டு தாக்குதல் கடந்த மாதம் பிப்ரவரி 28ம் தேதி தொடங்கி இன்றுவரை போர் பதட்டம் தொடர்ந்துவருகிறது. மேலும், ஈரானில் முக்கிய தலைவர்கள் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், முக்கிய வழித்தடமான ஹோர்முஸ் நீர்வழி பாதையினை ஈரான் முடக்கி இருந்தது. அதனால் உலகளவில் கச்சா எண்ணெய்க்கு மிகப்பெரிய அளவில் தட்டுப்பாடு ஏற்பட்டது. இது 'ஜி7 நாடுகள், மற்ற நாடுகளுக்கு கச்சா எண்ணெய் தர முன்வரவேண்டும்' என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கோரிக்கை விடும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டினால் இந்தியா மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து வருகிறது.

தற்போது, இந்த முக்கிய நீர்வழி தடத்திற்கு வரி வசூலிப்பது குறித்து, ஈரான் நாடாளுமன்றத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது, கப்பல் போக்குவரத்து, எரிசக்திப் போக்குவரத்து மற்றும் உணவுப் பொருட்கள் விநியோகத்திற்காக அந்த நீர்வழிப்பாதையைப் பயன்படுத்தும் நாடுகள், ஈரானுக்குச் சுங்கக் கட்டணங்களையும், வரிகளையும் செலுத்த வேண்டும் என்ற மசோதாவை நாடாளுமன்றம் பரிசீலித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார். மேலும், "ஹோர்முஸ் ஜலசந்திக்கான ஒரு புதிய ஆட்சிமுறை" அமல்படுத்தப்படும் என்றும், அது தனக்குத் தடை விதித்துள்ள நாடுகள் மீது கடல்சார் கட்டுப்பாடுகளை விதிக்க தெஹ்ரானுக்கு வழிவகுக்கும் என்றும் ஈரானின் உச்ச தலைவரின் ஆலோசகர் ஒருவரும் தெரிவித்திருக்கிறார் என்று தகவல்கள் கூறுகின்றன.

"ஹோர்முஸ் ஜலசந்தியின் மூலோபாய நிலையைப் பயன்படுத்துவதன் மூலம், நாம் மேற்கத்திய நாடுகளுக்கு பொருளாதாரத் தடைகளை விதித்து, அவர்களின் கப்பல்கள் இந்த நீர்வழிப்பாதை வழியாகச் செல்வதைத் தடுக்க முடியும்," என்று முகமது மொக்பர் வியாழக்கிழமை கூறியதாக மெஹர் செய்தி நிறுவனம் தெரிவித்த நிலையில், தற்போது இது குறித்து ஈரான் நாடாளுமன்றத்தில் பரிசீலிக்கப்பட்டுவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.