உலகின் முன்னணி AI சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியாவில் ஏற்பட்டுள்ள தலைமைப் பொறுப்பு மாற்றம், அதன் முக்கியப் போட்டி நிறுவனமான AMD-க்கு சாதகமாக அமையுமா என்ற கேள்வி தற்போது செயற்கை நுண்ணறிவு துறையில் எழுந்துள்ளது. என்விடியாவின் முன்னாள் CEO-வான ஜென்சன் ஹுவாங்குவும், AMD நிறுவனத்தின் தற்போதைய CEO லிசா சூவும் ஒரு தலைமுறைக்கு முன்னான குடும்ப உறவினர்கள். இருவரும் உறவினர்கள் என்பது மட்டுமல்லாமல், உலகின் முன்னணி சிப் நிறுவனங்களின் போட்டியாளர்களாகவும் திகழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
1993-ம் ஆண்டு என்விடியா நிறுவனத்தை இணைந்து தொடங்கியவர் ஜென்சன் ஹுவாங். அவரது தலைமையில், கிராபிக்ஸ் கார்டு தயாரிப்பில் இருந்து செயற்கை நுண்ணறிவுக்குத் தேவையான அதிநவீன சிப்களை உருவாக்கும் உலகின் மிக முக்கிய நிறுவனங்களில் ஒன்றாக என்விடியா வளர்ந்தது. குறிப்பாக, AI தொழில்நுட்ப வளர்ச்சியால் அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு பல மடங்கு உயர்ந்தது.
இந்நிலையில், ஹுவாங் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக வெளியான செய்திகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவருக்குத் தொடர்பு இருந்ததாக கூறப்பட்ட அந்த பெண் சீனாவின் உளவாளியாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. தனது மனைவிக்கு துரோகம் செய்ததை ஊழியர்களுக்கு அனுப்பிய குறிப்பில் ஹுவாங் ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விவகாரம் தொடர்பாக என்விடியாவின் நிர்வாகக் குழு விசாரணை தொடங்கியது. இதற்கிடையே, நவம்பர் 12-ம் தேதி ஹுவாங் தனது CEO, தலைவர் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து உடனடியாக ராஜினாமா செய்தார். அவருக்குப் பதிலாக நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி கோலெட் கிரெஸ் இடைக்கால CEO-வாக பதவி ஏற்றுக்கொண்டார்.
யார் இந்த லிசா சூ?
இந்தச் சூழலில் அதிக கவனம் பெற்றிருப்பவர் AMD நிறுவனத்தின் CEO லிசா சூ. இவர் ஹுவாங்கின் நெருங்கிய குடும்ப உறவினர் ஆவார். இவர்கள் ஒரு தலைமுறைக்கு முந்தைய உறவினர்கள்… அதாவது, ஹுவாங்கின் தாயார், லிசா சூவின் தாத்தாவின் சகோதரி ஆவார்.
தைவானில் பிறந்த இருவரும் சிறுவயதிலேயே அமெரிக்காவுக்குச் சென்றனர். இருப்பினும், ஒரே குடும்பச் சூழலில் வளரவில்லை. இவர்களுக்குள் சிறு வயதில் எந்த சந்திப்பும் இல்லை என்றும் சொல்லப்படுகிறது. 2024-ம் ஆண்டு ஒரு நேர்காணலில் பேசிய லிசா சூ, "இருவரும் ஒரு தொழில்துறை நிகழ்வில்தான் முதன்முதலில் சந்தித்ததாக" தெரிவித்திருக்கிறார். குடும்ப உறவு இருந்தாலும், தொழில்துறையில் இருவரும் போட்டியாளர்களாகவே செயல்பட்டு வந்துள்ளனர்.
AMD-யின் வளர்ச்சியும் லிசா சூவின் தலைமையும்!
ஜென்சன் ஹுவாங் என்விடியாவைத் தொடங்குவதற்கு முன்பு AMD நிறுவனத்தில் ஒரு நுண்செயலி வடிவமைப்பாளராக பணியாற்றியவர். பல ஆண்டுகளுக்குப் பிறகு, 2012-ல் AMD நிறுவனத்தில் இணைந்த லிசா சூ, 2014-ல் அதன் CEO-வாகப் பொறுப்பேற்றார். அப்போது பல சவால்களை எதிர்கொண்டிருந்த AMD நிறுவனத்தை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு சென்றதில் முக்கிய பங்காற்றியவர் லிசா சூ.
தற்போது AI சிப்கள் மற்றும் தரவு மையச் செயலிகள் தயாரிப்பில் என்விடியாவுக்கு முக்கியப் போட்டியாளராக AMD உருவெடுத்துள்ளது. லிசா சூ தலைமையில் நிறுவனத்தின் வளர்ச்சியும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.
இதற்குச் சான்றாக, 2026-ம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் AMD நிறுவனம் 13.4 பில்லியன் டாலர் வருவாயைப் பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 45 சதவீதம் அதிகமாகும். அந்நிறுவனத்தின் தரவு மையம் பிரிவின் வருவாய் 97 சதவீதம் உயர்ந்து 8.5 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. ஆனாலும் என்விடியா நிறுவனம் சந்தைகளில் முன்னணியில் இருந்து வருகிறது.
இப்போ அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்கிறீர்களா.. இருக்கு தொழில் போட்டியாக இருந்த உறவினர் ஹுவாங் CEO பதிவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த சர்ச்சைகளுக்கு பின் தற்போது நிர்வாக விசாரணை மற்றும் பங்குச் சந்தை சரிவு எனப் பல சவால்களை எதிர்கொள்கிறது Nvidia நிறுவனம். அந்நிறுவனத்தின் பங்கு மதிப்பிலும் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதனால், AI சிப் சந்தையில் என்விடியாவுக்கு மாற்றாக AMD-யை முதலீட்டாளர்கள் கவனிக்க தொடங்கியுள்ளனர்.
இருப்பினும், என்விடியாவின் இடத்தை AMD உடனடியாகப் பிடித்துவிடும் என்று கூற முடியாது. AI சிப் சந்தையில் என்விடியாவுக்கு வலுவான தொழில்நுட்பக் கட்டமைப்பும் வாடிக்கையாளர் ஆதரவும் உள்ளது. அதேநேரத்தில், லிசா சூ தலைமையில் AMD வேகமாக வளர்ந்து வருவதால், என்விடியாவின் தற்போதைய நெருக்கடி அந்நிறுவனத்துக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கும்.
ஒருபுறம் உறவினர்களாகவும், மறுபுறம் உலகின் முன்னணி சிப் நிறுவனங்களின் போட்டியாளர்களாகவும் இருக்கும் ஜென்சன் ஹுவாங் மற்றும் லிசா சூ ஆகியோரின் தொழில் பயணம் இப்போது மீண்டும் உலகத் தொழில்நுட்பத் துறையின் கவனத்தை ஈர்த்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்